
உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்குமார்- காஜல் தம்பதி. இவர்களுக்கு ஆர்கேஷ் (4) என்ற மகனும் மஹி (1) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர், வீரபாண்டி, சுண்டமேடு பகுதியில் உள்ள தனியார் டையிங் காம்பவுண்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில், ரமேஷ்குமார் வேலைக்குச் சென்ற நிலையில் காஜல் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது 1 வயது பெண் குழந்தை மஹி காம்பவுண்டில் விளையாடி கொண்டிருந்தார். தீடிரென குழந்தையை காணவில்லை. அப்போது தேடிப்பார்த்தபோது காம்பவுண்டில் இருந்த குப்பைத் தொட்டியில் மஹி விழுந்து கிடந்துள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மஹியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மஹி ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸாரிடம் பேசியபோது, “ஒரு வயது குழந்தை தவழ்ந்து சென்று குப்பைத் தொட்டியில் விழுந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. யாராவது குழந்தையைத் தூக்கிச் சென்று குப்பைத் தொட்டியில் போட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். ஒரு வயது பெண் குழந்தை குப்பை தொட்டியில் விழுந்து பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.