
‘கிஸ்ஸா 47’ என்ற யூடியூப் சேனலில் திரைப்பட விமர்சனம் செய்கிறார் கிருஷ்ணா (சந்தானம்). அவருக்கு இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) என்பவரிடமிருந்து குடும்பத்துடன் அவரது படத்தைக் காண வருமாறு சிறப்பு அழைப்பு வருகிறது.
அதன் பிறகுதான் திரைப்பட விமர்சகர்களைத் தேடிக் கொல்லும் விநோதமான பேயாக ஹிட்ச்காக் இருதயராஜ் இருப்பது தெரியவருகிறது.
அப்படி ஒரு விமர்சகரான கிருஷ்ணாவைப் பழிவாங்க, திரையரங்கில் ஓடும் திரைப்படத்துக்குள்ளேயே ஒரு பாத்திரமாக அனுப்பிவிடுகிறார் இருதயராஜ்.
அங்கு, அவரது குடும்பத்தினர் திரைப்படக் கதாபாத்திரங்களாகச் சிக்கியிருப்பதையும், காதலி காணாமல் போயிருப்பதையும் கிருஷ்ணா கண்டறிகிறார்.
இந்த மர்மங்களைத் தீர்த்து, திரையில் ஓடும் படத்திலிருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதே ‘டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் கதை.
வார்த்தைக்கு வார்த்தை ‘ப்ரோ’ எனப் பேசும் வாய்ஸ் மாடுலேஷன், உடல் மொழி என வித்தியாசமான ராப் பாணியில் விமர்சனம் செய்யும் யோ-யோ கதாபாத்திரத்தில் சந்தானம்.
ஆனால், இது பொருந்தாத பிம்பமாக, அவரைத் தனியாக நிற்கவைக்கிறது.
காமெடி ஒன்லைனர்கள், நக்கல், நையாண்டி ஆகியவை 20:80 என்ற விகிதத்தில் மட்டுமே வெற்றி பெறுகின்றன.
நாயகி கீத்திகாவுக்குப் பேயாக அந்தரத்தில் பறக்கும் காட்சிகளில் மட்டுமே சிறிது வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது; அதைக் குறையின்றி செய்திருக்கிறார்.
கஸ்தூரி, காமெடி என்ற பெயரில் தெலுங்கு பேசுவதன் மூலம் சிரிக்க வைக்க முயல்கிறார், ஆனால் ம்ஹூம்ம்! பேயாக வரும் செல்வராகவனும், ராகவனாக வரும் கௌதம் வாசுதேவ் மேனனும், பொருந்தாத வேடங்களில் மாறுவேடப் போட்டியில் பங்கேற்பது போல அங்கும் இங்கும் உலாவுகிறார்கள்.
செல்வராகவனின் பன்ச் வசனங்கள் ‘எதற்கு’ என்று தோன்றவைக்கின்றன. தனது ஒன்லைனர்களால் ராஜேந்திரன் சில பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார்.
இவர்கள் தவிர நிழல்கள் ரவி, மாறன், கிங்ஸ்லி ஆகியோரும் ‘சிரிக்கலாம் வாங்க’ போட்டிக்கு அரைமனதுடன் நம்மை அழைக்கிறார்கள்.

இரு வேறுபட்ட மாய உலகங்கள், அதில் ஏற்படும் ஒளி மாற்றங்கள் எனச் சிறப்பான ஒளிப்பதிவை தீபக் குமார் பதி வழங்கியிருக்கிறார்.
சினிமா பாரடைஸ் திரையரங்கின் வண்ணங்களும், கப்பலுக்குள் இருக்கும் காட்சிகளும் படத்தின் தரத்தை உயர்த்துகின்றன.
இரவு பகலாக மாறும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், VFX காட்சிகள் ஆகியவற்றை படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கிறார்.
இருப்பினும், இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். நாயகன் ‘ராப்பர்’ என்ற கதாபாத்திரத்தில் இருக்க, அடித்து ஆடியிருக்க வேண்டிய ஆப்ரோவின் இசை சோபிக்கமல் போனது ஏமாற்றமே!
நரமாமிசம் தின்பவர்கள், செடி முளைத்த பங்களா, டைரி, தொழிற்சாலை செட்-அப் எனப் படம் முழுவதும் கூடுதல் விவரங்களைக் கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன் கவனமாகக் கையாண்டிருக்கிறார்.
படம் தொடங்கியவுடன் பேன்டஸி காட்சிகள் சுவாரஸ்யத்தைத் தருகின்றன. சந்தானம் திரைக்குள் சிக்கிக்கொள்ளும் காட்சியிலிருந்து, கேமராவைப் பார்த்துப் பேசுவது, பின்னணி இசை, சப் டைட்டில் என ஒரு படத்துக்குள் படமாக இருப்பது புதிய அனுபவம்.
வீண் பேச்சு பாபு கதாபாத்திரமும் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது. இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், புத்திசாலித்தனமான பல யோசனைகளை அடுக்கியிருக்கிறார்.

ஆனால், இவை ஒரு எல்லைக்கு மேல் சிரிப்பை உருவாக்காமல், கதாபாத்திரங்கள் படத்தில் சிக்கிக்கொண்டது போலப் பார்வையாளர்களான நம்மையும் சிக்க வைத்த உணர்வை வரவைக்கின்றன.
இருந்தாலும், ‘மஞ்சுமல் பாய்ஸ்’ பாணியிலான ஸ்பூஃப் காட்சிகள் வெற்றி பெறுகின்றன.
இரண்டாம் பாதி தொடங்கியவுடன் தீவு, பங்களா, கார் ஷெட் எனப் பல இடங்களுக்கு நகைச்சுவைக்காக நகரும் திரைக்கதை, ஏனோ தன் இலக்கை அடையவில்லை!
முன்பு DD யூனிவர்ஸின் நகைச்சுவை பாணிக்கு நேர்மாறாக, கழிவறை நகைச்சுவைகள், இயற்கை உபாதைகள் ஆகியவை அதீதமாகப் பயன்படுத்தப்பட்டு, சிரிப்புக்குப் பதிலாக முகச்சுளிப்பை உருவாக்குகின்றன.

படத்தின் நீளமும் அயர்ச்சியைத் தருகிறது. பல புதிய ஐடியாக்களை எழுத்தில் கொண்டுவந்த இயக்குநர், அவற்றை ஜாலியான திரையனுபவமாக மாற்றுவதில் மிகவும் தடுமாறியிருக்கிறார்.
படம் நெடுக திரை விமர்சகர்களைக் கேள்விகேட்டு, இறுதியில் அவர்களுக்குப் படத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பதில் இந்த படக்குழுவுக்கும் பொருந்தும்!

மொத்தத்தில், புதிய யோசனைகளுடன், தொழில்நுட்ப ரீதியாகச் சிறப்பான அனுபவத்தைத் தர முயன்ற இந்தப் படம், திரைக்கதையில் சற்று தடுமாறி, ‘நெக்ஸ்ட் லெவலுக்கு’ செல்ல முடியாமல் பின்னோக்கி நகர்ந்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…