• May 18, 2025
  • NewsEditor
  • 0

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோதி சொந்தமாக Travel With Jo என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்தியாவில் உளவு பார்த்து முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக ஜோதியுடன் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோதி தனது யூடியூப் சேனலில் பாகிஸ்தானுக்கு சென்று வந்த வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதோடு இந்தோனேசியா மற்றும் சீனாவிற்கும் சென்று வந்துள்ளார். ஆனால் பாகிஸ்தானுக்குத்தான் பல முறை சென்று வந்திருந்தார். அதோடு டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த இப்தார் பார்ட்டியில் ஜோதி கலந்து கொண்டு தூதரக அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் அவரது யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. இப்தார் பார்ட்டியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சன்-உர்-ரஹிம் என்பவருடன் மிகவும் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்தார்.

தூதரக அதிகாரியுடன் ஜோதி

ஜோதியை ரஹீம் மற்ற அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து யூடியூப் சேனல் நடத்துவதாக குறிப்பிட்டார். உடனே ரஹீமை தனது வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அங்கிருந்த அதிகாரிகள் ஜோதியிடம் பாகிஸ்தானிற்கு வந்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, விசா கிடைத்தவுடன் நாம் ஒன்றாக செல்வோம் என்று அவர்களிடம் குறிப்பிட்டார். அதோடு ரஹீம் மனைவியுடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் இதற்கு முன்பு பல முறை சந்தித்து பேசிக்கொண்டது போன்று மிகவும் நெருக்கமாக பேசிக்கொண்டனர். அங்கு நடந்த அனைத்தையும் வீடியோவாக்கி அதனை ஜோதி தனது சேனலில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் தான் இதற்கு முன்பு பல முறை பாகிஸ்தான் தூதரகத்திற்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்தார் விருந்தில் பரிமாறப்பட்ட உணவு மிகவும் சிறப்பாக இருந்ததாக ஜோதி குறிப்பிட்டார். இப்தார் பார்ட்டியில் சீன அதிகாரி ஒருவரை சந்தித்து தனக்கு உங்களது நாட்டிற்கு வர விசா கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஹரியானாவின் ஹிசார் என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட ஜோதியிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் என காவல்துறையினர் தெரிவித்திருப்பது, பாகிஸ்தான் சென்ற போது அங்குள்ள பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசியை ஒப்புக்கொண்டார். அதோடு தொடர்ந்து அவர்களோடு தொடர்பில் இருந்து கொண்டு இந்தியாவில் இருந்து முக்கிய தகவல்களை உளவு பார்த்து அவர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளதும் தெரிய வந்தது.

பாகிஸ்தான் சென்ற போது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகன் மர்யம் நவாஸை சந்தித்து பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதி பகிர்ந்துள்ளார். அட்டாரி, வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்று லாகூர் உட்பட முக்கிய இடங்களுக்கு சென்ற வீடியோக்களை ஜோதி தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அதோடு பாகிஸ்தான் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவருடன் நெருங்கிய உறவில் இருந்துள்ள ஜோதி அவருடன் பாலி தீவிற்கு சென்று வந்துள்ளார். ஜோதி தனது மொபைல் போனில் பாகிஸ்தான் அதிகாரிகளின் பெயர்களை இந்து பெயர்களில் பதிவு செய்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜோதி

பாகிஸ்தானுக்கு மட்டும் மூன்று முறை சென்று வந்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யுடன் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஜோதியின் தந்தை ஹரீஷ் கூறுகையில், `என் மகள் அனைத்து வகையான அனுமதியையும் பெற்றுதான் பாகிஸ்தானுக்கு சென்றார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *