
அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள படைத்தலைவன் படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பிரேமலாதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சசிக்குமார், ஏ. ஆர் முருகதாஸ், கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் படைத்தலைவன் படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் பேசியதாவது..
”இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையை கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம்.
படைத்தலைவன் படத்தை கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேற மாதிரியான கதைகளத்தை கொண்டுள்ளது” என்று கூறினார் சண்முக பாண்டியன்.
”என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான்..” படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவருடன் நடித்த மணியன் என்ற யானை குறித்தும் பகிர்ந்துக்கொண்டார்.
“எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாக கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை, இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன்.
இந்த படம் எடுக்கும் போது படப்பிடிப்பில் பல்வேறு சவால்களை சந்தித்தேன். மழை பெய்ததால் ஐந்து நாட்கள் படப்பிடிப்பு இல்லாமல் இருந்தது, பின்னர் மழை வைத்து படப்பிடிப்பை திட்டமிட்டபோது மழை இல்லை..” இப்படி சிறிய சிறிய சவால்கள் குறித்து பேசியிருந்தார் சண்முக பாண்டியன்.

“படம் ஓரளவுக்கு முடிந்துவிட்டது. ஆனால் இந்த படத்தின் மூலம் பல விஷயங்களை நானும் இயக்குநர் அன்பும் கற்றுக்கொண்டோம். பல்வேறு தடைகள் இந்த படத்துக்கு இருந்தன. அதையும் மீறி மே 23ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. நிச்சயம் இந்த படம் குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்” என்று சண்முக பாண்டியன் கூறினார்.
மேலும், “ரமணா 2 படத்தில் என்னை நடிக்க வைப்பதாக கூறியதற்கு மிகவும் நன்றி. அப்பாவின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் ரமணா, அந்தப் படத்திற்காக என்னை அழைத்ததற்கு நன்றி” என்று ஏ ஆர் முருகதாஸுக்கு நன்றி தெரிவித்தார் சண்முக பாண்டியன்.