
ஐபிஎல் கொண்டாட்டம் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சிறைக் கைதிகளின் உடல் மற்றும் மன நலன்களுக்காக சிறை வளாகத்துக்குள்ளேயே ஜெயில் பிரீமியர் லீக் (JPL) என்ற பெயரில் கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது மதுரா சிறை நிர்வாகம்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்தத் தொடரில், மதுரா சிறைச்சாலையின் வெவ்வேறு முகாம்களிலிருந்து மொத்தம் எட்டு அணிகள் இடம்பெற்றன. குரூப் ஏ, குரூப் பி என இரண்டு குரூப்பில் தலா நான்கு அணிகள் இடம்பெற்றன.
#WATCH | Uttar Pradesh | To enhance the talent of the prisoners, improve their physical health and relieve them from mental stress, Jail Premier League was organized on the lines of IPL among the prisoners in Mathura Jail pic.twitter.com/ACofTYmRgi
— ANI (@ANI) May 15, 2025
கைதிகள் அனைவரும் விளையாட்டு வீரர்களாகக் களமிறங்கினர். ஒரு அணி தனது குரூப்பில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும் வகையில் 12 லீக் போட்டிகள் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இரண்டு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்குள் அரையிறுதி ஆட்டங்கள் நடத்தப்பட்டது. அரையிறுதிப் போட்டிகளின் முடிவில் நைட்ரைடர்ஸ் அணியும், கேபிடல்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதின.
இறுதிபோட்டியில், நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கௌஷல் என்ற வீரர் ஆட்ட நாயகன் விருதோடு தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
அதிக விக்கெட் எடுத்தவராக ஊதா நிற தொப்பியை பங்கஜ் என்பவரும், அதிக ரன்கள் அடித்தவராக ஆரஞ்சு நிற தொப்பியை பூரா என்பவரும் வென்றனர்.
சிறைக் கைதிகளின் உடல் மற்றும் மன நலன்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இத்தகைய முயற்சி குறித்து எப்சியா சிறை கண்காணிப்பாளர் அன்ஷுமான் கார்க், “சுவர்களுக்குள் அடங்கிய வாழ்க்கையில் சில தருணங்கள் சுதந்திர உணர்வைத் தரும் என்பது இதன் நோக்கம்.
இது வெறும் இறுதிப் போட்டி அல்ல, நம்பிக்கையின் வெற்றி, தன்னம்பிக்கையின் ஓட்டம். மைதானம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், வீரர்கள் மாறிவிட்டனர்.
இதில், ஒவ்வொரு ரன்னும், ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு வெற்றியும் மீண்டும் தன்னை நிரூபிக்கும் முயற்சி.” என்று கூறினார்.