• May 18, 2025
  • NewsEditor
  • 0

ரிலேஷன்ஷிப்பில் தம்பதியர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், அபார்ஷன். அதனால் பெண்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் என்னென்ன? – விளக்கிச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் கனிமொழி.

’’அபார்ஷன் பண்ற முடிவோட மகப்பேறு மருத்துவர்களை நாடி வர்ற திருமணமாகாதவர்களைப் போலவே, திருமணமான தம்பதிகளும் வருவாங்க. தங்களுக்கு உருவான முதல் குழந்தையைக் கலைக்கச் சொன்ன தம்பதிகள்கூட இருக்காங்க. கணவர், குடுபத்தாரோட வற்புறுத்தல் காரணமா கருவைக் கலைக்கச் சம்மதிக்கிற பெண்களும் இருக்காங்க.

`அலட்சியம்தான் முக்கியமான காரணம்’

`கருவைக் கலைச்சா பொண்ணோட உயிருக்கு ஆபத்து; முடியாது’னு என் கணவர்கிட்ட சொல்லிடுங்க டாக்டர்’னு பர்சனலா சொல்ற சில பெண்களையும் பார்த்திருக்கேன். அவங்களைப் பொறுத்தவரைக்கும், ஒரு மாத்திரை… உடனே அபார்ஷன்னு அதை ஒரு பீரியட்ஸ்போல நினைச்சிட்டிருப்பாங்க.

கருக்கலைப்பு

அபார்ஷன் முடிவோட வர்ற தம்பதிகள்ல 100-க்கு 10 பேர்தான் எங்க ஆலோசனைக்குப் பிறகு, குழந்தையைப் பெத்துக்கலாம்னு முடிவெடுக்குறாங்க. மீதமுள்ள 90 பேர் அபார்ஷன் பண்ற முடிவுல உறுதியா இருக்காங்க. வேலை, படிப்பு உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை அபார்ஷனுக்கான காரணங்களாகச் சொன்னாலும், சம்பந்தப்பட்டவங்களோட அலட்சியம்தான் இதுக்கு முக்கியமான காரணமா இருக்கு.

ஒரு கரு உருவாகுறதுல ஆண்-பெண் இருவரும் சம்பந்தப்பட்டிருந்தாலும் அதை `அபார்ஷன்’ பண்ணும்போது ஏற்படுற உடல் ரீதியிலான பாதிப்புகளைப் பெண்கள் மட்டுமே அனுபவிக்கிறாங்க. இதை தன் துணையை அபார்ஷனுக்கு வற்புறுத்துற ஒவ்வோர் ஆணும் உணரணும்.

கருவைக் கலைக்கும்போது அது முழுவதுமாக வெளிவராமல் கருப்பையிலேயே தங்கிவிட வாய்ப்பிருக்கு. இதனால் அந்தப் பெண் அடுத்த முறை கருவுறுவதில் பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு அதிக ரத்தபோக்கு, தாங்க முடியாத வலி, கர்ப்பப்பையில் தொற்று ஏற்படலாம். சட்டத்துக்குப் புறம்பான வகையில் கருக்கலைப்பு செய்ய நினைக்கிற சில தவறான மருத்துவர்கள்கிட்டபோய் மாட்டிக்கவும் வாய்ப்பிருக்கு. சரியான, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்யப்படாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்.

pregnancy

வயித்துல வளர்ற குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை, அந்த கருவின் காரணமா தாயோட உயிருக்கு ஆபத்து இருக்கு, குழந்தைக்கு சரிசெய்யவே முடியாத உடல்நல பாதிப்பு இருக்கு என்னும் பட்சத்தில் தாராளமாகக் கருக்கலைப்பை மேற்கொள்ளலாம்.

குழந்தை வேண்டாம், செக்ஸ் மட்டும் போதும்னு முடிவெடுக்குறவங்க அதுக்கான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள்ல கவனமா இருக்கணும். கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்தும் பட்சத்தில் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கலாம். உடலுறவு மேற்கொள்ளும்போது ஆணுறை கிழிந்துவிட்டால் அதன் வழியே விந்து வெளியேறி கரு உருவாக வாய்ப்பிருக்கு. இப்படி ஆகும் பட்சத்தில் கரு உருவாவதைத் தவிர்க்க அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்” என்று முடிக்கிறார் மருத்துவர் கனிமொழி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *