
முக்கிய குறிப்பு: மருத்துவர்களின் பரிந்துரையின்றி எவ்வித சிகிச்சையையும் மேற்கொள்ளக் கூடாது. அது சட்டத்திற்குப் புறம்பானது.
அமெரிக்காவில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பவர் பிரையன் ஜான்சன் (48). மென்பொருள் நிறுவனங்கள் நடத்திவரும் இவர், விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும் தொடர்ந்து செய்திகளில் இடம் பெறுபவர்.
2023-ம் ஆண்டு இவரின் தந்தை ரிச்சர்ட் ஜான்சன் (72) உடலிலிருந்து பிளாஸ்மாக்களை நீக்கிவிட்டு, தன்னுடைய பிளாஸ்மாக்களை அவருடைய தந்தையின் உடலுக்கு மாற்றினார். இதன் மூலம், தந்தையின் முதுமையை 25 வருடங்கள் தள்ளிப்போட முடியும் என்றும், அதற்காகத் தினமும் உடற்பயிற்சி, 111 மருந்துகள், 8 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கம் ஆகியவை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றெல்லாம் பகிர்ந்திருந்தார்.
கடந்த ஆண்டு அவருடைய உடலிலிருந்த எல்லா பிளாஸ்மாக்களையும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அல்புமின் என்ற வேறொரு புரதத்தை தன் உடலில் ஏற்றி மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் சிகிச்சை மேற்கொண்டார். இந்த ஆண்டும் அதே ஷபோல வேறொருவரின் பிளாஸ்மாவிலிருந்து அல்புமின் புரதத்தைத் தன் உடலில் மாற்றியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “என் உடலில் இருந்து எல்லா பிளாஸ்மாவையும் அகற்றிவிட்டு வேறொருவரின் பிளாஸ்மாவை மாற்றியிருக்கிறேன். என் மருத்துவர் ‘இதுவரை நான் பார்த்ததிலேயே மிகவும் சுத்தமான பிளாஸ்மா இது’ எனக் கூறினார். இது பரிசோதனையின் இரண்டாம் கட்டமாகும். முதல்கட்ட சிகிச்சையில் என் மகன் எனக்கு பிளாஸ்மா கொடுத்தான்.
மனித உடலுக்கு கழிவுப் பொருட்களை அகற்றும் இயற்கையான திறன் உள்ளது. ஆனால் சில நேரங்களில் நமது நவீன வாழ்க்கையின் சுமைகளையோ அல்லது சில வகையான நச்சுக்களையோ நமது உடலால் சமாளிக்க முடியாது. உடலில் இருந்து அனைத்து பிளாஸ்மாவையும் அகற்றும்போது என்ன நடக்கும்? உண்மையில் ஒன்றும் ஆகாது. பிளாஸ்மா நீக்கியதற்கு பிறகு நான் வழக்கம்போலவே செயல்படுகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.