
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் குறித்து அவரின் சொந்தக் கிராமமான `சேவூர் மக்கள்’ என்ற பெயரில், கடந்த 2022-ம் வருடமே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 12 பக்கப் புகார் கடிதம் பறந்தது.
அதில், “2016 மற்றும் 2021 தேர்தல்களின்போது, வேட்பு மனுக்களுடன் சேவூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த சொத்து மதிப்பினை ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மைத் தெரியவரும். ராமச்சந்திரனின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்திருக்கிறது’’ என்கிற குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தன.
அதையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரின் மனைவி மணிமேகலை, இரு மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிந்திருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் ஆரணியில் இருக்கின்ற சேவூர் ராமச்சந்திரனின் வீடு மற்றும் அவரின் இரு மகன்கள் வசித்துவரும் வீடுகளிலும் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்
ரெய்டு நடப்பதை அறிந்த அ.தி.மு.க-வினர் ராமச்சந்திரன் வீட்டு முன்பு குவிந்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராகவும், ஆளும்கட்சியான தி.மு.க-வைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்த சோதனைக் குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாவது, “அன்புச் சகோதரர் சேவூர் ராமச்சந்திரனை குறிவைத்து ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ரெய்டுகள் ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க-வின் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியிருக்கிறார்.
டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து மக்களிடம் எப்போது மௌனம் கலைக்கப் போகிறார்? பின்னப்பட்ட புனைக்கதைகளால் போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அ.தி.மு.க இயக்கத்தை அசைத்துக்கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம்’’ எனக் கூறியிருக்கிறார்.