
இந்தியாவில் கால்நடை வளர்ப்பு மற்றும் வர்த்தகம் என்பது பாரம்பரியமாக நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கால்நடை துறை சுமார் 4.11% பங்களிப்பை வழங்குகிறது. அதே சமயம் நமது நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் விளங்குகிறது. ஆனாலும் இந்தத்துறை பெரிதாக தொழில்நுட்பத்தின் தாக்கம் இல்லாததால் பெரிதாக வளராதத் தோற்றத்தில் இருக்கிறது. இந்தத் துறை இன்னும் அதிகமாக பாரம்பரிய முறைகளையே நம்பியுள்ளது, எனினும் தற்போது இதற்கான தொழில்நுட்ப வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.
இந்தத்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்கள் கால்நடைகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறதா என்பதை அறியாமல் இருக்கிறார்கள். விலை தகவல்களை அணுகுவதில் உள்ள இடைவெளியும், இடைத்தரகர்கள் அதிக லாபம் எடுப்பதால் விவசாயிகளுக்கு குறைந்த வருமானமும் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சரி, இடைத்தரகர்கள் ஏன் அதிக லாபம் எடுக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்கள் தரப்பில் பல சிக்கல்கள் இருக்கிறது, இதையெல்லாவற்றையும் விட கால்நடை தரம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய சரிபார்ப்பு நடைமுறைகளில் ஏமாற்றப்படும் வாய்ப்பும் அதிகம். விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையேயான நம்பிக்கை குறைபாடு, மோசடி மற்றும் ஏமாற்று நடைமுறைகளுக்கான அதிக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இன்னொரு புறம், சந்தை மதிப்பு என்று பார்த்தால் 30 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள், 70 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் (மாடுகள், எருமைகள், ஆடுகள், வெள்ளாடுகள், ஒட்டகங்கள்) உள்ளன. கால்நடை சந்தைகள், இடைத்தரகர்கள், வர்த்தகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள், பால் உற்பத்தி அமைப்புகள் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளது.
தோராயமாக இந்தியாவில் கால்நடை துறையின் மதிப்பு ஏறக்குறைய ₹9,32,000 கோடி (சுமார் $112 பில்லியன்) ஆக உள்ளது. இதில் டிஜிட்டல் எனும்எண்ணிம நுட்பங்கள் மிகக்குறைவாக உள்ளது. எனவே இந்த மொத்தத் தொகையே நமக்கு ஒரு பிரதான வாய்ப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் ஏறக்குறைய குறைந்தபட்சம் 28,000 கோடி ரூபாய் வருடாந்திர சந்தை இதற்காக இருக்கிறது.

இந்தியாவில் கால்நடை ஆன்லைன் வர்த்தக தளமானது பல்வேறு தடைகளை நீக்கி, ஒரு நம்பகமான, வெளிப்படையான மற்றும் திறமையான சந்தையை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த துறையில் ஏற்கனவே கணிசமான அளவிற்கு கட்டமைக்கப்படாத வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது டிஜிட்டல் மயமாக்கலுக்கான பெரிய வாய்ப்பு
சரியான செயலாக்கத்துடன், விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் அதிக லாபங்களை உறுதி செய்வதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்டது.
₹9.32 லட்சம் கோடி மதிப்புள்ள பாரிய TAM, மற்றும் முதல் சில ஆண்டுகளில் அணுகக்கூடிய ₹28,000 கோடி SOM ஆகியவை குறிப்பிடத்தக்க வளர்ச்சி வாய்ப்பை குறிக்கிறது. இன்னமும் மறைமுகமாகப் பல வருவாய் வாய்ப்புகளை கொண்டது. இந்த சந்தையில்தான் தமிழகத்திலிருந்து செயலி வழியே கால்நடை(ஆடு,மாடு, கோழி) வாங்க-விற்க ஃபின்டிகஸ்(Findicus) என்ற செயலி ஒன்றை உருவாக்கி செயல்படுத்திவருகிறார்கள், ஆற்காட்டைச் சேர்ந்த விக்னேஷ், இணை நிறுவனர் வசந்த் மற்றும் அவர்களின் குழுவினர்கள்
.
இனி அவர்கள் சாகசத்தை கேட்போம் வாருங்கள், விக்னேஷ் வரிகளில்..!
“ஃபின்டிகஸ் செயலியை தொடங்க உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி? கால்நடை விற்பனையை மொபைல் செயலி மூலம் கொண்டு வருவதற்கான உந்துதல் என்னவாக இருந்தது?”
“கறவை மட்டுப்பண்ணை தான் நான் முதலில் ஆரம்பித்த தொழில். அப்போது எனது பண்ணைக்கு தேவையான கறவை மாடுகளை வாங்குவதே மிகுந்த சிரமமாக இருந்தது. இதே சிரமம் அனைத்து கால்நடை விவசாயிகளும் சந்திக்கிறார்கள் என்று தெரிந்தது. இதற்கு ஓர் தீர்வு தரவேண்டும் என்று ஆரம்பித்த சிறு முயற்சியே இந்த ஃபின்டிகஸ் செயலி.
கால்நடை விற்கும் விவசாயிகளையும் அதை வாங்கும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளையும் அவர்களின் இடத்தின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப ரீதியில் இணைக்க செயலியே சிறந்த வழி என தெரிந்ததால் ஃபின்டிகஸ் என்பதை செயலி வடிவில் உருவாக்கினோம்.”

“நீங்கள் இந்தத் தொழிலை ஆரம்பித்தபோது சந்தித்த முக்கியமான சவால்கள் என்னென்ன? ஆரம்ப கட்டத்தில் நீங்கள் கடந்து வந்த சிரமங்கள் யாவை?”
“இந்த செயலியை என்னால தனியாக உருவாக்கி இருக்கவே முடியாது. வெவ்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆட்கள் எல்லாரையும் ஒரு குழுவாக சேர்ப்பது தான் மிகமுக்கிய சவால், அடுத்ததாக இந்த நிறுவனத்துக்கு தேவையான முதலீடுகளை திரட்டுவது, இரண்டாவது முக்கிய சவால்.
எங்களோட சேமிப்பு, மத்திய அரசோடு மானிய திட்டம், நண்பர்கள் கொடுத்த கடன் இது எல்லாம் தன் ஆரம்ப கால முதலீடுகள். முதலீடுகள் சவால் இன்னமும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கு, அடுத்ததாக எங்களோட செயலியை எப்படி விளம்பரப்படுத்துவது என்று தொடக்கத்தில் சரியாக தெரியவில்லை. தவறான விளம்பர யுக்திகளை கையாண்டதால் செலவுகள் தான் அதிகமானதே தவிர அதற்கான பலன் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது நாங்கள் தவறுகளை சரி செய்து செயல்பட ஆரம்பித்திருக்கின்றோம்.”
“உங்கள் மொபைல் செயலி கால்நடை விற்பனை செய்வதில்எவ்வாறு நிபுணத்துவம் பெற்றுள்ளது? இந்தச் சந்தையில் உள்ள தனித்துவமான தேவைகளை நீங்கள் எவ்வாறு பூர்த்தி செய்கிறீர்கள்?”
“நான் ஆரம்பித்த முதல் தொழில் கறவை மட்டுப்பண்ணை, இரண்டு வருடங்களுக்கு அந்த பண்ணையை நடத்தினேன். அந்த இரண்டு வருடத்தில் ஆடு, மாடு, கோழி உட்பட அனைத்து வகையான கால்நடை மற்றும் கோழி வளர்ப்பதை பற்றிய அடிப்படை அறிவு கிடைத்தது. நிறைய கால்நடை விவசாயிகளின் அறிமுகம் கிடைத்து. அவர்களிடம் அடிக்கடி உரையாடுவதன் மூலம் அவர்களின் தொழில் சார்ந்த சிரமங்களை கேட்டு அறியும் வாய்ப்பு கிடைத்தது. கால்நடை சார்ந்த புத்தகங்கள், நாளிதழ்கள் மூலம் மேலும் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். இதன் மூலம் கால்நடை விவசாயிகளின் அடிப்படை தேவைகள் பற்றியும், அவர்களின் அன்றாட சிரமங்கள் பற்றியும் தெளிவான தகவல்கள் கிடைத்தது. அந்த அனுபவத்தையே வாடிக்கையாளர் தேவை அறிந்து அவற்றை எங்களின் தொழில் நுட்ப குழுவோடு இணைந்து அவர்களுக்கு எளிய வழியில் தீர்வுகளை வழங்கிவருகிறோம்.”
“இந்தியாவில் கால்நடை விற்பனைக்கான மொபைல் செயலிகளின் தற்போதைய போக்குகள் மற்றும் சவால்கள் என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள்? இந்தச் சவால்களை எதிர்கொள்ள உங்கள் தளம் எவ்வாறு உதவுகிறது?”
“ஒவ்வொரு மாநிலத்தை பொருத்தும் கால்நடைகளின் வகை, விவசாயிகளின் தேவைகளில் பெரு வித்தியாசங்கள் உள்ளது. அனைத்து விவசாயிகளையும் கருத்தில் கொண்டு ஒரு செயலியை உருவாக்குவது பெரும் சவால். ஒரே செயலியை வெவ்வேறு மாநிலத்திற்கு ஏற்ற படி சில மாறுதல்களுடன் தரும் எண்ணத்தில் நங்கள் உருவாக்கி வருகிறோம்.”
“உங்கள் தளத்தைப் பயன்படுத்தி கால்நடைகளை விற்பனை செய்யும் விவசாயிகள் என்ன முக்கிய அம்சங்களையும் செயல்பாடுகளையும் எதிர்பார்க்கலாம்? பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை செயல்முறைகளை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்?”
“அனைத்து விதமான கால்நடைகள் மற்றும் கோழிகளையும் இந்த செயலியில் விற்பனைக்காக பதிவிட முடியும். என்ன விற்பனை செய்ய விரும்புகிறார்கள் என்பதை பொறுத்து விற்பனைக்கான கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகளை பூர்த்தி செய்து, புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம். விற்பனை செய்யும் விவசாயியின் இடத்தை பொறுத்து அவர்களை சுற்றி உள்ள அனைவர்க்கும் இந்த விற்பனை பதிவு பற்றிய தகவலை இந்த செயலி தெரிவிக்கும். தேவையான நபர்கள் நேரடியாகவோ அல்லது செல்பேசி மூலமாகவோ பேசி வாங்கிக்கொள்ளலாம்.
இதன் மூலம் நுகர்வோரை விவசாயிகள் எளிமையாக சென்றடையமுடியும். பண பரிவர்த்தனை செய்ய Cashfree என்ற பாதுகாப்பு மிக்க தளத்தை பயன்படுத்துகிறோம். கூடுதலாக நாங்களே எங்கள் செயலியை பாதுகாக்க பாதுகாப்பு அடுக்குகளையும் உருவாக்கியுள்ளோம்.”

“இந்தியாவில் உள்ள கால்நடை விவசாயிகள் மற்றும் வாங்குபவர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் தளம் உள்ளூர்மயமாக்கல் மற்றும் மொழி ஆதரவை எவ்வாறு வழங்குகிறது?”
“இடத்தை பொருத்தும் தட்பவெப்ப நிலையை பொருத்தும் கால்நடை விவாசிகளின் தேவைகள் மற்றும் விருப்பங்களில் பெரும் வேறுபாடு உண்டு. எனவே இடத்தை பொறுத்து, மாநிலத்தை பொறுத்து தனித் தனியே அவர்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு தீர்வு தரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மேலும் நமது நாட்டின் அனைத்து பிராந்திய மொழிகளில் எங்கள் சேவையை வழங்கவே முயற்சி செய்து வருகிறோம். AI மூலம் ஒரே நாளில் எங்களால் மொழி பெயர்க்கமுடியும், ஆனால் அப்படி செய்வதால் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளே AI அளிக்கும், அதை தவிர்க்க மொழி பெயர்ப்பாளர்களைக் கொண்டே நங்கள் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் விவசாயிகள் பயன்படுத்தும் பேச்சுவழக்கு வார்த்தைகளை பயன்படுத்த முடிகிறது.”
“எதிர்காலத்தில் கால்நடை விற்பனைக்கான மொபைல் செயலிகளின் வளர்ச்சி மற்றும் பரிணாம வளர்ச்சியை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இந்தத் துறையில் உங்கள் தளத்தின் புதுமையான திட்டங்கள் என்ன?”
“எதிர்காலத்தில் இணைய செயலிகள் மூலம் கால்நடைகளை வணிகம் செய்வதே மிகவும் பெரும்பான்மையாகவும் சுலபமாகவும் இருக்கும். இருப்பினும் நேரடி கால்நடை சந்தைகளும் பயன்பாட்டில் இருக்கும். இதற்கு Blockchain கிரிப்டோ நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றோம்.”
“இந்தியாவில் கால்நடை விற்பனைத் துறையில் டிஜிட்டல் மயமாக்கலின் தாக்கம் குறித்து உங்கள் கருத்து என்ன? இந்த மாற்றத்தில் உங்கள் தளம் என்ன பங்கு வகிக்கிறது?”
“ஜியோவின் வருகைக்கு பிறகும், கொரோனா பெரும்தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கினாலும் இணைய பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. கால்நடை விற்பனை துறையிலும் இந்த தாக்கத்தை வெகுவாக பார்க்கமுடிகிறது. நேரடி கால்நடை சந்தையில் கால்நடைகளை வாங்குவதிலும் விற்பதிலும் நிறைய சிரமங்கள் உள்ளது. செலவுகளும் அதிகமா உள்ளது, அந்த சிரமங்களையும் , வீண் செலவுகளையும் எங்கள் செயலி மூலம் தீர்வுகாண முடியும், அனால் இணைய மோசடிகளில் இருந்தும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தற்போது தமிழகத்திலும், வரும்காலங்களில் தென் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலும் இந்த மாற்றத்தை முழுமையாக ஏற்படுத்துவதில் ஃபின்டிகஸ் செயலி ஒரு முக்கிய பங்காற்றும்.”

“இப்போது உங்கள் வணிகத்தின் நிலை என்ன? ஆரம்பத்தில் இருந்த நிலைக்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன?”
“இப்போது கிட்ட தட்ட 50,000 வரை Google Playstore இல் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 15,000 முதல் 20,000 விவசாயிகள் வரை இந்த செயலியை மாதம்தோறும் கால்நடைகளை வாங்க அல்லது விற்க பயன்படுத்தி வருகிறார்கள். தொடக்கத்தில் மிக மிக அவசியமான அம்சங்கள் மட்டுமே உருவாக்கி இருந்தோம், பின்னர் விவசாயிகளின் கருத்து மற்றும் ஆலோசனைகளை தொடர்ச்சியாக கேட்டு அவர்களின் வசதிக்கேற்ப தேடு தளம், வடிகட்டி பார்க்கும் தரவுகள் போன்ற புதிய அம்சங்களையும் உருவாக்கியுள்ளோம். மேலும் பல அம்சங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.”