• May 16, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதிகளுக்கான 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முந்தினம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை திமுக 2026 தேர்தல் ஆலோசனை கூட்டம்

இதில் அமைச்சர் நேரு, திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிலையில் இப்போதே, பட்டுக்கோட்டை தொகுதியில் திமுகவில் சீட் பெறுவதற்கான முயற்சியில் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. ஒவ்வொருவரும் நெருக்கமானவர்கள் மூலம் தங்களை பற்றி சமூக வலைதளங்களில் ப்ரோமோ செய்வதிலும் கவனம் செலுத்த தொடங்கியிருப்பதால் அரசியல் களத்தில் பரபரவென காணப்படுகிறது பட்டுக்கோட்டை.

இது குறித்து திமுக தரப்பை சேர்ந்த சிலரிடம் பேசினோம், `பட்டுக்கோட்டை தொகுதியின் சிட்டிங் திமுக எம்.எல்.ஏ அண்ணாதுரை. இவருக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு தலைமை போட்டியிட வாய்ப்பு வழங்கியது. அதன் பின்னர் மாவட்ட செயலாளராகவும் நியமனம் செய்தது. கட்சியினரை ஒருங்கிணைத்து செயல்படாதது, டி.எஸ்.பி ஒருவரை மிரட்டியது உட்பட இவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. திமுகவினர் சிலரே இவர் மீது பல புகார்களை தலைமைக்கு அனுப்பினர்.

பட்டுக்கோட்டை

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அண்ணாதுரையை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்கி விட்டு பழனிவேல் என்பவரை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்தது தலைமை. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அண்ணாதுரை கலந்து கொள்ளாதது பல விவாதங்களை கிளப்பியது. ஆனால் அவர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக முறையாக தகவல் அனுப்பி விட்டதாக சொல்கிறார்கள்.

இப்போதைய சூழலை வைத்து பார்க்கும் போது, மீண்டும் அண்ணாத்துரைக்கு சீட்டு கிடைக்க வாய்ப்பு குறைவே என்ற நிலையே நிலவுகிறது. அதை பயன்படுத்தி கொண்டு பலரும் சீட்டுக்கான ரேஸில் வேகமெடுத்துள்ளனர். அந்தவகையில் சூரப்பள்ளம் விஜயகுமார், பழஞ்சூர் செல்வம், பார்த்திபன், ராமநாதன், மாளியக்காடு ரமேஷ், லண்டன் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் ரேஸில் இடம் பெறுகின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ என்பதால் அண்ணாத்துரையும் மீண்டும் முயற்சி செய்வார்.

வேட்பாளர் ரேஸில் இருக்கும் திமுக நிர்வாகிகள்

உதயநிதி ஸ்டாலினின் அறிமுகம் பெற்றவர் விஜயகுமார். இவர் சிங்கப்பூரில் தொழில் செய்து வருவதாக சொல்கிறார்கள். திமுகவினரிடையே பெரிய அறிமுகம் இல்லாமல் இருந்தார். கஜா புயல் சமயத்தில் உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்து சூரப்பள்ளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் கட்சியினர் மத்தியில் கவனம் பெற்றார். கட்சியில் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொறுப்பில் இருக்கும் விஜயகுமார் தனக்கு இருக்கும் மேல்மட்ட செல்வாக்கை வைத்து வைத்து சீட் பெற்று விட தீவிரமாக மெனக்கெடுகிறார்.

பழஞ்சூர் செல்வம், தொழிலதிபரான இவருக்கு நேரு உள்ளிட்ட பலருடன் நெருங்கிய, நேரடி தொடர்பு உள்ளது. உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்து தன் இல்ல திருமண விழாவை தடபுடலாக நடத்தினார். அப்போதே நம்பிக்கையோடு இருங்கனு கைகளை பற்றி உதயநிதி சொன்னதாக பலரிடம் பகிர்ந்திருக்கிறார். பெரும் செல்வந்தரான பழஞ்சூர் செல்வம் பெயர் கடந்த தேர்தலிலேயே பலமாக அடிப்பட்டது. நேற்று கூட்டத்திற்கு வந்த நேரு உள்ளிட்டவர்களுக்கு இவர் வீட்டில் இருந்து உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தளவுக்கு கட்சியின் உயர்மட்ட பொறுப்பில் உள்ளவர்களுடன் நெருக்கமாக இருக்கிறார்.

ஆலோசனை கூட்டத்தில் நேரு

இந்த முறை ஏமாற்றம் இருக்காது என்கிற நம்பிக்கையுடன் உதயநிதியை சுற்றுகிறார் ஒன்றிய செயலாளரான பார்த்திபன். கட்சியின் விசுவாசி. கொரோனா சமயத்தில் தன் சொந்த பணத்தை செலவு செய்து மக்கள் நலப்பணியில் ஈடுப்பட்டார். அமைச்சர்கள் பலருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. சிட்டிங்க் எம்.எ.ஏ அன்ணாதுரைக்கும், இவருக்கும் ஏழாம் பொருத்தம். கடந்த முறை கிடைக்க வேண்டிய வாய்ப்பு நூலிழையில் கை நழுவியதாக சொல்கிறார்கள். கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் தனக்கு இந்த முறை தலைமை வாய்ப்பளிக்கும் என நம்புகிறார்.

மாவட்ட துணை செயலாளரான மாளியக்காடு ரமேஷ், சைலண்டாக மூவ் செய்து வருகிறார். தன் சமூக வாக்குகள் நிறைந்த பட்டுக்கோட்டையை தனக்கு ஒதுக்க வேண்டும் என்கிறார்.

இதே போல் முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்ரமணியன் மகன் ராமநாதன், மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், அதிராம்பட்டினம் அஸ்லாம் உள்ளிட்ட பலர் சீட் பெறுவதற்காக காய் நகர்த்துகின்றனர். பட்டுக்கோட்டை தொகுதியில் மட்டும் 25 பேருக்கு மேல் விருப்ப மனு தாக்கல் செய்யத் தயாராகி விட்டனர். இதில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவர்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். குறிப்பாக வேட்பாளர் தேர்வில் உதயநிதி ஸ்டாலின் முக்கிய இடம் பிடிப்பார். அவர் டிக் செய்யக் கூடிய நபர் தான் வேட்பாளர் என கட்சியினர் பேசுகின்றனர்.

ரேஸில் இடம் பிடித்திருப்பவர்கள் வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர் வருவதற்கு, நெருக்கமான முக்கியஸ்தர்கள் மூலம் தீவிர முயற்சில் இருக்கின்றனர். சீட்டை பெற பலத்த போட்டி நிலவி வருவதால் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில் பட்டுக்கோட்டை தொகுதி இப்போதே பரபரக்க தொடங்கி விட்டது என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *