
இன்பாவின் (சூரி) அக்கா கிரிஜாவுக்கு (சுவாசிகா) திருமணமாகி 10 ஆண்டு களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு ஒட்டுமொத்த அன்பையும் கொடுத்து, இன்பாவே வளர்க்கிறார். இந்தச் சூழலில் இன்பாவுக்கு ரேகாவுடன் (ஐஸ்வர்யா லட்சுமி) திருமணம் ஆகிறது. ஆனால், எப்போதும் மாமாவுடனே ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையால் இன்பாவுக்கும் ரேகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் இன்பாவின் மனைவிக்கும் கிரிஜாவுக்கும் உறவு முறிகிறது. இறுதியில் விரிசல் சரியாகி உறவுகள் சேர்கிறதா இல்லையா என்பதுதான் கதை.
இதன் கதையை நடிகர் சூரி எழுதி இருக்கிறார். தாய்மாமனுக்கும் மருமகனுக்குமான ஆத்மார்த்தமான அன்பை மையப்படுத்தியும் அதற்குள் குடும்ப சென்டிமென்டைத் தூக்கலாகவும் கலந்து எழுதிய கதையை இயல்பாகப் படமாக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். குடும்ப உறவுகளின் நெருக்கம் அருகி வரும்இந்தக் காலகட்டத்தின், அதன் தேவைமற்றும் அவசியத்தை அழுத்தமாகப் பேசுகிறது, படம்.