
கரூர், செம்மடை அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி இறங்கியது.
இதில் எதிரில் வந்த சுற்றுலா வாகனத்தில் (வேன்) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 19-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பெயரில், கரூர் தீயணைப்பு நிலைய மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாங்கல் காவல் நிலைய போலீஸார் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த வேர் ஓட்டுநர் சசிகுமார் (வயது 55), அருண் திருப்பதி (வயது 43), அஸ்வின் காமாட்சி (வயது 12), எழில் தர்ஷனா(வயது 10) உட்பட நான்கு பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதனைத்தொடர்ந்து, போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும், உயிரிழந்தவர்கள் உடலை உடற்கூராய்வு மேற்கொள்வதற்காகக் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கும் அனுப்பி வைத்துவிட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த ஹேமவர்ஷினி (வயது 20) என்ற இளம்பெண்ணும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
மேலும், மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 19 பேரை தி.மு.க-வைச் சேர்ந்த கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியாகப் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் தரமான முறையில் அளிக்கப்பட்டு வருகின்றன.
கரூர் மாவட்ட ஆட்சியரும், கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோரும் தனிக்கவனம் கொண்டு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கும் வகையில் ஒருவரை மட்டும் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சை தேவை என்றால் தமிழக அரசு செய்வதற்குத் தயாராக உள்ளது” என்றார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“இந்த விபத்தில் உயிரிழந்துள்ளவர்களுக்கு அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
சொகுசு பேருந்து, டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனம் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb