
நெல்லையை அடுத்த கீழ முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் செல்வசங்கர். பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராகச் செயல்பட்டு வருகிறார். அவரது மனைவி சரஸ்வதி, பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக உள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு (14-ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு அவரது வீட்டில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது.
வீட்டுக்குள் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்துச் சிதறியதில் பொருள்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதன்படி, அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சர்வ சாதாரணமாக தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை பாட்டிகளில் நிரப்பி, பெட்ரோல் குண்டுகளாக வீட்டுக்குள் வீசுவது தெரியவந்தது.
பின்னர், அதே பைக்கில் நான்கு பேரும் ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் முகத்தில் துணி கட்டியிருந்ததாலும், அதிகாலை இருட்டாக இருந்ததாலும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அடுத்தடுத்த சம்பவம்..!
இதனிடையே, அதே கும்பல் நெல்லை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட டவுன் வயல்தெருவில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் பெட்ரோல் குண்டு வீசியது சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
ஒரே கும்பல் ஒரே நாளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் போலீஸாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
அதனால் அந்தக் கும்பலைப் பிடிக்க மாவட்ட காவல்துறை சார்பாக 5 தனிப்படைகளும் மாநகர காவல்துறை சார்பாக இரு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் தேடி வந்தனர்.
அதற்குள் அந்த கும்பல் நெல்லையில் இருந்து நான்குவழிச் சாலை மார்க்கமாக சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள ஏர்வாடி நகரத்துக்குச் சென்றுவிட்டது.

அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளைக் காட்டி மிரட்டியதுடன் அடித்து உதைத்து ரூ.20,000 ரொக்கப் பணத்தைப் பறித்ததோடு, ஓசியில் பெட்ரோல் போட்டுக் கொண்டு சென்றுவிட்டது.
குற்றவாளிகள் நால்வரும் முகத்தை துணியால் கட்டியிருந்த போதிலும், பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் அவர்களின் படம் துல்லியமாக இருந்தது. அதைக் கொண்டு போலீஸார் பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடத்தினர்.
அடையாளம் தெரிந்தது
காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த கும்பல் குறித்த விவரம் தெரியவந்தது. அவர்கள், டவுன் மேலநத்தம் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ், பொன்னாக்குடியை சேர்ந்த கார்த்தி, முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஆகிய 4 பேர் என்பது அடையாளம் தெரிய வந்ததும் அந்த கும்பலைப் பிடிக்கப் போலீஸார் திட்டமிட்டனர்.
அவர்கள் திருவனந்தபுரம் பகுதியில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்த நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் கீதா தலைமையிலான தனிப்படையினர் கேரளாவுக்குச் சென்றனர்.

திருவனந்தபுரத்தில் முகாமிட்ட தனிப்படை போலீஸார் அங்கு முகாமிட்டு தீவிரமாகத் தேடிய நிலையில் நேற்று இரவு ஒரு விடுதியில் பதுங்கியிருந்த 3 பேரைக் கைது செய்து, நெல்லைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள மற்றொரு இளஞ்சிறாரை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.