
ஆரணி: அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அவரது குடும்பத்தினர் கடந்த ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆரணியில் உள்ள சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். இவர், கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.