• May 16, 2025
  • NewsEditor
  • 0

திருமணமாகி நான்கைந்து வருடங்கள் குழந்தையில்லாத தம்பதிகள், பெரும் பதற்றத்துக்குள் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் நிலைமை புரிகிறது. என்றாலும், அவர்களுடைய பதற்றமும், பிரச்னையை அதிகப்படுத்தலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ்.

தாம்பத்திய உறவு

’’அந்தத் தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து வருடத்துக்குள்தான் ஆகியிருந்தது. குழந்தையின்மைக்கான ஆரம்பகட்ட கவுன்சிலிங்கில் இருந்தார்கள். கருத்தரிக்கும் வாய்ப்புள்ள குறிப்பிட்ட நாள்களில் உறவுகொள்ள முடியவில்லை என்பதற்காக என்னை சந்திக்க வந்திருந்தார்கள். ’இந்த நாள்கள்ல உறவுகொண்டே ஆகணும்’ என்கிற பதற்றத்தில் உறவுகொள்ள முடியாததுதான் அவர்களுடைய பிரச்னை. இவர்களைப் போன்ற சிக்கலில் இருக்கிற தம்பதிகள் அனைவருக்குமே நான் சொல்ல விரும்புவது இதுதான்’’ என்றவர் தொடர்ந்தார்.

’’ஒருசில தம்பதியருக்கு உடலளவில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், கருவுறுதல் காலத்தே நிகழாது. குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள், ’மாதவிடாய் முடிந்த பிறகு குறிப்பிட்ட நாள்களில் உறவுகொண்டால் கருவுறும் வாய்ப்பு அதிகம்’ என்ற கருத்தை மட்டுமே நம்பி, அந்த நாள்களில் உறவுகொண்டே ஆக வேண்டுமென ஈடுபடுவார்கள். அடுத்த மாதம் வழக்கம்போல மாதவிடாய் ஆகிவிட்டால் மனமுடைந்து விடுவார்கள். இவர்கள், தினமும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் அது கருவுறும் வாய்ப்பை இன்னும் அதிகமாக்கும்.

தாம்பத்திய உறவு
தாம்பத்திய உறவு

வாரத்தில் நான்கு நாட்களாவது கணவன் – மனைவி உறவுகொண்டால், கருவுறும் வாய்ப்பு 83 சதவிகிதம் வரை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தவிர, தினமும் உறவுகொண்டால், பெண்ணின் கருப்பை, கருக்குழாய் ஆகிய இடங்களில் விந்தணுக்கள் இருக்கும். இதன் காரணமாக, பெண்ணின் கருமுட்டை எப்போது வெளியிடப்பட்டாலும் அது விந்தணுவுடன் இணைந்து கருவாக உருவாகலாம்.

கிட்டத்தட்ட தினமுமே உறவுக்கொள்வதில், ஆண்களுக்கும் ஒரு நன்மை இருக்கிறது. அது, அவர்களின் விந்தணுக்களின் தரம் அதிகமாகும். அதனால், உறவுக்கான நாள்களை எண்ணிக் கொண்டிருக்காமல், தினமும் உறவுக்கொள்ளுங்கள். உடலளவில் எந்தப் பிரச்னையும் இல்லை; ஆனால், குழந்தையில்லை என்கிற தம்பதியருக்கு, இதுவே தீர்வாக அமையலாம்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *