
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனவரி மாதம் பதவியேற்றுக் கொண்டார். டிரம்ப்பின் இந்த 2.0 ஆட்சி முறை இதுவரை இல்லாத அளவிற்கு வேறொரு அதிரடி கோணத்தில் இருக்கும் என்று கணித்து போன்றே பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், 4 நாள்கள் அரசு முறை பயணமாக டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்ற டிரம்ப் தனி விமானம் மூலம் ரியாத் விமானநிலையம் சென்றடைந்தார்.
அங்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் அரசு சார்பில் வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் சவுதி நாட்டு ஆண்கள் இசைக்கருவிகளை வாசிக்க , அந்நாட்டு பெண்கள் தலைமுடியை அவிழ்த்து விட்டு இசை தாளத்திற்கு ஏற்ப சுழற்றி விட்டு பாடல் பாடி ஆடுகின்றனர். இது பார்ப்பதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு கிராமப்புரங்களில் பெண்கள் ஒப்பாரி வைத்து பாடும் போதும் இதே போன்று தலைமுடியை அவிழ்த்து சுழற்றுவது போன்றே இருக்கிறது.
இப்படி தலைமுடியை அவிழ்த்து சுழற்றுவிட்டு பாடுவது சவுதி அரேபியாவின் பாரம்பரிய நடன முறையில் ஒன்று. இதற்கு அல்-அய்யாலா எனப்பெயர்.
அல்-அய்யாலா என்பது பாரம்பரிய உடை அணிந்து ஆண்கள் இசையை வாசிக்க, பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து அந்த இசை தாளத்திற்கு ஏற்ப தலைமுடியை சுழற்றி பாடலுக்கு ஏற்ப ஆடுவதாகும். இந்த நடனம் பொதுவாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளிலும் கொண்டாட்டங்கள் மற்றும் திருமணங்களின் போது பொதுவாக நிகழ்த்தப்படுகிறது.



அரசு முறை பயணமாக தங்கள் நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பை , சவுதி நாட்டு பாரம்பரிய கலாச்சார முறையை பறைச்சாற்றி வரவேற்கும் விதமாக இந்த அல்-அய்யாலா நடனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
வரவேற்பை ஏற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் எவ்வளவு அழகான நகரம் இது . எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இங்கு வந்ததில் மிகிழ்ச்சி என பேசியிருந்தார்.