
78-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் நடைபெறும் இந்த கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு பல வரலாற்று சிறப்புகளும் இருக்கின்றன.
ஒரு திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டாலே அத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உயர்ந்துவிடும்.
சொல்லப்போனால், கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு படத்தை திரையிடுவதை சில இயக்குநர்கள் படத்திற்கு கிடைக்கும் பெருமையாகவும் கருதுவார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக கடந்தாண்டு வெளியான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தை குறிப்பிடலாம். கடந்தாண்டு இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘கிரான்ட் பிரிக்ஸ்’ என்ற உயரிய விருதை வென்றிருந்தது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கிடைத்த இப்படியான அங்கீகாரம் படத்தின் வெளியீட்டிற்கும் மிகவும் உதவியதாக இருந்ததாக அப்படத்தின் இயக்குநர் பயால் கபாடியா குறிப்பிட்டிருக்கிறார்.
இதோ கடந்தாண்டு உயரிய விருதை வென்று உலகமெங்கும் கவனத்தை ஈர்த்த பயால் கபாடியா இந்தாண்டு ஜூரிகளில் ஒருவராக வந்திருக்கிறார்.
இந்த திரைப்பட விழா குறித்தான வரலாற்றையும், கேன்ஸ் திரைப்பட விழாவில் இதுவரை நடந்த முக்கியமான விஷயங்கள் மற்றும் கவனம் ஈர்த்த விஷயங்கள் பற்றியும் இக்கட்டுரையில் பார்க்கலாம்.!
1939-ம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கப்பட்டது. அப்போதைய பிரெஞ்சு கல்வி அமைச்சர் ஜீன் சே, வரலாற்றாசிரியர் பிலிஃப் எர்லாங்கர் மற்றும் சினிமா பத்திரிகையாளர் ராபர்ட் பேவரே ஆகியோர்தான் இணைந்து முதன் முதலில் ஒரு சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவதற்கு திட்டமிட்டார்கள்.

அப்போது வரை முக்கியமான சர்வதேச திரைப்பட விழாவாக இத்தாலியில் நடத்தப்பட்ட வெனிஸ் திரைப்பட விழாவுக்கு நிகராக பிரான்ஸிலும் நடத்த வேண்டும் என திட்டமிட்டுதான் தொடங்கினார்கள்.
பிரான்ஸில் ஒரு முக்கியமான இடத்தை தேர்வு செய்து அங்கு இந்த திரைப்பட விழாவை நடத்துவதற்குதான் முதலில் ஆயத்தமானார்கள். அதற்காக பல இடங்களுக்கும் விசிட் அடித்து திரைப்பட விழாவுக்கான வேலைகளையும் கவனித்திருக்கிறார்கள்.
அப்படி திட்டமிட்டு தொடங்கும் நேரத்தில்தான் இரண்டாம் உலகப் போர் இவர்களுக்கு ஒரு தடையாக வந்தது. எப்படியாவது ஒரு சர்வதேச திரைப்பட விழாவை நடத்திவிட வேண்டும் என்பதை குறிக்கோளாக பிரான்ஸ் இருந்திருக்கிறது.
சரியாக இரண்டாம் உலகப் போர் முடிந்த அடுத்தாண்டே முதல் கேன்ஸ் திரைப்பட விழாவை நடத்துவதற்கு தயாரானார்கள். திட்டமிட்டதை போலவே, 1946-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கேன்ஸ் திரைப்பட விழாவை நடத்திக் காட்டியது பிரான்ஸ்.

அதன் பிறகு 1948-ம் ஆண்டும், 1950-ம் ஆண்டும் பொருளாதார சிக்கல் காரணமாக இந்த திரைப்பட விழாவை பிரான்ஸ் நடத்தவில்லை.
1950-க்குப் பிறகு பிரான்ஸ் விரும்பிய விஷயமும் மெல்ல நடக்கத் தொடங்கியது. 1950-க்குப் பிறகு உலகமெங்கும் உள்ள சினிமா ஆர்வலர்களின் கவனத்தையும் பத்திரிகைகளின் கவனத்தையும் இந்த திரைப்பட விழா ஈர்த்தது.
பிறகு இந்த திரைப்பட விழாவின் கோணங்களும் முழுமையாக வளரத் தொடங்கியது. இன்று சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற குவென்டின் டரான்டினோ:
47-வது கேன்ஸ் திரைப்பட விழா 1994-ம் ஆண்டு நடைபெற்றது. அந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘Palme d’Or’ விருது டரான்டினோவின் ‘பல்ப் ஃபிக்ஷன்’ படத்திற்கு வழங்கப்பட்டது.
இன்று வரை நான்-லீனியர் திரைக்கதை அம்சம் கொண்ட பல திரைப்படங்களுக்கும் இன்ஸ்பிரேஷன் ‘பல்ப் ஃபிக்ஷன்’ திரைப்படம்தான். அத்திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும், அங்கீகாரமும் இந்த திரைப்பட விழாவில் கிடைத்தது.

அதே சமயம், இத்திரைப்படம் சிலருக்கு பிடிக்காமல் திரையிடல் சமயத்திலேயே வெளிநடப்பு செய்திருக்கின்றனர். திரையிடலின்போதே பலரும் கூச்சலிட்டிருக்கிறார்கள்.
இப்படியான விமர்சனங்களுக்குப் பிறகும் இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய விருதை வென்றது. இந்த விஷயமும் அப்போது பெரிதளவில் பேசப்பட்டது.
இதையெல்லாம் தாண்டி அந்தாண்டு ஜூரி குழுவின் தலைவராக இருந்த இயக்குநர் க்ளின்ட் ஈஸ்ட்வுட் மற்ற ஜூரிகளின் முடிவுகளையும் கவனித்து டரான்டினோவின் திறமையை அங்கீகரித்தார்.
1993-ம் ஆண்டிற்குப் பிறகு பெரிதளவில் பொது நிகழ்வுகளில் மைக்கேல் ஜாக்சன் பங்கேற்பதை நிறுத்திவிட்டார். அப்போது அவர் பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்தும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.
அப்படியான ஒரு நேரத்தில்தான் தன்னுடைய குறும்படத்தின் ப்ரோமோஷனுக்காக 50-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

இதுவரை இவர் பங்கேற்ற முதல் மற்றும் கடைசி கேன்ஸ் திரைப்பட விழா இதுதான்.
நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழா மாதிரியான ஒரு உயரிய விழாவில் மைக்கேல் ஜாக்சன் பங்கேற்ற விஷயம் அப்போது டாக் ஆஃப் தி டவுனாக மாறியது.
எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டுகள் நடக்கத்தான் செய்யும். ஆனால், கேன்ஸ் திரைப்பட விழா மாதிரியான பலத்த பாதுகாப்பைக் கொண்ட திரைப்பட விழாவிலும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது.
ஆம், 2013-ம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து திருட்டுகள் நிகழ்ந்திருக்கிறது.

அப்போது இந்த திருட்டுச் சம்பவம் ஒரு புறம் பேசு பொருளாக இருக்கும் சூழலில் மற்றொரு புறம் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து பரபரப்பை உண்டாக்கியது.
2013-ம் ஆண்டு மே மாதம் கேன்ஸ் திரைப்பட விழா நடந்தது.
மே மாதம் 17-ம் தேதி, அருகிலிருந்த ஹோட்டல்களில் இந்த நிகழ்வுக்கு பங்கேற்பதற்காக வந்திருந்தவர்களின் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு நகையும், மே 21-ம் தேதி 2.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு வைர நெக்லஸும் அப்போது களவு போய் பரபரப்பாக பேசப்பட்டது.
இதைத் தாண்டி இதே கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் கிறிஸ்டோஃப் வால்ட்ஸ் ஒரு தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேர்காணல் லைவாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில் கூட்டத்தில் இருந்த ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.
பரபரப்பை ஏற்படுத்திய அவரிடமிருந்து டம்மி வெடிகுண்டு மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது இத்தனை வருடங்கள் கடந்தும் இன்றும் பலர் நினைவு கூர்கிறார்கள்.
கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு இந்திய திரைப் பிரபலங்கள் பலரும் வருடந்தோறும் செல்வார்கள். அப்படி கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தவறாமல் வருடந்தோறும் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்துக் கொள்வார்.
ஐஸ்வர்யா ராய் கடந்த 2002-ம் ஆண்டு முதன் முதலாக ஷாருக்கானுடன் நடித்திருந்த ‘தேவதாஸ்’ படத்தின் திரையிடலுக்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

அன்று முதல் இன்று வரை தவறாமல் வருடந்தோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவில் பிரபலமானது. ஒவ்வொரு வருடமும் பல வகையிலான் உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட்டுக்கு வருகை தருவார் ஐஸ்வர்யா ராய்.
வருடந்தோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பது தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய், “நான் இங்கு பங்கேற்பது எனக்காக மட்டுமே கிடையாது. நான் இங்கு எனது நாட்டை, எனது சினிமாவை, பெண்களை முன்னிறுத்தி வருகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஓ.டி.டி இப்போது பெரிதளவிலான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஒரு திரைப்படத்தின் பிசினஸிலும் ஓ.டி.டி தளங்கள் முக்கியமானதொரு பங்கு வகிக்கிறது.
ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 4 வாரங்கள் அல்லது 8 வாரங்களுக்குப் பிறகு என அந்தந்த மாநிலங்களின் திட்டங்களுக்கேற்ப திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு படத்தை ஓ.டி.டி தளங்களில் வெளியிடுவார்கள்.

பிரான்ஸ் நாட்டின் விதிகளின்படி அவர்களுடைய நாட்டின் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மூன்றாண்டுகளுக்கு பிரான்ஸில் எந்த ஓ.டி.டி தளத்திலும் வெளியாகக்கூடாது.
இந்த விஷயத்தில்தான் நெட்ப்ளிக்ஸுக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கும் மோதல் ஏற்பட்டது.
கேன்ஸ் திரைப்பட விழாவின் குழு திரைப்படங்களை திரையரங்குகளில் மட்டுமே கண்டு அனுபவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
2018-லிருந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் அனைத்து திரைப்படங்களும் பிரான்ஸ் நாட்டின் திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வந்தது.
2017-ல் நெட்ப்ளிக்ஸ் தன்னுடைய இரண்டு திரைப்படங்களை கேன்ஸ் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கு அனுப்பியிருக்கிறது. அந்த இரண்டு திரைப்படங்களுமே திரையரங்குகளில் வெளியாகவில்லை.

பிரெஞ்சு சினிமா, இது பிரான்ஸ் நாட்டின் திரையரங்க விதியை மீறும் செயல் என அப்போது எதிர்ப்பும் தெரிவித்திருந்தது. 2018-ல் இந்த விதியை மாற்றியது. பிரான்ஸில் திரையரங்க வெளியீட்டிற்கு வந்தால் மட்டுமே போட்டி பிரிவுகளில் கலந்துகொள்ள முடியும் என கேன்ஸ் திரைப்பட விழா விதியை மாற்றியமைத்தது.
இதன் பிறகு நெட்ப்ளிக்ஸ் தன்னுடைய எந்த திரைப்படத்தையும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பவில்லை.
இது போல கேன்ஸ் திரைப்பட விழாவில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்கள் குறித்து நீங்கள் அறிந்திருந்தால், அதனை கமென்ட் செய்யுங்க சினிமா காதலர்களே..!