
“டாஸ்மாக் தொடர்பாக பதிந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன..?”, என கேள்விக் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஒரு வார காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யச் சொல்லி சமீபத்தில் உத்தரவிட்டது. அந்த சூடே இன்னும் அடங்காத நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. அதோடு, விசாகனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக தங்களுடைய அலுவலகத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அடுத்தடுத்த ரெய்டு..!
இன்று(மே 16-ம் தேதி) காலை 6:30 மணியளவில், சென்னை மணப்பாக்கத்திலுள்ள விசாகன் வீட்டில் சோதனையை தொடங்கியபோதே, ‘கே ஸ்மார்ட்’ நிறுவனத்தின் உரிமையாளர் கேசவன் தொடர்புடைய இடங்களிலும், ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்புடைய இடங்களிலும் சோதனையைத் தொடங்கியது அமலாக்கத்துறை.
எம்.ஆர்.சி நகரிலுள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆட்சி மேலிடத்திற்கு மிக நெருக்கமான ஒரு புள்ளியின் வீட்டுக் கதவையும் தட்டியிருக்கிறார்கள். வீட்டில் அந்த புள்ளி இல்லாததால், சோதனை மட்டும் நடந்து வருகிறது. இப்படி, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 12 இடங்களில் சோதனையை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை.

`விசாரணைக்கு ஆஜராகவே இல்லை’
இந்தச் சோதனை குறித்து அமலாக்கத்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். “டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, கடந்த மார்ச் 6-ம் தேதி அந்நிறுவனத்தின் தலைமையகத்திலும், அம்பத்தூர் குடோனிலும் சோதனை நடத்தினோம். மூன்று நாள்கள் தொடர்ந்த அந்தச் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக்கின. பார் டெண்டரில் தொடங்கி, பணியிட மாற்றங்கள் வரையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டறிந்தோம்.
டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை சப்ளை செய்யும் ஆலைகளில் நடத்தப்பட்டச் சோதனையில், சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனுக்கு சம்மன் அனுப்பியிருந்தோம். அதற்குள்ளாக, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைக்கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.
அதில், ‘அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது’ என ஏப்ரல் 23-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, இரண்டவது முறையாக விசாகனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவே இல்லை.
இரண்டு முறை சம்மன் அனுப்பியும் விசாகன் ஆஜராகாததால், மணப்பாக்கத்திலுள்ள அவரின் வீட்டில் இன்று சோதனையிட்டது அமலாக்கத்துறை. டாஸ்மாக் கொள்முதலில் தொடங்கி, சில மதுபான ஆலைகளுக்குச் சாதகமாக ஆர்டர்கள் வழங்கப்பட்டது வரையில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது, வாட்ஸ்அப் உரையாடல்களின் ‘ஸ்கிரீன் ஷாட்’கள் நகல் எடுக்கப்பட்டு, அவை கிழிந்த நிலையில் விசாகன் வீட்டின் அருகே கண்டெடுக்கப்பட்டன.



அந்த நகல்களில், ‘டியர் தம்பி’ என்ற வாசகங்களுடன், டாஸ்மாக் டெண்டர்கள் தொடர்பாக சில தரவுகளும் சிக்கின. அதைத்தொடர்ந்து, விசாகனிடம் மேல் விசாரணை நடத்துவதற்காக அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளோம்.
தன் தலைக்கு மேலே தண்ணீர் ஓடத் தொடங்கிவிட்டதால், பெரும் பதட்டத்தில் இருக்கிறார் விசாகன். அவரை அப்ரூவராக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. நடந்த விஷயங்களையெல்லாம் விசாகன் கொட்டத் தொடங்கினால், அதனால் ஆட்சியிலிருக்கும் பலருக்கும் நெருக்கடிகள் முற்றலாம்” என்றனர்.
இந்த ரெய்டில், கே ஸ்மார்ட் கேசவன், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைதான் பலரது புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது. ‘அவர்களுக்கும் ‘டாஸ்மாக்’ முறைகேடுக்கும் என்ன சம்பந்தம்… அவர்களுடைய இடங்களில் ஏன் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது…’ என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய டாஸ்மாக் வழக்கை கவனித்து வரும் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், “அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் உதவியாளராக பணிபுரியும் வாளாடி கார்த்தியின் மைத்துனர்தான் இந்த ஆகாஷ் பாஸ்கரன். பி.ஆர்.ஆர். ஸ்வர்ண மாளிகை என்ற நகைக்கடையையும், ஶ்ரீ வேலவன் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தையும் ஆகாஷின் குடும்பம் நிர்வகித்து வருகிறது.
சில திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆகாஷ் பாஸ்கரன், தயாரிப்பாளர் அவதாரமெடுத்து, சில முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்துள்ளார். திரைத்துறையில், கடந்த ஆறு மாதங்களில் அபரிமித வளர்ச்சியை அவர் அடைந்துள்ளார். இந்தச் சூழலில், டாஸ்மாக் கொள்முதல் விவகாரங்களில் அவருக்கு தொடர்பிருப்பதாக ரகசிய தகவல்கள் அமலாக்கத்துறைக்குக் கிடைத்தன. அதைத்தொடர்ந்துதான், அவருடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கே ஸ்மார்ட் கேசவனும், இந்த தி.மு.க ஆட்சியில் திடீரென வளர்ச்சிப் பெற்றவர்தான். பள்ளிக்கல்வித்துறையில், ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை கேரளாவின் கெல்ட்ரான் நிறுவனத்துடன் சேர்ந்து கே ஸ்மார்ட் நிறுவனம் எடுத்திருக்கிறது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சி.சி.டி.வி பொருத்தும் பணியை மேற்கொண்டதும் இந்நிறுவனம்தான். செந்தில் பாலாஜி சிறையிலிருந்த காலக்கட்டத்தில், டாஸ்மாக் நிறுவனம் தொடர்பான சில விவகாரங்களில் கேசவனின் தலையீடு இருந்ததற்கான ஆதாரங்கள் அமலாக்கத்துறையிடம் சிக்கியிருக்கின்றன. அதையொட்டியே, தி.நகரிலுள்ள அவருடைய இடத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டாஸ்மாக் தலைமையகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாகவே, இந்த ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளோம். விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றால், கைது நடவடிக்கைக்கூட பாயலாம்” என்றார்.
ஒருபக்கம், ‘டாஸ்மாக் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்துள்ள வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என நீதிமன்றத்தில் போடப்பட்ட பொதுநல வழக்கு, ஆட்சி மேலிடத்தின் கழுத்தை இறுக்க ஆரம்பித்திருக்கிறது. மறுபக்கம், விசாகனைக் கையிலெடுத்து அவரை அப்ரூவராக்கும் முயற்சியில் அமலாக்கத்துறை வேகமெடுத்திருக்கிறது. தி.மு.க மேலிடப் புள்ளிகளுக்கு நெருக்கமான சிலர், அமலாக்கத்துறை சோதனையில் சிக்க வாய்ப்பிருக்கிறது. டாஸ்மாக் முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டே போகிறது.!