• May 16, 2025
  • NewsEditor
  • 0

அரசியல் கட்சிகள், அமைப்புகள் ரீதியாக பின்னிப்பிணைந்தவர்கள் கேரள மக்கள். அரசியல் ரீதியாக பல மோதல்கள் நடைபெற்றாலும் மத நல்லிணக்கத்துக்காக பல முன்னெடுப்புகளை செய்துவருகின்றனர். தி கேரளா ஸ்டோரி என்ற சினிமா மூலம் கேரளா மாநிலத்தில் மதங்களுக்குள் பிரச்னை இருப்பதாக காட்டப்பட்டது. ஆனால், உண்மையான கேரளா ஸ்டோரி அதுவல்ல என உணர்த்தும் வகையில் பல நிகழ்வுகள் அம்மாநிலத்தில் நடந்துவருகின்றன. அதற்கு ஒரு ஆச்சர்ய எடுத்துக்காட்டுதான் மேலேகுற்றிமூடு கிராமம். மேலேகுற்றிமூடு சாமூண்டீஸ்வரி ஆலயம் மற்றும் பாறையில் பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு ஒரே நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இரும்பால் அமைக்கப்பட்டுள்ள ஆர்ச்சின் ஒரு பாதியில் சிவப்பு வண்ணத்தில் மேலேகுற்றிமூடு ஸ்ரீ சாமூண்டேஸ்வரி கோயில் என எழுதப்பட்டுள்ளது. மறு பாதியில் பச்சை வண்ணத்தில் பாறயில் மஸ்ஜித் மேலகுற்றிமூடு எனவும் எழுதப்பட்டுள்ளது. கோயிலுக்கும், பள்ளிவாசலுக்கும் ஒரே நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குதான் ஆச்சர்யமான காட்சி. ஆனால், இதெல்லாம் இங்கு சாதாரணம் என கடந்துபோகிறார்கள் மேலேகுற்றிமூடுவாசிகள்.

சாமூண்டீஸ்வரி கோயில் மற்றும் பள்ளிவாசல்

மேலேகுற்றிமூடு நுழைவு வாயில் வழியாக கிராமத்துக்குள் பயணப்பட்டோம். முதலில் எதிர்பட்டது சாமூண்டீஸ்வரி கோயில். சாமூண்டீஸ்வரி அம்மனை பிரதான தெய்வமாககொண்ட அந்த கோயிலில், கணபதி, நாகர் உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. அம்மனை வழிபட்டுவிட்டு வெளியேவந்த கோயில் செயலாளர் சரத்திடம் பேச்சுகொடுத்தோம், “எங்கள் மூதாதையார் காலத்தில் இருந்தே சாமூண்டீஸ்வரி கோயில் உள்ளது. இங்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடியும், வாளும் கருவறையில் வைத்து வழிபட்டனர். எங்கள் மூதாதையரான தாத்தா ஒருவர் பயன்படுத்திய தடிக்கம்பு (ஊன்றுகோல்) ஒன்றும் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த காலத்தில் ஓலை கூரை வேயப்பட்டு கோயில் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஓடு வேயப்பட்டது. இப்போது நாங்கள் கோயிலை புனரமைத்து கடந்த அஅண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தினோம். எங்கள் கோயிலுக்கு பக்கத்திலேயே பாறையில் மஸ்ஜித் அமைந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இஸ்லாம் பள்ளிவாசலுக்காக கிராமத்தின் தொடக்கத்தில் ஒரு ஆர்ச் அமைக்கப்பட்டது. அந்த ஆர்ச்சில் பள்ளிவாசலின் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. இதற்கிடையே சாமூண்டீஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் சமயத்தில் பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் எங்களிடம் வந்து ‘கோயிலுக்கு ஆர்ச் அமைக்க இடம் இல்லை என்பதால் பள்ளிவாசலுக்காக வைக்கப்பட்ட ஆர்ச்சில் பாதி-யை கோயில் நுழைவு வாயிலாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றனர். நாங்களும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு அவர்கள் பள்ளிவாசலுக்காக அமைத்த ஆர்ச்சின் பாதியில் சாமூண்டீஸ்வரி கோயில் நுழைவு வாயில் என எழுதினோம். மீதி பாதியில் பள்ளிவாசலின் பெயரை அவர்கள் எழுதி உள்ளனர்.

கேரளாவின் மத ஒற்றுமையை பறைசாற்றி நிற்கிறது இந்த ஆர்ச். எங்கள் பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களுக்கும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறோம். ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளின்போது நாங்கள் பாறையில் பள்ளிவாசலில் செல்வோம். ஓணம் பண்டிகை, கோயில் விழாக்களிலும் இஸ்லாமியர்கள் கலந்துகொள்வார்கள். கோயில் விழாவுக்காக இஸ்லாமியர்கள் நன்கொடை வழங்குவார்கள், கோயிலுக்கு வந்து ஊதுபத்தி ஏற்றிவைத்து பிரார்த்தனை செய்வார்கள். முன்பு எங்கள் கோயில் கமிட்டி செயலாளராக இஸ்லாமியரான நெளஷாத் உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர். இப்போதும் கோயில் திருவிழாவின்போது அவர்களும் பங்களிப்பு செய்யும் அளவுக்கு நாங்கள் ஒற்றுமையாக இருந்துவருகிறோம்” என பெருமிதத்துடன் கூறினார் சரத்.

சரத், ரஷீத் சுளிமானூர்

கோயிலைத் தாண்டி சுமார் 50 அடி தூரம் நடந்து சென்றாலே பாறையில் மஸ்ஜித் பள்ளிவாசலை அடைந்துவிடலாம். பள்ளிவாசலை ஒட்டி அரச மரம், வில்வ மரம், கனிக்கொன்றை மரங்கள் நிற்கின்றன. பாறையில் மஸ்ஜித் செயலாளர் ரஷீத் சுளிமானூர் நாம் செல்லும்போது பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு ஆர்ச் குறித்த தகவலை அவரிடம் கேட்டோம். உற்சாகமாக பேசத் தொடங்கினார் ரஷீத் சுளிமானூர், “75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி கள்ளிக்காடாக இருந்தது. பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதி முன்பு பாறையாக இருந்தது. அப்போது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இஸ்லாமிய துறவியர் இரண்டு பேர் இங்கு வந்து வாழ்ந்ததாகவும், அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதி இங்கு இருப்பதாகவும் தெரியவந்தது. அதன் பின்னர் இங்கு பள்ளிவாசல் அமைக்கப்பட்டது. அதன் பிறகும் அனைத்து சமயத்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வார்கள். சாமூண்டீஸ்வரி கோயில் புனர் பிரதிஸ்டையின்போது அர்ச்சகர் வந்து பூஜைகள் செய்தார். அப்போது பூஜையில் ஏதோ குறைபாடு உள்ளதாக அர்ச்சகர் மனதில் தோன்றியுள்ளது. ஏதோ யோசித்தவர் இந்த பள்ளிவாசலில் பட்டும், பூஜை பொருட்களும் வழங்கும்படி அங்குள்ள மக்களிடம் கூறினார். அதன்பிறகு கோயிலில் பூஜைகள் நிறைவாக நடத்தப்பட்டன.

ஆச்சர்யமான நுழைவு வாயில்

சாமூண்டீஸ்வரி கோயில் புனர் நிர்மானம் செய்யப்பட்ட பிறகு அவர்களுக்காக ஆர்ச் அமைக்க இடம் இல்லையே என நான் யோசித்தேன். ஒரே பகுதியில் இரண்டு ஆர்ச் அமைக்கமுடியாது. எனவே, பள்ளிவாசலுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆர்ச்சின் பாதியை கோயிலுக்காக கொடுக்கலாம் என எனது ஆசையை மஸ்ஜித் கமிட்டியினரிடம் வெளிப்படுத்தினேன். கமிட்டியினரும் கைதட்டி வரவேற்று தீர்மானம் நிறைவேற்றினர். பின்னர் சாமூண்டீஸ்வரி கோயில் கமிட்டியினரிடம் நான் எங்கள் தீர்மானத்தைச் சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் நுழைவுவாயிலை பங்கிட்டுக்கொண்டோம். இது மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு என அனைவரும் பாராட்டுகிறார்கள். பாராட்டுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. மதம் எதுவாக இருந்தாலும் மனிதம்தான் முக்கியம் என்பது எங்கள் கொள்கை” என்று புன்னகைத்தார்.

நுழைவுவாயில் மூலம் சமய ஒற்றுமையை பறைசாற்றிய மேலேகுற்றிமூடு மக்கள் மேன்மக்களே!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *