
சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டிய நிலையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரின் வீடு உட்பட சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றும் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வீடு அருகே கிழித்து வீசப்பட்டநிலையில் கிடந்த சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோன், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு, அலுவலகங்கள், திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் அக்கார்டு மதுபான உற்பத்தி நிறுவனம், எஸ்என்ஜே,கால்ஸ், எம்ஜிஎம் உள்ளிட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள், அதன் ஆலைகளில் அமலாக்கத் துறை கடந்த மார்ச் மாதம் தீவிர சோதனை நடத்தியது.