
ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், இந்தியா – அமெரிக்கா வர்த்தகம் குறித்தும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது…
“நாம் பாகிஸ்தானின் ராணுவத்தை குறி வைக்கவில்லை. அதனால், அவர்கள் இந்தத் தாக்குதலில் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டார்கள்.
சாட்டிலைட் புகைப்படங்கள் நம்மால் அவர்களுக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதையும், அவர்களால் நமக்கு எவ்வளவு குறைந்த சேதம் ஆனது என்பதையும் காட்டியது.
மே 7-ம் தேதி யாரால் அமைதியாக இருக்க முடியவில்லையோ, அவர்களுக்குத்தான் மே 10-ம் தேதி பேச்சுவார்த்தை தேவைப்பட்டது. இதன் மூலம் யார் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று நினைத்தார்கள் என்பது தெளிவாகிறது” என்று பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா அமெரிக்க பொருட்கள் மீது வரி எதுவும் போடாது என்று ஒப்புகொண்டுள்ளதாக பேசி வருகிறார். இந்த நேரத்தில், இந்தியா – அமெரிக்கா வணிகம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் ஜெய்சங்கர்.
“இந்தியா – அமெரிக்கா இடையில் வர்த்தக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.
இவை சிக்கலான பேச்சுவார்த்தைகள் ஆகும். எல்லாம் நடக்கும் வரை எந்த முடிவும் எடுக்கப்படாது. எந்த வணிக ஒப்பந்தமாக இருந்தாலும் இரு நாடுகளுக்கும் சாதகமாக இருக்கும். அது தான் வர்த்தக பேச்சுவார்த்தையில் நமது எதிர்பார்ப்பு. ஒப்பந்தம் முடிவுக்கு வரும் வரை, அது குறித்து எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் முன்கூட்டியே எடுக்கப்படுவது ஆகும்” என்று கூறியுள்ளார்.