• May 16, 2025
  • NewsEditor
  • 0

எல்லாச் சூழலிலும் அறவியல் சிந்தனைகளை இலக்கியப் பெருந்திரட்டுக்குள் கொண்டுவர முடியுமா? எந்தவொரு நல்ல கவிதைக்குள்ளும் அரசியல் சிந்தனைகள் தொற்றிக்கொண்டு நிற்கின்றன என்றாலும் அரசியலை ஆராதிக்கும் ஒரு பெண் புறவயமான உலகில் பயணித்துக்கொண்டே கவிதையோடு இருப்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்றெண்ணியபோது அதற்கு முன்னோடியாக விளங்கிய சரோஜினி நாயுடு நினைவுக்கு வந்தார். பெண்களின் உலகம், பெண்ணிய வாழ்வியல் முறை, கலைக்கான கோட்பாடுகள் இவற்றுடன் அரசியல் தன்மையும் இன்னொரு லேயராக ஏறிக்கொள்ளும்போது மானுட முகங்களை, நுட்பமான உணர்வுகளை மனம் தானாக வரைந்துகொள்கிறது. உடல் மொழிகளைக் கடந்து தன்னிலைக் கவிதைகளை எழுதுவதற்குக் கூடப் பெண்களுக்குத் தேவையான சுதந்திரம் இருந்திடாத காலக்கட்டத்தில் தன்னிலையையும் அரசியலையும் முன்னிறுத்தி, அநீதிகளை விமர்சித்துப் புரட்சிகரமான கருத்துகளை அறைகூவியவர்களுள் முக்கியமானவர் சரோஜினி நாயுடு.

சரோஜினி நாயுடு

அப்படியாக மொழியைத் துருவித் துருவி எழுதப்பட்ட கவிதைகள் தன்னிலையை விட்டு நகர்ந்து பின் தன்னைச் சூழ்ந்திருக்கும் கூட்டுச் சமூகத்தின் தாக்கங்கள் இவரது கவிதைக்குள் சிக்கிக்கொண்டு கைத்தடிகளாக விளங்கின. இதை நினைத்துக்கொண்டே ‘பல்லக்குச் சுமப்பவர்கள்’ கவிதையை நான் முதன் முதலில் படித்தபோது மொழியின் மூலப்பொருள் சமூக அறவியலைப் பேசும் இடங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. மேட்டுக்குடியினரைப் பல்லக்கில் உட்கார வைத்து ஊர்வலமாய்த் தெருவில் தூக்கிச்செல்வதுபோல் திரைப்படங்களில் வரும் காட்சிகள் கண்முன்னே வந்து நின்றன.

மெல்லத் தூக்கிச் செல்கிறோம்

காற்றின் இசையில் மிதக்கும்

ஒரு மலரைப் போல

அவள் துள்ளி அசைகிறாள்

பல்லக்கைத் தாங்கிச்செல்பவர்கள் மணமகளைப் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் செல்வதுபோல் தோள்களில் தூக்கிக்கொண்டு தெருவில் நடந்து செல்கிறார்கள். கீழ்த்தட்டு மக்களின் வாழ்வியலை இசைமைத் தன்மையுடன் நடைமுறையோடு பின்னி எழுதப்பட்ட வரிகள். மொழியும் இசையும் பல்லக்கில் அமர்ந்து ஒரு மலரைப் போல மெல்ல அசைந்து செல்கிறது. இது பல்லக்குச் சுமப்பவர்களின் நேர்த்தியான உணர்வுகளை மட்டுமல்ல, அவர்கள் செய்யும் வேலையின் மீதிருக்கும் கரிசனத்தையும் கண்ணியத்தையும் குறியீடாகக் காட்டுகிறது.

சரோஜினி நாயுடு

அரசியல் கருத்துகளைத் தாண்டி மரபையும் அழகியலையும் மரியாதையுணர்வோடு வெளிப்படுத்தத் தெரிந்தவர் சரோஜினி. உள்ளே அமர்ந்திருப்பவள் நீரோடையில் மிதக்கும் நுரையின் மீது ஒரு பறவையைப் போல் தொட்டுச் சிலுப்பிச்செல்கிறாள். கனவில் வரும் சிரிப்பினைப் போல் காற்றில் மிதக்கிறாள். பறவையைப் போல் மென்மையாக இருக்கும் அவளைத் தூக்கிச் செல்லும்போது அவர்களுக்குப் பல்லக்கின் கனம் தெரியவில்லை. அவள் அவ்வளவு மிருதுவாக இருக்கிறாள். நாங்கள் மகிழ்வுடன் அவளைத் தூக்கிச் செல்கிறோம் என்கிறார்கள்.

ஆக, சுமப்பவர்களின் தோள்கள் சுமப்பதன் வலியையும் அதில் ஏறிச்செல்லும் வசதியானவர்களின் சுக வாழ்வையும் சித்தரிப்பதன் மூலம் அன்பையும் வெறுப்பையும் அவர்களது தோள்களிலும் ஏந்திச் செல்வதாக எழுதியிருக்கிறார்.

இந்தியாவின் `கவிக்குயில்’ என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு புகழ்பெற்ற பெங்காலி குடும்பத்தில் பிப்ரவரி 13 ஆம் தேதி 1879ல் ஹைதராபாத்தில் பிறந்தவர். தந்தை டாக்டர் அகோரநாத் சடோபாத்யாயா நிசாம் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். 12-வது வயதில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் முதல் வகுப்பில் தேர்வு பெற்ற சரோஜினி டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடுவைக் காதலித்தார். அவரின் பெற்றோர் திருமணம் செய்யும் வயது இன்னும் வரவில்லையெனச் சென்னைக்கு அனுப்புகிறார்கள். மேல் படிப்பிற்காக இங்கிலாந்து செல்கிறார், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியிலும் பின்னர் கேம்பிரிட்ஜில் உள்ள கிர்டன் கல்லூரியிலும் மூன்று ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டு 1898-ல் இந்தியா திரும்புகிறார். சரோஜினி தனது காதலில் உறுதியாக இருந்தார். பெற்றோர்களின் சம்மதத்தை ஒருவழியாக வாங்கி டாக்டர் நாயுடுவை மணந்தார். இருவரும் ஹைதராபாத்தில் குடியேறினார்கள். சரோஜினி சடோபாத்யாயாவாக இருந்தவர் சரோஜினி நாயுடுவானார். இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தார்கள்.

கோகலே சரோஜினியைப் பார்த்து வியந்து அவருடைய திறமை, அவருடைய பாடல், அவருடைய பேச்சு, அவருடைய கருத்துகள் மற்றும் அவருடைய கனவுகளை, தாய் மண்ணிற்காக அர்ப்பணிக்கச் சொல்லி வழிநடத்துகிறார். அவருடைய வழிகாட்டலை ஏற்றுக்கொண்டு சமூகப் பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். பெண்களின் முன்னேற்றம் மற்றும் இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபடத் தொடங்கினார். 1914 இல் காந்தியுடனான அவரது சந்திப்பு வாழ்வில் அவருக்குப் புதிய பாதையைத் திறந்தது. அவர் ஒரு தீவிர தேசபக்தியோடு சுதந்திரப் போராட்ட வீரரானார். அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். காந்திஜியின் கீழ்ப்படியாமை எனும் பிரசாரங்களில் பங்கேற்றார். பிறகு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார்.

தனது 13-வது வயதில் சரோஜினி சுமார் இரண்டாயிரம் வரிகள் கொண்ட ஆங்கிலக் கவிதையை எழுதினார். அது 1905 இல் அவரது முதல் தொகுதியான தி கோல்டன் த்ரெஷோல்ட்டாக வெளிவந்தது. இத்தொகுதியில் உள்ள கவிதைகள் தனக்கான அழகியலைக் கொண்டிருந்தன. ஆர்தர் சைமன்ஸ் தனது முன்னுரையில், “சரோஜினியின் எண்ணங்களும் வலிமையான உணர்வுகளும் தன்னைப் பற்றிய வரிகளாக உருவெடுத்தது போல் அவளது கவிதை தன்னிலையைப் பாடுகிறது” என்று சொல்கிறார். இரண்டாவது தொகுதி காதல் மற்றும் மரணம் குறித்த நாற்பத்தாறு பாடல் வரிகளைக் கொண்டது. அடுத்த நூல் `முறிந்த சிறகுகள்’ அறுபத்தொரு பாடல் வரிகளைக் கொண்ட கவிதைகளாக இருக்கின்றன.

சரோஜினி நாயுடு

“உன்னைப் போல் பாடும் பறவைக்கு ஏன் சிறகு உடைந்திருக்க வேண்டும்?” என்று கோகலே அவளிடம் கேட்ட கேள்வி அவரை உளவியல் ரீதியில் கட்டுடைப்புச் செய்திருக்க வேண்டும். அதனாலேயே தனது நூலுக்கு `முறிந்த சிறகுகள்’ என்ற தலைப்பை வைத்தார். கலில் ஜிப்ரானின் `முறிந்த சிறகுகள்’ நினைவுக்கு வந்தால் தவறில்லை.

கோகலே சரோஜினியின் நாள்பட்ட நோய்மையும், இந்தியாவின் வகுப்புவாத கலவரம் வெடித்ததன் ஏமாற்றத்தையும் குறிப்பிட்டு வருத்தத்துடன் கூறிய வரிகள் இவை. அதற்குச் சிறகு உடைந்திருந்தாலும் நாட்டின் சுதந்திரத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டுமென்ற எண்ணத்தை மட்டும் அசைக்க முடியாதென அவருக்கான பதிலை இக்கவிதையில் சொல்கிறார்.

என் சொந்த மண் வசந்தமாக மலரும்போது, அது என் துயரமான இதயத்தின் குரலைக் கேட்டு நொந்துவிடுமா? என் ஆசைகளோடு பறக்க நினைக்கும் என்னை அது கண்ணீரால் கட்டுப்படுத்துகிறதா? சோர்வும் நிம்மதியற்ற இருளும் சூழ்ந்த காலம் விதியென முகத்தைச் சுழிக்கும்போது என் பலவீனமான குரலை முடங்கச் செய்கின்றன. ஆனால், அந்த வசந்தத்தை நான் எதிர்கொள்வேன் — என வசந்தத்தைத் சந்திக்க, நான் மீண்டும் எழுச்சிபெற என் முறிந்த வெற்றிச் சிறகுகளிலே நட்சத்திரங்களைச் சூட்டுங்கள். என் சிறகுகள் உடைந்திருந்தாலும், எந்த வலியும், எந்தத் தடையும், என் நாட்டின் சுதந்திரத்தை நோக்கிய என் உறுதியை முடக்கிவிட முடியாது என்று சொல்கிறார்.

சரோஜினி நாயுடு

சரோஜினி நாயுடுவின் கவிதைகள்

சரோஜினி நாயுடுவின் கவிதைகள் இயற்கை, காதல், நாட்டுப்பற்று, வாழ்க்கை மற்றும் மரணத்தைச் சார்ந்தவை என்றாலும், அவரது நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலும் சொந்த அனுபவங்களையே கருப்பொருளாகக் கொண்டவை. இதற்கு ‘பல்லக்கு சுமப்பவர்கள்’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ‘குல்மோகர் பூக்களைப் போற்றி’ என்ற கவிதை அழகியல் பரிமாணத்தை உருவாக்குகிறது. ‘கோல்டன் காசியா’ மற்றும் ‘சம்பக் பூக்கள்’ போன்ற கவிதைகள் இயற்கையின் அழகியலைப் பாடுகின்றன. அதேபோல், ‘சோளம் அரைப்பவர்கள்’, ‘கிராமத்துப் பாடல்’, ‘ராதாவின் பாடல்’, ‘பால்காரர்’ கவிதைகள் கிராமிய வாழ்வியலை ஈர்க்கும் நுட்பமான தருணங்களைப் பதிவு செய்கின்றன.

மேலும், ‘இந்திய நெசவாளர்கள்’, ‘தெருவின் அழுகைகள்’, ‘ஹைதராபாத் கடைவீதிகள்’, ‘வளையல் விற்பவர்கள்’, ‘கோரமண்டல் மீனவர்கள்’ ஆகியவை சாதாரண மக்களின் அன்றாடங்களைப் பதிவுசெய்யும் விதத்தில் அமைந்துள்ளன. சாரதா ஐயர், “சரோஜினி நாயுடு ஹைதராபாத்தை அரேபியாவின் காதல் பூமியாக மாற்றினார்” எனக் குறிப்பிடுகிறார். இது சரோஜினியின் கவிதைகளில் நம்மைப் போர்வையாக மூடிவைக்கும் நாட்டுப்பற்றின் பிம்பங்களை உறுதிப்படுத்துகிறது.

காந்தியுடன் சரோஜினி நாயுடு
காந்தியுடன் சரோஜினி நாயுடு

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று, ‘ஹைதராபாத் கடைவீதிகள்’ (In the Bazaars of Hyderabad) எனும் புகழ்பெற்ற கவிதையில் ஹைதராபாத் தெருக்களின் சந்தை வழியாக நம்மை அழைத்துச் செல்கிறார். கவிதையில், பெர்ல்ஸ் சந்தையில் வாசனை திரவியம் (அத்தர்) விற்பவரும், ஜாஹி வீதியில் ஒரு பூ வியாபாரியும், லாட் வீதியில் ஒரு பொற்கொல்லரும் இடம்பெறுகிறார்கள். இதனை எளிமையான நடையில் மொழி பெயர்த்திருக்கிறேன்

ஹைதராபாத்தின் கடைவீதியில்

ஓ வணிகர்களே,

என்ன விற்பனை செய்கிறீர்கள் நீங்கள்?

வண்ணங்கள் மின்னும் பொருட்களால்

அடைந்துவிடும் உங்கள் கடைமுனை!

சிவப்பும் வெள்ளியும் ஒளிரும் தலைப்பாகைகள்,

ஊதா சரிகை தங்கிய மேலாடைகள்,

மஞ்சள் ஒளி மின்னும் கண்ணாடிப் பலகைகள்,

ஜேட் கற்கள் பதித்த கைப்பிடியுடன் கத்திகள்!

ஓ விற்பனையாளர்களே,

எதை எடை போடுகிறீர்கள் நீங்கள்?

குங்குமப்பூவோ, பருப்போ, அரிசியோ

அவைகளை எல்லாம் பரிமாறுகிறீர்கள்!

ஓ பணிப்பெண்களே,

எதை அரைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

மருதாணியின் நறுமணமோ,

சந்தனத்தின் வாசமோ

இதர மசாலா வாசனையோ?

ஓ நடைபாதை வியாபாரிகளே,

எதற்குக் கூவுகிறீர்கள் இடை வழிகளில்?

சதுரங்க வீரர்களைப் போல்

தந்தத்தால் ஆன பகடைகளுடன்.

ஓ பொற்கொல்லர்களே,

எதை வடிவமைக்கிறீர்கள் நீங்கள்?

மணிக்கட்டுகள், கொலுசுகள் மற்றும் மோதிரங்கள்,

நீலப் புறாக்களின் கால்களுக்கு மென்மையான மணிகள்

தட்டான் பூச்சியின் சிறகைப் போல் மென்மையானவை.

நடனக் கலைஞர்களுக்குத் தங்க ஆடைகள்,

அரசர்களுக்குத் தங்கக் கவசங்கள்.

ஓ பழ வியாபாரிகளே,

நீங்கள் ஏன் கூவுகிறீர்கள்?

நாரத்தையும் மாதுளையும் பிளமும் —

ஓ இசைக்கலைஞர்களே,

எதை இசைக்கிறீர்கள் இப்போது?

சிதார், சாரங்கி, டிரம்

ஓ மந்திரவாதிகளே,

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

வரவிருக்கும் யுகங்களுக்கு

நம்பிக்கையின் மந்திரம்

ஓ பூப் போன்ற பெண்களே,

நீங்கள் எதை நெய்கிறீர்கள்?

நீலம், சிவப்பு நிறக் குஞ்சங்களோடு

மணமகனின் நெற்றிக்குக் கிரீடம்,

படுக்கைக்கு மாலைகள்

புதிய அலங்காரங்கள், புதிய வாசனைகள்

வெண்மையான பூக்களின் தாள்களில்

மௌனமாக நெய்கிறீர்கள்

இறந்து போனவனின் கல்லறைக்கும்சேர்த்து!

சந்தையில் உள்ள வணிகர்களிடம் “எதை விற்கிறீர்கள்?”, “எதை எடைகோலில் போடுகிறீர்கள்?” என்ற கேள்விகளை முன்வைக்கிறார். வண்ணமயமான பூக்களின் இழைகளால் என்ன நெய்கிறீர்களெனப் பெண்களிடம் கேட்கிறார். வாழ்க்கையும் மரணமும் பின்னிப்பிணைந்திருக்கும் ஓர் ஆழமான உணர்வை உருவாக்குகிறது. சந்தை என்பது பொருட்களை விற்கும் இடம் மட்டுமல்ல, மக்களின் வாழ்வியலும், துக்கங்களும், மகிழ்ச்சியும் கூடி முயங்கும் ஓர் உயிரோட்டமான உலகம் என்பதை உணர்த்துகிறார். அத்துடன் பாரம்பரிய இந்தியப் பொருட்கள் எல்லாம் வாழ்வாதாரத்திற்காக, துன்பத்திற்காக, கடைவீதிகளில் விற்பனைக்காக விடப்படுகின்றன என்கிறார்.

இவரது கவிதைகளிலும் காதால் தூதேந்தி பறக்கிறது. வணங்குவதே காதலுக்கு உரிய மரியாதை என்பதை இவரது காதல் கவிதைகள் காட்டுகின்றன.

சரோஜினி நாயுடு

பெண்களின் இதயங்கள் தங்கள் அன்பிற்குத் தகுதியானதைப் பெறுவது பற்றியும், `வீணைப் பாடல்’ என்ற கவிதையில் காதலி தன் காதலனிடம் தனக்குக் கண்ணாடியும், வீணையும், பட்டுப்புடவையும் தேவையில்லை என்று சொல்கிறாள். அவளுடைய கண்கள், அவளுடைய குரல் மற்றும் அவளுடைய இதயமே அவளுக்குத் தேவையெனச் சொல்கிறது. ‘காதலின் ஆசை’ என்ற கவிதை எளிமையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. “காதலும் மரணமும்” என்ற கவிதையில், காதலுக்கு எதிரியாகும் மரணத்தைப் புரட்டுகிறார்.

சரோஜினியின் கவிதைகளில் வண்ணமயமான மற்றும் உணர்வுப்பூர்வமான படிமங்களின் பயன்பாடு பெரும்பாலும் சித்திரமாகவும், காட்சியாகவும் ஊடாடுகிறது. யானையின் தந்தங்கள் போல வளைந்த நகர வாயில்களிலிருந்து வெளியேறும் நதியின் உருவம் மகிழ்விக்கச் செய்வதுடன் அவரது தனிப்பட்ட அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வரிகள் ஆச்சரியப்படுத்தவும் செய்கின்றன.

13 வயதில் இரண்டாயிரம் கவிதைகளை எழுதினாலும் முதல் தொகுதி அவ்வளவாகக் கவனிக்கபடவில்லை. பிறகு வந்த கவிதைகளில் தொனியை மாற்றிக்கொண்டு ஆற்றாமையையும் உரிமையையும் எழுதுகிறார். பறவைகள் பாடுவதைப்போல நானும் பாடுகிறேன், என் பாடல்களும் சமமானவை தான் என சரோஜினியே தன் கவிதைகளைப் பெரிதாக மதிப்பிடவில்லை. “தாமரை மீது அமர்ந்திருக்கும் மொட்டுக்கு” போன்ற சில கவிதைகள் அதிகம் கவரப்பட்டன.

சரோஜினி தனது கவிதைகள், கடிதங்கள், உரையாடல் மற்றும் சொற்பொழிவு ஆகியவற்றின் மூலம் உலகளவில் பிரபலமானார். சமூகப் பணிகள், இந்திய வாழ்வியலின் இருண்ட பகுதிகள், இந்திய மக்களின் துன்பங்கள் பற்றிய விழிப்புணர்வு, ஏழ்மை, மூடநம்பிக்கை, பின்தங்கிய நிலை ஆகியவற்றைத் தவிர, இந்திய வாழ்வின் அமைதியையும், எளிய அழகையும், ஆன்மீகச் செழுமையையும் கண்டறிந்து சொன்னவர்.

சரோஜினி நாயுடு

ஆங்கிலத்தில் எழுதினாலும் இந்தியக் கவிஞராகவே அறியப்படுகிறார். ஆங்கில மொழியின் நுட்பமும், இசைத் தன்மையும், புலமையும் வியக்கும் வகையில் இருந்தாலும் இந்திய வாழ்வியலை கருணை மற்றும் கண்ணியத்துடன் முன்வைக்கும் மொழியறிவு தனக்கில்லை என்றும் சொல்கிறார். ரிதமும் மீட்டரும் அவருக்கு எளிதாக வந்தன. சில கவிதைகளில் அவர் ஒரு மெல்லிசைபோல் நம்மை ஈர்க்கிறார். சில நேரங்களில் சொற்கள் திரும்பத் திரும்ப வருகின்றன, சில நேரங்களில் அணுக்க வாசிப்பு அலுப்பை ஏற்படுத்துகிறது என்ற உண்மையையும் சொல்லவேண்டும்.

சரோஜினி நாயுடுவின் ‘ராணியின் எதிரி’ கவிதை, ஒரு பெண்ணின் அகமன அழுத்தங்களையும், அழகின் சவால்களையும் ஆராயும் தத்துவத் துளியாகப் பெருமை பெறுகிறது. இதில், ராணியின் சிக்கலான உள்ளுணர்வுகள், அவளுடைய மேம்பட்ட எழில் மற்றும் அதன் தாக்கங்களை மையமாகக் கொண்டுள்ளன.

அவள் அழகு ஆழமற்றதல்ல. அதில் கவர்ச்சியும், பெருமையும், அதைவிட வலியுறுத்தப்படும் மனப்போராட்டமும் இருக்கிறது. மற்ற பெண்கள் அவளுக்குப் போட்டியல்ல. அவளது உண்மையான எதிரி, அவள் மட்டுமே, இப்படி எத்தனையோ பேர் நம் கண்முன்னே அலைந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அவள் தன்னையே சந்தேகிக்கிறாள், எதிர்த்துப் பேசுகிறாள், சவால்களை எதிர்கொள்கிறாள்.

சரோஜினி நாயுடு

ராணி குல்னார் தன் அழகிய தங்கப் படுக்கையில் அமர்ந்திருப்பாள். அவளது அழகு அவளுக்கே பெருமை தரும், சீரான அமைதிதரும் என்று அவள் நம்புகிறாள். ஆனால் அவளது உள்ளத்தின் ஓரங்களில் ஏதோ ஒரு மங்கிய ஏக்கம் குழப்பமாய் ஊசலாடுகிறது. மன்னன், அவளுக்குத் துணையாக ஏழு அழகிய பெண்களைக் கடல் கடந்து தேடச் சொல்கிறார். அப்பெண்கள் பாரசீக நிலத்திலிருந்து அழைத்து வரப்படுகிறார்கள். பட்டு நூலால் நெய்யப்பட்ட ஆடைகளில், மென்மையான ரத்தினங்களைப்போல ஒளிரும் அவர்கள், ராஜ கோபுரத்தில் ஏழு சிகப்பு விளக்குகள் போலவும், ஒரு மலரின் ஏழு பிரகாசமான இதழ்கள் போலவும் தோன்றுகிறார்கள்.

அந்த அழகும் ஒளியும்கூட, ராணியின் உள்ளத்தைத் திருப்திப்படுத்த முடியவில்லை. அவள் மெதுவாக முணுமுணுக்கிறாள் “என் இதயம் இன்னும் திருப்தியடையவில்லை,” என்கிறாள். அப்போது ஒரு கண்ணாடியில் தன்னையே பார்த்து மகிழ்ச்சியாக முத்தமிடுகிறாள். அக்கண்ணாடியில் தெரியும் முகமே அவளுடைய உண்மையான போட்டியாளர் என்பதை உணர்கிறாள். எனக்கு நானே எதிரியாகவும், தோழியாகவும் இருப்பதுபோன்ற மனநிலை எனக்கும் உண்டு.

நம்மை நாமே எதிரியாகக் கருதும்போது, நம்மேல் வன்மம் எழுகிறது. ஆனால் நாமே நம்மை நேசிக்கத் தொடங்கும்போது, அதுவே நமக்குள் சக்தியை விளைவிக்கிறது. அழகு என்பது வெளிப்படையான முகம் மட்டுமல்ல, அக ஒளியின் பிரதிபலிப்பும் தானே.

மகாத்மா காந்தியால் ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று புகழப்பட்டவர் சரோஜினி நாயுடு. சுதந்திர இந்தியாவில், ஐக்கிய மாகாணங்களுக்கு முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்ட பெருமையும் அவருக்கே உரியது.

சரோஜினி நாயுடு

சரோஜினி நாயுடு, மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பரப்பி, துக்கத்தை எதிர்த்து நம்பிக்கையுடன் வாழ்ந்தவர் 1949 மார்ச் 2ஆம் தேதி, லக்னோவில் உள்ள அரசு மாளிகையில், மாரடைப்பால் காலமானார். “தனக்காக வாழ வேண்டும்” என்பதில் உறுதியுடன் இருந்தார் ; அது அவரது உரிமை என்று நம்பினார். வாழ்க்கையைச் சோதனையாக அல்ல, ஒரு சாகசமாகப் பார்த்தவர். அவரது சொற்கள், சிந்தனைகள், செயல்கள் அனைத்தும் ஒரு பெண்ணாக மட்டுமல்ல, ஒரு தேசிய தலைவராகவும் இந்திய வரலாறு பேசுகிறது.

செங்காடாய் கிடக்கும் நிலத்தில் தன்னைத் தூக்கித் திரியும் நிழலைத் துரத்திக் கொண்டு ஓடி கவிதைகளை மீண்டும் வாசித்தது என்பது வீட்டிலேயே விட்டு வந்த பழைய தோட்டத்திற்கு நடந்து சென்று வந்தது போலிருக்கிறது எனக்கு.

– சொற்கள் மிதக்கும்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *