
அமமுக துணைபொதுச்செயலாளர் ரெங்கசாமி. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தஞ்சாவூர், தளவாய்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு வினோ பாரத், மனோ பாரத் என இரண்டு மகன்கள் உள்ளனர். அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்தல், ரியல் எஸ்டேட், தார் உருக்கும் ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2011 முதல் 2016 வரை ரெங்கசாமி எம்.எல்.ஏ-வாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக பத்திரங்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் தளவாய்பாளையத்தில் உள்ள ரெங்கசாமி வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர்.
வீட்டில் இருந்தவர்கள் ரெங்கசாமி சென்னையில் இருப்பதாக சொன்னார்கள். உடனே அவரை வரச்சொல்லுங்கள் என்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுப்பட்டனர். இதையறிந்த அமமுகவினர் மற்றும் ரெங்கசாமியின் உறவினர்கள் வீட்டின் முன்பு குவிந்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், சகிகலாவின் உறவினரான ரெங்கசாமி கடந்த 2011 முதல் 2016 வரை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர். 2016 தேர்தலில் மீண்டும் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு பதிவுக்கு முதல் நாள் இரவு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரில் தேர்தல் ஆணையம் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தலை நிறுத்தியது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் கவனம் பெற்றவர் ரெங்கசாமி.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ரெங்கசாமி வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வானார். டி.டி.வி.தினகரன் அமமுக தொடங்கிய பிறகு அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்தார். அதன் பிறகு தினகரனின் விசுவாசியாக இருந்து வருகிறார். ரெங்கசாமி எம்.எல்.வாக இருந்த போது பல்வேறு அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார்.

மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து வந்தார். இவருடைய தம்பி சுரேஷ் மற்றும் இரண்டு மகன்கள் தொழில்களை கவனித்து வந்தனர். தார் பிளாண்ட் உள்ளிட்டவையும் நடத்தி வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு ரெங்கசாமி கடனில் இருப்பதாகவும் அமமுகவினரால் பேசப்பட்டது. மீண்டும் அதிமுகவில் இணையப்போகிறார் என பேச்சுக்கள் கிளம்பி பின்னர் அடங்கும். தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதன் பணிகளை ரெங்கசாமி முன் நின்று கவனிப்பதாகவும் சொல்கிறார்கள்.
தற்போது, அமமுக கட்சி பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏவாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“சம்பாதிச்சவங்களை விட்டு விட்டு ஒண்ணுமே இல்லாதவர்கிட்ட வந்து சோதனை நடத்துகிறார்கள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததற்கான ஆவணம் இல்லாமல் எப்படி லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்துவார்கள்” என்றும் அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.