
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா ஏம்பல் அருகில் உள்ள வேளாணி கிராமத்தில் வசிப்பவர் சத்யராஜ். இவரது மூன்றாவது மகன் தேவரக்சன் என்பவரின் முதல் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது, அவர் வைத்த மதிய உணவு விருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துள்ளனர். அந்த மதிய விருந்தில் சிக்கன், மட்டன் மற்றும் முட்டை ஆகிய அசைவ உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. அந்த விருந்தில் மதிய உணவு சாப்பிட்டதிலிருந்து மாலை முதல் சில நபர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 30 நபர்கள் ஏம்பல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். மேலும், சிலர் சிவகங்கை மாவட்டம், சூரக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்த பிறந்தநாள் விருந்துக்காக 14 கிலோ வரை வெள்ளாட்டுக்கறியை செப்பாவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி குமார் என்பவரிடமும், 11 கிலோ கோழிக்கறியை சிறுகத்தான்குடி கிராமத்தைச் சேர்ந்த சோனமுத்து என்பவரது பிராய்லர் கடையிலிருந்தும் வாங்கியதாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த கருப்பையா (வயது:60) என்பவர் இறந்துபோயுள்ளார். தற்போது ஏம்பல் அரசு மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவர்கள் இருவர், ஆவுடையார் கோவில் காவல் ஆய்வாளர், ஏம்பல் உதவி ஆய்வாளர், ஏம்பல் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேற்படி விழா நடத்திய சத்யராஜ், தனது திருமணத்திற்கும் செப்பா வயல் குமாரிடம் தான் கறி வாங்கியதாகவும், அப்போதும் ஐந்து நபர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், கறிகளை வழங்கிய அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். பிறந்தநாள் அசைவ விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதோடு, அதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், ஏம்பல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.