• May 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை எழும்பூர் ராஜேந்திர ஸ்டேடியம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிணைந்து, தங்களது தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, ஒரு டன் கரும்புக்கு ரூபாய் 50,000, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிக்க கூடாது போன்ற கோரிக்கைகளையும் முன் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்

இதில் தமிழ்நாட்டில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இந்த சங்கத்தின் 87 தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இந்த சங்கங்களைச் சேர்ந்த 300 மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கெடுத்து உள்ளனர்.

மேலும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடேசன், “இங்கே தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் 70,000 ஏக்கருக்கு தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. நல்ல விளைச்சல் கிடைத்து 10% வரை லாபம் ஈட்டும் நிலையில் இருந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்

குளிர்பானங்கள் சரிவர விற்பனையாகாததற்கு தர்பூசணி பழ விற்பனைதான் காரணம் என்று குளிர்பான நிறுவன உரிமையாளர்கள் அவர்களாகவே ஒரு முடிவெடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாரை அணுகி ஒரு பொய் பிரச்சாரம் செய்ய பல கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

இதன் அடிப்படையிலேயே தர்பூசணி பழத்தில் சிவப்பு நிற சாயமும், சர்க்கரை பாகும் கலப்பதாகச் சொல்லி விவசாயிகளின் வயிற்றில் அடித்து இருக்கிறார் அந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார்.

இந்த பொய் பிரச்சாரத்தால் தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகள் மீண்டெழ முடியாத வாழ்வியலின் மிகமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர். பத்து ஆண்டுகள் ஆனாலும் சாகுபடிக்கு வாங்கிய கடனை அவர்களால் அடைக்க முடியாது.

தமிழக அரசின் ஊழியர் செய்த தவறால் இன்று அத்தனை விவசாயக் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு தர்பூசணி சாகுபடிக்கு ஏக்கருக்கு 50,000 வழங்க வேண்டும். ஏற்கனவே 10,000 தருவதாக அறிவித்தார்கள்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்

அது போதாது என கோரிக்கை மனு அளித்து இருக்கிறோம். அந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்.

இல்லையெனில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் வெறும் தொடக்கம்தான். இல்லையெனில் மீண்டும் விவசாய சங்கங்கள் ஒன்று கூடும். இது ஒரு போராட்டமாக வெடிக்கும். அதன் பின்விளைவுகளை அரசியல் கட்சிகள் சந்திக்கும்.” எனப் பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *