• May 16, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஆடிட்டர் ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தவர் ராஜேஷ். இதனால் ராஜேஷ் மீது ஆடிட்டருக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடிட்டர் தனது டிரைவர் ராஜேஷிடம் பேக் ஒன்றை கொடுத்து அதனை தனது காரில் வைக்கும்படியும், அதில் பணம் இருப்பதாகவும் கூறி கொடுத்தார்.

மாயமான டிரைவர்

பணம் இருந்த பேக்கை கொடுத்து அனுப்பிய பிறகு சிறிது நேரம் கழித்து ஆடிட்டர் வங்கிக்கு செல்வதற்காக வீட்டு படிக்கட்டில் இறங்கி கீழே வந்தார். அங்கு காரையோ அல்லது டிரைவரையோ காணவில்லை. உடனே ஆடிட்டர் தனது டிரைவருக்கு போன் செய்து பார்த்தார். போன் எடுத்து பேசிய ராஜேஷ் மருந்து வாங்க வந்திருப்பதாகவும், 10 நிமிடத்தில் வந்துவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

டிரைவர் (சித்திரிப்பு படம்)

ஆனால் சொன்னபடி 10 நிமிடத்தில் வரவில்லை. இதையடுத்து ஆடிட்டர் அவசரமாக தனது அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவரது கார் நின்றது. ஆனால் ராஜேஷை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஆடிட்டர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை தேடி வந்தனர். அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

ராஜேஷ் போலீஸில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். அவர் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்தனர். ஆடிட்டர் கொடுத்த அந்த பணத்தில் ஒரு லட்சத்திற்கு தனது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கியதாக தெரிவித்தார்.

பணத்தை திரும்ப பெற முடியாது!

எஞ்சிய பணத்தை கோயில் உண்டியலில் போட்டுவிட்டதாக தெரிவித்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயில் உண்டியலில் போட்ட பணத்தை திரும்ப பெற முடியாது. கோயில் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் கோயிலுக்குத்தான் சொந்தமாகும். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் திணறிக்கொண்டிருக்கின்றனர்.

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக காரில் வைக்க சொன்ன பணத்தை கோயில் உண்டியலில் போட்ட டிரைவர் மீது போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் சென்னை திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் ஒரு லட்சம் மதிப்புள்ள ஐபோன் விழுந்துவிட்டது. அதனை கோயில் நிர்வாகம் திரும்ப கொடுக்க மறுத்துவிட்டது. அது கோயிலுக்கு சொந்தம் என்று கோயில் நிர்வாகம் சொல்லிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *