• May 15, 2025
  • NewsEditor
  • 0

இந்த ஆண்டின் இறுதியில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான பரபரப்பு பீகாரில் எப்போதோ தொடங்கி, இப்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இன்று பீகாருக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கே அவர், ‘ஷிக்ஷா நியாய் சம்வாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் தர்பங்காவில் இருக்கும் அம்பேத்கார் விடுதியில் உள்ள மாணவர்களிடம் உரையாற்ற இருந்தார். ஆனால், அவரது காரை விடுதிக்குள் செல்லாவிடாமல் போலீஸார் தடுத்துள்ளனர்.

அது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “பீகாரில் உள்ள டபுள் இன்ஜின் ஏமாற்று அரசாங்கம், பாஜக கூட்டணி அம்பேத்கர் விடுதியில் உள்ள தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுடன் நான் பேசுவதை தடுக்கிறது. எப்போதிருந்து பேசுவது குற்றமானது? நிதிஷ் ஜி, எதற்காக நீங்கள் பயப்படுகிறீர்கள்? நீங்கள் பீகாரில் கல்வியையும், சமூக நீதியையும் மறைக்க பார்க்கிறீர்களா?” என்று பதிவிட்டார்.

முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்!

பின்னர், அவர் காரை விட்டு, நடந்து அம்பேத்கர் விடுதிக்கு சென்றார். அந்த வீடியோவை பகிர்ந்து அவர் பதிவிட்டிருப்பதாவது, “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அது அரசியலமைப்பின் படி செயல்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல! சமூக நீதி மற்றும் சமூக நீதிக்கு ஆதரவாக நாங்கள் குரல் எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், விடுதிக்குள் சென்று உரையாற்றும் வீடியோவை பகிர்ந்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “நிதிஷ் ஜி மற்றும் மோடி ஜி, உங்களால் முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள். சாதிவாரி கணக்கெடுப்பு என்கிற புயல் சமூக நீதி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய புரட்சியை கொண்டு வரும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்த நிகழ்ச்சியில், “பீகார் போலீஸார் என்னை தடுத்த நிறுத்த முயன்றார். ஆனால், உங்களுடைய (சிறுபான்மையினர்) சக்தி என்னைப் பார்த்து கொண்டிருப்பதால், அவர்களால் என்னை தடுத்து நிறுத்த முடியவில்லை.

நாங்கள் பிரதமர் மோடியை கணக்கெடுப்பு எடுக்க சொல்லி வலியுறுத்தினோம். அழுத்தத்தினால், மோடி சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்தார்.

உங்களுடைய அழுத்தத்திற்கு பயந்து, அரசியலமைப்பை தலைமேல் சுமக்கிறார். ஆனால், அவர்களது அரசு ஜனநாயகம், அரசியலமைப்பு, சிறுபான்மையினருக்கு எதிரானது. அவர்களது அரசு அதானிக்கும், அம்பானிக்கும் ஆனது. உங்களுக்கானது அல்ல” என்று பேசினார்.

தெருவும், தெரு முனைகளுமே போதும்

பீகார் அரசின் இந்த செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் காங்கிரஸ்…

“எங்களுக்கு அனுமதி கொடுக்க உங்கள் நிர்வாகத்திற்கு விருப்பம் இல்லையென்றால், நாங்கள் அனுமதி கேட்ட அன்றே மறுத்திருக்கலாம். ஆனால், கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்வது நீங்கள் முன்னரே திட்டமிட்ட வஞ்சனையின் பகுதி ஆகும். இந்த ஏற்பாடும் கடந்த 4 – 5 தினங்களாக சென்றுகொண்டிருக்கிறது.

இதற்கான காரணம், தர்பங்காவில் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் தான். ராகுல் காந்தி இங்கு வந்து, அவர் இளைஞர்களை ஒற்றுமைபடுத்திவிடுவார் என்கிற பயம். ராகுல் காந்தியின் பேச்சு கேட்கப்பட அவருக்கு மேடையும், மைக்கும் தேவையில்லை. தெருவும், தெரு முனைகளுமே போதும்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

பீகார் அரசின் இந்த செயல் பீகாரில் கடும் எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *