
ராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் அருகிலுள்ள புதுக்குடியானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி பாலு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், பாலுவின் வீட்டுக்கு எதிரே வசிக்கும் பாலுவின் சித்தப்பா முறை உறவினர் மகன் விஜய் என்பவருடன் புவனேஸ்வரிக்குத் திருமணம் தாண்டிய தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. விஜய்க்கு புவனேஸ்வரி அண்ணி உறவுமுறை. இவர்களின் இந்த தொடர்பை நாளடைவில் தெரிந்துகொண்ட பாலு ஆத்திரப்பட்டு, மனைவியிடம் சண்டைப் போட்டிருக்கிறார்.
இது தொடர்பான தகராறில் புவனேஸ்வரி கடந்த 9 மாதங்களுக்கு முன்பே வாலாஜாபேட்டை அருகே கீழ் புதுப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகும் விஜய் உடனான உறவைக் கைவிடாமல் இருந்திருக்கிறார் புவனேஸ்வரி. இதனால் கர்ப்பமடைந்திருக்கிறார் அவர். தனது மனைவி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்ட பாலு கொதித்துபோயிருக்கிறார். நேற்று இரவு ஆத்திரத்தில், கத்தியை எடுத்துக்கொண்டு கீழ் புதுப்பேட்டை பகுதியிலுள்ள மாமியார் வீட்டுக்குச் சென்றார்.
மனைவி புவனேஸ்வரியை தாக்கி கத்தியால் குத்த முயன்றபோது, மாமியார் பார்வதி பாலுவை தடுத்து வெளியே தள்ளிவிட முயன்றிருக்கிறார். இதனால், ஆத்திரத்துக்குள்ளான பாலு மாமியார் பார்வதியை குத்தி கொலை செய்தார். இதற்கிடையே, கணவரிடமிருந்து தப்பித்து மனைவி புவனேஸ்வரி அங்கிருந்து ஓடிவிட்டார். அதைத் தொடர்ந்து, தனது சித்தப்பா மகனை தீர்த்துகட்டுவதற்காக தனது கிராமத்துக்கே திரும்பினார் பாலு. சித்தப்பா மகன் விஜய் வீட்டில் இல்லை. ஆனாலும், வீட்டில் இருந்த சித்தப்பா அண்ணாமலை, சித்தி ராஜேஸ்வரியை இரும்பு ராடால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார்.

இது தொடர்பாக, தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த கொண்டப்பாளையம் போலீஸார் பாலுவைக் கைது செய்தனர். அப்போது பாலு தப்பி ஓட முயன்றதில் தடுக்கி விழுந்தார். இதில், பாலுவுக்கு காலில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருகிறார் கொலையாளி பாலு. இதையடுத்து, கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். காயமடைந்து தப்பிஓடிய புவனேஸ்வரியையும் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.