
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, ஒன்றிய, நகர அமைப்புகளை பிரித்துவருகிறது தி.மு.க தலைமை. அதன்படி, வடகோடி மாவட்டத்திலுள்ள நகரத்தை இரண்டாகப் பிரித்து, தன்னுடைய ஆதரவாளர்களைப் பொறுப்பாளர்களாக நியமிக்க காய்நகர்த்துகிறாராம் மாவட்டப் பிரமுகர். அதற்கு, உள்ளூரில் கடுமையாக எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. எதிர்ப்பை சரிகட்டி தன்னுடைய ஆதரவாளர்களுக்குப் பதவிபெற, அறிவாலயத்தின் அமைப்புப் புள்ளி ஒருவருக்கு 25 லட்டுகளை காணிக்கையாகப் படைத்திருக்கிறாராம் அந்த மாவட்ட பிரமுகர்.
‘அந்த நகரத்தில் மட்டுமல்ல, இம்மாவட்டத்திலுள்ள பல ஒன்றிய, நகரங்களைப் பிரிக்கும் விவகாரத்திலும் ஏகப்பட்ட லட்டுகளை லவட்டியிருக்கிறார் அந்த அமைப்புப் புள்ளி. விவகாரம் தலைமைக்கு எட்டவே, ‘இனிப்புகளை வாங்கிக் கொண்டு போஸ்டிங் போட்டால், தேர்தல் நேரத்தில் யார் வேலைப் பார்ப்பார்கள்..?’ எனக் கடிந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், அமைப்புப் புள்ளி இன்னும் திருந்தியபாடில்லை’ என நொந்துகொள்கிறார்கள் வடகோடி மாவட்டத்தின் உடன்பிறப்புகள்!
தென்மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் முகமாக இருந்தவர், முன்பகை காரணமாக 13 ஆண்டுகளுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டார். அவர் தொடங்கிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்புக்கு வந்திருக்கும் அவருடைய பெண் வாரிசு, ஆக்டிவாக இயங்கிவருகிறார். கூட்டமைப்பை அரசியல் கட்சியாக வளர்த்தெடுக்கத் திட்டமிட்டிருக்கும் அந்த பெண் வாரிசு, வரும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கவும் ஆயத்தமாகி வருகிறாராம்.
‘இந்தச் சமுதாயத்திற்காக இரண்டு கட்சிகள் தொடர்ந்து இயங்குகின்றன. அந்தக் கட்சிகளில் முக்கியத்துவம் கிடைக்கப்பெறாதவர்கள், ஒதுக்கி வைக்கப்பட்டவர்களெல்லாம், அந்த பெண் வாரிசை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அந்தப் பெண் வாரிசு தொடங்கியிருக்கும் நிலையில், ‘அதெல்லாம் வேண்டாம்… அமைதியாய் வீட்டில் இருக்கச் சொல்லுங்கள்’ என்று குடும்ப உறவுகள் மூலமாகவே அவருக்குச் சில முக்கியஸ்தர்கள் அழுத்தம் கொடுக்கிறார்களாம். பெண் வாரிசின் அரசியல்ரீதியிலான வளர்ச்சி, சமுதாயம் சார்ந்து இயங்கும் இரண்டு கட்சிகளுக்கும் பெரிய அச்சுறுத்தலாகியிருக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!
கொங்கு மண்டலத்தில் புதிதாக முளைத்திருக்கும் சாமியார் ஒருவர், குறுகிய காலத்தில் பரபரவென பிரபலமடைந்து வருகிறாராம். அவரின் ஆசிரமத்துக்கு சித்திரை பௌர்ணமியையொட்டி மேதகு புள்ளிகள் சிலரே சென்று சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார்களாம். அதோடு, இந்த ஆன்மீகவாதியின் தந்தை காவல்துறையைச் சேர்ந்தவர் என்பதால், அங்கிருந்தும் சில உயரதிகாரிகள் ரகசியமாக சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகிறார்களாம். விரைவில் அந்த சாமியார் ஈரோட்டில் ஆசிரமம் அமைக்க உள்ளாராம். அவரின் இந்த திடீர் வளர்ச்சிக்கு பின்னால், ஏதோ மர்மம் இருப்பதாக உணரும் உளவுத்துறை, அவரைத் தீவிரமாகக் கண்காணிக்கிறதாம்!
தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்தில், இலைக்கட்சியின் ‘மாவீரன்’ பெயர்கொண்ட மாவட்டச் செயலாளர்மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார்களாம் ரத்தத்தின் ரத்தங்கள். கட்சியை வளர்த்தெடுக்க எவ்வித ஆர்வமும் காட்டாத அந்த ‘மாவீரன்’ பெயர்கொண்டவர், சூரியக் கட்சியினருடன் சேர்ந்து பிசினஸ் செய்வதிலேயே ஆர்வமாக இருக்கிறாராம். ‘சூரியக்கட்சியின் மாண்புமிகுவை எதிர்த்து அரசியல் செய்யவேண்டியவர், பிசினஸுக்காக மாண்புமிகுவிடம் சரணாகதி அடைந்துவிட்டார். இதுதொடர்பாக தலைமைக்கு பலமுறை புகாரளித்த போதும், அவரை அழைத்து ஒருவார்த்தைக்கூட இதுவரை கண்டிக்கவில்லை. இது தொடர்ந்தால், இந்த முறையும் அவர் ஆளுகைக்கு உட்பட்ட எந்தத் தொகுதியிலும் கட்சி ஜெயிக்கப்போவதில்லை’ என புலம்புகிறார்கள் இலைக்கட்சியின் சீனியர்கள்!
சின்னம் கிடைத்த குஷியில் தொகுதி வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதில் படு ஆர்வம் காட்டுகிறாராம் ‘கதைசொல்லி’ தலைவர். ‘நடிகர் கட்சியை எப்படியாவது முந்திவிட வேண்டும்… வாக்கு சதவீதத்தை எப்படியாவது தக்கவைக்க வேண்டும்…’ என ஏகப்பட்ட நெருக்கடிகள் இருப்பதால், ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகச் செய்கிறாராம். அந்த வகையில், செழிப்பான நிர்வாகிகளின் குடும்ப உறவுகளுக்கு சீட் கொடுக்கவும், நடிகர், நடிகைகள், சமூகச் செயற்பாட்டாளர்களைத் தலைநகரில் வேட்பாளர்களாகப் போட்டியிட வைக்கவும் ஆலோசித்திருக்கிறாராம்.
கட்சி நிர்வாகிகளைப் பார்க்கும்போதெல்லாம், `கிளை கட்டமைப்பு என்ன ஆச்சு… உன் ஊர்ல எத்தனை பேரைக் கட்சியில சேர்த்திருக்க..?’ எனத் துருவித் துருவி விசாரிக்கிறாராம். “முன்னெப்போதும் இல்லாத வகையில், கட்சிக்கென வாக்குகள் இருக்கும் தொகுதிகளுக்கு லட்டுகளை அனுப்பவும் முடிவெடுத்திருக்கிறார்” என்கிறார்கள் தம்பிகள்!