
நடப்பு ஐ.பி.எல் சீசனில், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ள அணியாக ஆர்.சி.பி இருக்கிறது.
11 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கேப்டனாக ரஜத் பட்டிதார் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக விராட் கோலி, முன்னாள் கேப்டன் என்ற வகையிலும், சீனியர் பேட்ஸ்மேன் என்ற வகையிலும் பட்டிதாருக்குப் பக்க பலமாக இருக்கிறார்.
அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவுடன் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் 505 ரன்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார் கோலி.
இந்த நிலையில், 2022 மெகா ஏலத்தில் ஆர்.சி.பி தன்னை எடுப்பதாகக் கூறி எடுக்காமல் விட்டதால் ஏமாற்றமடைந்ததை ஆர்.சி.பி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பட்டிதார் பகிர்ந்திருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் பட்டிதார், “2022-ம் ஆண்டு ஐ.பி.எல் சீசனுக்கான மெகா ஏலத்துக்கு முன்பாக ஆர்.சி.பி அணியிடமிருந்து, “நீங்கள் தயாராக இருங்கள். நாங்கள் உங்களை எடுப்போம்” என்று எனக்கு மெசேஜ் வந்தது.
ஆர்.சி.பி-க்காக இன்னொருமுறை ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என்று கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால், மெகா ஏலத்தில் அவர்கள் என்னை எடுக்கவில்லை. கொஞ்சம் சோகமானேன்.
அதையடுத்து, இந்தூரில் உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கினேன். பிறகு, ஆர்.சி.பி அணியில் காயமடைந்த லுவ்னித் சிசோடியாவுக்கு மாற்று வீரராக உங்களைத் தேர்வு செய்கிறோம் என்று எனக்கு அழைப்பு வந்தது.
வெளிப்படையாகச் சொன்னால், மாற்றுவீரராகச் செல்ல நான் விரும்பவில்லை. ஏனெனில், விளையாட வாய்ப்பு கிடைக்காது என்று எனக்குத் தெரியும்.
டக்அவுட்டில் உட்கார்ந்திருக்க எப்போதும் நான் விரும்பியதில்லை. கொஞ்சம் கோபமாக இருந்தேன். பிறகு இயல்புநிலைக்குத் திரும்பினேன்.” என்று கூறினார்.

கோலி போன்ற சீனியர் வீரர் அணியில் இருக்கையில் தனக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டபோது எழுந்த அழுத்தம் தொடர்பாகப் பேசிய பட்டிதார், “அணியில் நிறைய சீனியர் வீரர்கள் இருக்கின்றனர் என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. கோலி மிகப்பெரிய வீரர், அவரின் கீழ் எப்படி அதைச் செய்ய முடியும்.
இருப்பினும், கேப்டன்சி விஷயத்தில் எனக்கு அவர் எவ்வளவு ஆதரவாக இருந்தார் என்று எனக்குத் தெரியும். எனக்கு இது கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு. எனவே, அவரிடமிருந்து முடிந்தவரைக் கற்றுக்கொள்வேன்.
ஏனெனில், ஒரு பேட்ஸ்மேனாகவும், தனிநபராகவும், கேப்டனாகவும் ஒவ்வொரு விஷயத்திலும் அவரிடம் இருக்குமளவுக்கு அனுபவமும், சிந்தனைகளும் வேறு யாரிடமும் இல்லை” என்று தெரிவித்தார்.
கோலியின் கைகளால் கேப்டன்சிக்கான கேடயத்தைப் பெற்ற தருணம் குறித்து பேசிய பட்டிதார், “டிவி-யில் கோலியைப் பார்க்கத் தொடங்கியதிலிருந்து, ஐபிஎல், இந்திய அணியில் அவரைப் பார்த்திருக்கிறேன்.
பல ஆண்டுகளாக அவர் கவனித்து வந்த கேப்டன்சிக்கான கேடயத்தைத் தனது கைகளாலேயே என்னிடம் அவர் கொடுத்தார். அப்போது, எப்படி அதை வாங்குவது என்று கொஞ்சம் கவலையாக இருந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமையாக நின்றேன். அவர்தான், இதைப் பிடித்துக்கொள் என்று சொன்னார். நானும் அதைப் பெற்றுக்கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, “நீ இதற்குத் தகுதியான நபர். நீதான் இதைச் சம்பாதித்திருக்கிறாய்” என்று கூறினார்.
அதன்பிறகுக் கொஞ்சம் நன்றாக உணர்ந்தேன். அது எனக்கு ஸ்பெஷலான தருணம். முடிந்தவரை அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…