• May 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை அண்ணாநகர், பி பிளாக், 17-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (69). இவர், வைர கல், நகைகளை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகரின் நண்பர் சுப்பிரமணியம் என்பவர் மூலம் சிவகாசியைச் சேர்ந்த வன்னியராஜன் என்பவரிடமிருந்து 23 கோடி ரூபாய் மதிப்பிலான 17.4 கேரட் வைர கல் ஒன்றை சந்திரசேகர் வாங்கினார். அதை விற்க சந்திரசேகர் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் சந்திரசேகரின் வளர்ப்பு மகள் ஜானகி அபி மூலம் பழக்கமான தரகர் ஆரோக்கியராஜ் வைர கல்லை விற்க ஏற்பாடு செய்தார். அந்த வகையில் தரகர்கள் ராகுல், சதீம், விஜய், ஜான் ஆகியோர் சந்திரசேகரிடம் வைர கல்லை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

பின்னர் கடந்த 4.5.2025-ம் தேதி வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஹோட்டலில் வைத்து வைர கல்லை நேரில் பார்த்துவிட்டு விற்க சந்திரசேகரும் தரகர்களும் முடிவு செய்தனர்.

அதன்படி சந்திரசேகர் வைர கல்லை எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்று தரகர்களைச் சந்தித்தார். அப்போது ஹோட்டலில் அறை எண் 636-ல் வைர கல் விற்பது தொடர்பான பிசினஸ் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தச் சமயத்தில் சந்திரசேகரை கயிற்றால் கட்டிப் போட்டு விட்டு வைர கல்லை எடுத்துக் கொண்டு ஒரு கும்பல் தப்பியது. இதையடுத்து வைர வியாபாரி சந்திரசேகர், கடந்த 4-ம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து வைர கல்லை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற கும்பலைத் தேடிவந்தனர்.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கார் மூலம் சென்ற கொள்ளை கும்பல், தூத்துக்குடி போலீஸாரிடம் சிக்கியது.

வைரக்கல்லை கொள்ளையடித்த பரமக்குடியை சேர்ந்த அருண் பாண்டியராஜன், சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த ஜான் லாயிட், வளசரவாக்கத்தை சேர்ந்த விஜய், திருவேற்காட்டையை சேர்ந்த ரத்தீஷ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வைர கல்லையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீஸார் தேடிவருகிறார்கள். இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வைர வியாபாரி சந்திரசேகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வைர கல் ஒரிஜினல் அல்ல, டூப்ளிக்கேட் என குற்றம் சாட்டியிருக்கிறார். அதனால் என்னிடமிருந்து கொள்ளையடித்த ஒரிஜினல் வைர கல்லை மீட்டு தரும்படி குறிப்பிட்டிருந்தது. இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வைர கடத்தல் கும்பலைப் பிடித்த போலீஸ் டீம்

வைர வியாபாரி சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக உயரதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்த வைர கல்லை வடபழனி போலீஸார் மாற்றிவிட்டதாக ஒரு தகவல் பரவியது. அந்தத் தகவலை வடபழனி போலீஸார் மறுத்தத்தோடு கொள்ளையர்களிடமிருந்து வைர கல்லை மீட்ட தூத்துக்குடி போலீஸார் எங்களிடம் அதை ஒப்படைத்தனர். அதை நீதிமன்றத்தில் நாங்கள் ஒப்படைத்துள்ளோம். வைர கல்லை நாங்கள் ஏன் மாற்ற வேண்டும் என கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இதுகுறித்து கமிஷனர் அலுவலக உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,“ வைர வியாபாரி சந்திரசேகர் சொல்வது உண்மையா அல்லது பொய்யா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரசேகருக்கு இந்த வைரக்கல்லை கொடுத்த சிவகாசியை சேர்ந்த வன்னியராஜனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் அவரிடம் விசாரித்தால் உண்மை தெரியும் என்பதால் அவரிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் யார் மீது தவறு என்றாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *