• May 16, 2025
  • NewsEditor
  • 0

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மும்பை வான்கடே மைதானம். இந்த மைதானத்தில், சில ஸ்டேண்டுகளுக்கு சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வினூ மன்கட், திலீப் வெங்சர்க்கார் ஆகிய முன்னாள் வீரர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வரிசையில், இந்திய அணிக்கு 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியும் வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் பெயரை, வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டேண்டுக்கு வைத்து அவரை கௌரவித்திருக்கிறது மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA).

வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மா பெயரிலான ஸ்டேண்ட் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தன் பெற்றோர் மற்றும் மனைவி ரித்திகா முன்னிலையில் எமோஷனலாக உரையாற்றிய ரோஹித் சர்மா, “இன்று நடப்பது, கனவிலும்கூட நான் நினைக்காதது.

முடிந்தவரை நாட்டுக்காக விளையாடும்போது, நீங்கள் நிறைய சாதிக்க முயல்வீர்கள். அதனால், நிறைய மைல்கற்கள் உருவாக்கப்படுகின்றன. இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

வான்கடே ஒரு ஐகானிக் மைதானம். இங்கு நிறைய நினைவுகள் இருக்கின்றன. விளையாட்டின் சிறந்த வீரர்கள், உலகின் தலைசிறந்த அரசியல் தலைவர்களிடையே எனது பெயர் இடம் பெற்றிருக்கிறது.

இப்போது என்ன உணர்கிறேன் என்பதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. இதற்காக, MCA உறுப்பினர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்.

ரோஹித் சர்மா

நான் விளையாடிக்கொண்டிருக்கும்போதே எனக்கு மரியாதை அளிக்கப்படுவது ஸ்பெஷலாக இருக்கிறது. இரண்டு ஃபார்மட்டுகளிலிருந்து நான் ஓய்வுபெற்றுவிட்டேன். ஆனாலும், இன்னும் ஒரு ஃபார்மட்டில் நான் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

மே 21-ம் தேதி டெல்லிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் அணியில் இங்கு களமிறங்கும்போது அதுவொரு ஸ்பெஷல் உணர்வாக இருக்கும்.

ரோஹித் சர்மாவின் குடும்பம்
ரோஹித் சர்மாவின் குடும்பம்

அதோடு, இந்திய அணி இங்கு எந்த அணியுடன் விளையாடினாலும் அது மேலும் ஸ்பெஷலாக இருக்கும். என் அம்மா, அப்பா, என் சகோதரர், அவரின் மனைவி, என் மனைவி முன்னிலையில் இந்த கௌரவத்தைப் பெறுகிறேன்.

என் வாழ்வின் அனைத்து நபர்களுக்கும், அவர்கள் செய்த தியாகங்களுக்கும் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.” என்று நெகிழ்வாகக் கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *