
புதுடெல்லி: நாட்டின் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களை நடத்த இருக்கிறது. மே 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இது நடைபெற இருக்கிறது.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 2-ம் தேதி நடந்த தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் மூண்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதலும் வலுத்தது. இதனிடையே அமெரிக்கா தலையிட்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைத்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது புகார் கூறத் தொடங்கியுள்ளன.