
போபால்: “பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய ராணுவம் தலைவணங்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா பேசியிருப்பது அரசியல் சர்ச்சையாகியுள்ளது. இந்தப் பேச்சு மலிவானது என கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்தியப் பிரதேச துணை முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத் துணை முதல்வர் தேவ்தா பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, “நாட்டின் ராணுவம் மற்றும் ராணுவ வீரர்கள், பிரதமர் மோடிக்கு தலைவணங்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச பாஜக அரசின் துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா கூறியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு மலிவானது. வெட்கக்கேடானது. இது ராணுவத்தின் துணிச்சலுக்கும் வீரத்துக்கும் அவமானம். ஒட்டுமொத்த தேசமும் இன்று ராணுவத்தைக் கொண்டாடி வரும் நேரத்தில் பாஜக தலைவர்கள் நமது துணிச்சலான ராணுவத்தைப் பற்றி தாழ்வான எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். பாஜகவும், ஜெகதீஷ் தேவ்தாவும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.