
2025-ம் ஆண்டின் முதல் பாதிக்குள் அஜித் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருந்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியானது.
அதைத் தொடர்ந்து, ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகியது.
தற்போது அஜித்தின் கைவசமுள்ள திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
‘குட் பேட் அக்லி’ படத்தின் இறுதிக் காட்சியில், அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் இயக்கவிருப்பதாகக் குறிப்பிடும் வகையில் ஒரு சிறிய குறியீடும் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதுகுறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் தனது அடுத்த திரைப்படம் குறித்து அஜித் பேசியுள்ளார்.

அஜித் பேசுகையில், “அதிர்ஷ்டவசமாக, எனது அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான திரைப்படத் திட்டங்களைப் புரிந்துகொண்ட இயக்குநர்களும் தயாரிப்பாளரும் கிடைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தரமான திரைப்படங்களைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.
எனது அடுத்த திரைப்படத்தை இந்த நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அந்தத் திரைப்படம் வெளியாகும் என நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.