• May 15, 2025
  • NewsEditor
  • 0

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் தாக்குதல்களையும் இந்தியா சாதூர்யமாக எதிர்கொண்டது.

இந்தத் தாக்குதல்கள் தொடா்பான அதிகாரபூா்வ விவரங்களை பத்திரிகையாளா் சந்திப்புகளில் கடற்படை கமாண்டோ ரகு நாயா், விங் கமாண்டா் வியோமிகா சிங் மற்றும் கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் இணைந்து வெளியிட்டு வந்தனா்.

சோஃபியா குரேஷி, வியோமிகா சிங்

இந்த நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்தியப் பிரதேசத்தின் பழங்குடி நலத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா, “பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்” எனப் பேசினார்.

கா்னல் சோஃபியா குரேஷி இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரைத் தீவிரவாதிகளின் சகோதரி என சித்திரிக்கும் வகையில் அமைச்சா் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த விவகாரம் இந்தியளவில் பேசுபொருளானது. பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு ஏற்ற மத்தியப் பிரதேச உயா் நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், அனுராதா சுக்லா அமா்வு,“பா.ஜ.க அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் கருத்து இந்திய சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்படுகிறது. சமூக நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா
பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா

நேர்மை, ஒழுக்கம், தியாகம், தன்னலமற்ற தன்மை, வெல்ல முடியாத துணிச்சலை பிரதிபலிக்கும் இந்த நாட்டின் கடைசி அமைப்பு ராணுவம். எனவே, அமைச்சருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இதைக் கடைப்பிடிக்கத் தவறினால் அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து எழுந்த அழுத்தத்தால் பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா, “சகோதரி சோபியா சாதி, மதத்தை கடந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் எங்கள் சொந்த சகோதரியை விட மதிக்கப்படுகிறார். தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவைக்காக நான் அவரை வணங்குகிறேன். எங்கள் கனவில் கூட அவரை அவமதிப்பதை நினைத்துப் பார்க்க முடியாது.

Court

இருப்பினும், என் வார்த்தைகள் சமூகத்தையும் மதத்தையும் புண்படுத்தியிருந்தால், பத்து முறை மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதைப் பார்த்த நீதிபதிகள், “பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவை காப்பாற்றும் நோக்கில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

அமைச்சர் விஜய் ஷா மீதான காவல் துறை விசாரணையை இந்த நீதிமன்றம் கண்காணிக்கும்’ எனத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கர்னல் சோபியா குரேஷி குறித்துக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.

பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா
பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா

இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “அமைச்சரின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை… என்ன மாதிரியான கருத்துக்களைச் சொல்கிறீர்கள்? அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்கள் கொஞ்சமாவது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *