• May 16, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம்,, ராஜபாளையம் நகர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அ.தி.மு.க. வெற்றி பெறும். மத்திய அரசுக்கு யோசனை கூறி, நிதிகளை பெறும் வகையில் எடப்பாடி பழனிசாமி நல்ல பொறுப்புக்கு வரும் காலம் நெருங்கி வருகிறது. அ.தி.மு.க. மேல் நம்பிக்கை இருப்பதால்தான் அ.தி.மு.க.வில் உறுப்பினராய் இணைவதற்கு அதிகளவில் பெண்கள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை வழங்குகின்றனர். அ.தி.மு.க.வினர் பெண்களை தாயாக நேசிக்கக் கூடியவர்கள்.‌

ராஜேந்திர பாலாஜி

தி.மு.க.வினரிடம் பெண்கள் செல் நம்பர் வழங்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் களவாணித்தனம் செய்வார்கள். மக்களை ஏமாற்றித்தான் தி.மு.க. ஓட்டு வாங்கியது. சொத்து வரி உயர்வுக்கு பின்பு வரி கட்டாதவர்கள் வீடுகளுக்கு முன் குப்பையை கொட்டுவது, கதவை பூட்டுவது போன்ற அகராதித்தனம், அடாவடித்தனம் அ.தி.மு.க. ஆட்சியில் நடக்கவில்லை. உழைப்பவர்களை சுரண்டி பிழைக்கும் இயக்கமாக தி.மு.க. மாறிவிட்டது. தி.மு.க.வில் அதிகார வர்க்கத்தினர் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாலை வியாபாரிகளிடம் கமிஷன் வாங்கும் இழிநிலை மாற வேண்டும் என்றால் தி.மு.க ஆட்சி ஒழிய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தான் தி.மு.க. ஆட்சியில் வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். வேஷம் போடும் தி.மு.க.வினரின் நாடக வேஷத்தை கலைத்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

கூட்டம்

அனைத்து இடங்களிலும் கமிஷன், கரெப்ஷன், கலெக்சன் இதுதான் தி.மு.க.வின் குறிக்கோள். தி.மு.க. ஆட்சி, வெற்று பகட்டுக்காக நடைபெறுகிறது. ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டனர். ஆனால் தெருக்கோடிக்கு வந்து மக்களை சந்திப்பது கிடையாது. வரியை போட்டு வசூல் செய்து சாப்பிடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். தி.மு.க.வினரின் ஆட்டம்பாட்டமெல்லாம் முடிவுக்கு வரப்போகிறது. ராஜபாளையத்தில், பழைய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கிறேன் என்ற பெயரில் அனைத்து இடங்களிலும் கடைகள் கட்டி உள்ளனர். மக்கள் காத்திருப்பதற்கும், பேருந்து வருவதற்கும் இடம் குறைந்துவிட்டது. ஜன நெருக்கடியை அதிகரித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் அரசுதான் தி.மு.க. ஏலம் விட்டு பணம் பார்ப்பதற்காகவும், திமுகவினர் ஆளுக்கொரு கடை நடத்துவதற்காகவும் பேருந்து நிலையத்தை பாழாக்கி விட்டனர்.

ஏழை மக்கள் 25,000 வாடகை கொடுத்து கடை நடத்த முடியுமா?. அதுபோக இரண்டு லட்சம் ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும். மேலும் கட்சியினருக்கு தனியாக பணம் வழங்க வேண்டும். ஊழல் செய்து சேர்த்த பணம் நிற்காது. ஏழையின் வயிற்றில் அடித்து சேர்த்த பணம் கண்டிப்பாக நிலைக்காது. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். வியாபாரம் பார்த்து வரும் லாபத்தில் வீடு கட்டலாம். ஆனால் கொள்ளையடித்த பணத்தில் சுரங்கம் தோண்டி வீடு கட்டுகிறார் ஒருவர். வாக்களித்த மக்களுக்கு நியாயமாக நம்பிக்கையாக அவர்கள் நடக்கவில்லை” என பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *