
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
என்னங்க? கிரிக்கட்ல நம்ம வீரர்கள் செஞ்சுரி அடிக்கிறாங்களோ இல்லையோ..
நம்ம சூரியனார் செஞ்சுரி அடிச்சி நம்மைப் பாடாய்ப் படுத்தறப்போ… எதுக்குங்க இங்கயே ஒக்காந்துக்கிட்டு அவரைத் திட்டிக்கிட்டு இருக்கிறீங்க! கெளம்புங்க! நாம ஜாலியா ஒரு ரவுண்டு தண்ணீரா இருக்கற ஊருக்குப் போய்ட்டு வருவோம்!
பெரும்பாலான நகரங்களை நாம கார்லதான் சுற்றி வருவோம்!ஆனா இந்த நகரை மட்டும் படகில… ஃபெரியில… ஆனந்தமா வலம் வரலாம்! இன்னுமா எந்த நகர்னு யோசிக்கிறீங்க?இத்தாலியிலுள்ள முக்கிய நகரான வெனிசைத்தாங்க சொல்றேன்!
ஏர்போர்ட்ல எறங்கி வீட்டுக்குப் போகணுமா?… போட்!(boat)…வீட்ல இருந்து ரெஸ்டாரெண்ட் வரைக்குமா?…போட். அங்கேயிருந்து பார்க் போறீங்களா?… போட்!
போட்… போட்னு மாறி மாறி போய்க்கிட்டே இருக்கலாங்க!
வெனிஸ் நகரம் இப்படி நம்மை ஈர்க்கக் காரணம் இருக்குங்க!சுமார் 117 தீவுகளா இருந்திருக்கு முன்னாடி. ஏறத்தாழ 480 பாலங்களைக் கட்டி, நம்ம ஊர்ல ரோடு போடறமாதிரி கால்வாய்களைச் சரிப்படுத்தி… நாம ஊர்ல ஏரிகள், குளங்கள் வெச்சிருக்கற மாதிரி அவங்க, தண்ணிக்குள்ள ஊரை வெச்சிருக்காங்க. அப்புறமென்ன. ஒரே குளு குளுதான்!’ தண்ணீரில் மிதக்கும் நகரம்’ என்ற பெயரையும் உலகத்தார் சூட்டிட்டாங்க.
நாங்க முதல் தடவை போனப்போ ஒரு ப்ளாட்டில… மூணாவது மாடியில மூணு நாள் டேரா போட்டோம்!வீட்டை விட்டு வாசலுக்கு வந்தா படகு!
ஏறி… நாம விரும்பிய இடத்திற்குப் போகலாம்! அதிலயும் ‘கொன்டேலா’ என்றழைக்கப்படும் சிறிய வகைப் படகுகளுக்கு மவுசு அதிகம்! ஓ! அவற்றைத்தான் எவ்வளவு அழகு படுத்தி வைத்திருக்கிறார்கள்! அதிலும் ‘ஹனிமூன்’ கப்பிள்களுக்கென்றே விசேஷ இருக்கைகளுடன் அவை வலம் வருவதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாங்களும் கொன்டேலாவில் ஏறி நகரைச் சுற்றி வந்தோம்!நமது கொன்டேலா ஓட்டுனர்…ஓட்டுனரா?… படகோட்டியா?… மாலுமியா? உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்!…ஓர் ஓரமாக நிறுத்தினார்!படகில் இருந்தபடியே ஒரு பெக் போட்டுக் கொண்டார்.’ட்ரைவ் இன் பார்!’
நம்ம ஊரு ஹைவே மாதிரி சில நீர்வழித் தடங்கள் அகலமாக இருக்கின்றன. அவற்றில் இரு வழிப் போக்குவரத்து உண்டு.

வீடுகளுக்குச் செல்லும் நீர் வழித்தடங்கள் குறுகியவையாகவே உள்ளன. அவற்றில் சிறிய வகைப் படகுகளையே விடுகிறார்கள்.
பெரிய கட்டடங்கள் கூட இவ்வழித் தடங்களை ஒட்டியே அமைந்திருப்பது நம்மை வியக்க வைக்கிறது!
ஐஸ் க்ரீம் பார்லர்கள்,விதம் விதமான பீசா கடைகள் என்று வயிற்றுக்கும் வஞ்சகம் ஏற்படா வண்ணம் அமைப்புகள் உள்ளன.
இரண்டாவது முறையாக இம்முறை சென்றபோது,பார்த்த இடங்களாக இருந்தாலுங்கூட அவை புது உற்சாகத்தை அளிக்கவே செய்தன.எம்.ஜி.ஆர்.,சிவாஜி படங்களைப் பலர் பலமுறை பார்த்ததாகச் சொல்லி,சொல்லும்போதே பரவசத்தைக் காட்டுவார்களே, அதே நிலைதான் நமக்கும்!
‘தரைமேல் பிறக்க வைத்தான்-எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்!’
என்ற திரைப்படப்பாடலுக்கு மிகவும் பொருத்தமான இடம் இந்த வெனிஸ்!

சரி! தண்ணீருக்கும் உயிர்களுக்கும் பெருந்தொடர்பு உண்டே!காற்றுக்கு அடுத்த படியாக உயிரினங்கள் வாழ உதவுவது நீர் அல்லவா?’ நீரின்றி அமையாது உலகு’ என்றல்லவா பெரியோர்கள் சொல்லியுள்ளனர். உயிர்கள் வாழவும்,வளரவும்,இன்பம் சுவைக்கவும் உதவுவது நீர்தானே.
எனவேதானே ஏரிகளை, அருவிகளை, நீர் வீழ்ச்சிகளை,கடலைக் காண்பதில் நமக்கு உற்சாகம் ஏற்படுகிறது. அதிலும் தெளிவான நீர் உள்ள குளங்களில் ஓடும் மீன்களும், ஆழத்தில் இருக்கும் புல்களும்கூட நமக்குத் தெளிவாகத் தெரிகின்றபோது..
நமது மனம் போடும் கூத்தாட்டத்துக்கு அளவே இருக்காது!எங்கள் பக்கத்து ஊரான இடும்பவனத்தில் தென்னந்தோப்புகளின் நடுவில் மணற்பாங்கான இடத்தில் அமைந்துள்ள குளத்தில் அவ்வாறான நீர் உண்டு!
சுமார் பத்தடி ஆழங்கொண்ட அக்குளத்தில் ஓடுகின்ற மீன்களையும், அடியில் இருக்கும் அடர்ந்த நீர்த்தாவரங்களையும் நாம் மேலிருந்தே பார்க்கலாம். இறங்கிக் குளித்தால் இதமான நீர் இதயத்தையே வருடும்! பாருங்களேன்.
50 ஆண்டுகளுக்கு முன்பு அதில் குளித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை மனம் இன்னும் பச்சையாய் ஞாபகத்தில் வைத்து,இப்பொழுதும் இதயத்தைக் குளிர்விக்கிறது.
யார்கண்டது? ஒரு வேளை AI நன்றாக வளர்ந்து, கடல் நீரையே அவ்வாறு தெளிந்த நீராக மாற்றி, உள்ளிருக்கும் பாறைகளை,
பலவகை உயிரினங்களை, நாம் மேலிருந்து பார்க்கச்செய்யும் காலம் வந்தாலும் வரலாம்.
ஓ!ரொம்பவும் தண்ணீருக்குள்ளே போயிட்டோமோ. பரவாயில்லை. வெயில் நேரந்தானே. நீச்சல் தெரிஞ்சிருந்தா பயம் வராதுங்க. இப்பல்லாம் மாதக் கணக்கில,வருடக் கணக்கில நீச்சல் கற்றுக்கிடறாங்க!எங்க காலத்ல நாலே நாலு நாளுதான்.

எங்க ஊர் பிடாரி குளத்தில, ஒரு நாள் என் அண்ணன் என்னைத் தூக்கித் தண்ணீரிக்குள்ளே பக்கமா வீசினாரு!கையைக் காலை அடிச்சி… கரைக்கு வந்தேன்.
கொஞ்சம் தண்ணியைக் குடிக்கவும் செஞ்சேன். அடுத்த நாள் இன்னும் அதிக தூரத்தில வீசினாரு!இப்படி மூணு நாள் வீசியிருப்பாரு.
நாலாவது நாள் தூக்கிப் போட்டுட்டு,‘அவ்வுளவுதாண்டா… ஒனக்கு நீச்சல் வந்துட்டுன்னாரு!’ உண்மைதாங்க. அப்புறம் நானாவே நீந்த ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் சுடுகாட்டுக் கலுங்கில வெங்கட்ராமன் வாத்தியாரு நல்லாப் பழக்கி விட்டாரு. வெனிசுக்குப் போனாலும் பிடாரி குளத்தையும் சுடுகாட்டுக் கலுங்கையும் மறக்க முடியாதுங்க.

சுருக்கமாச் சொல்லணும்னா,மற்ற எல்லா நகரங்களையும் போல, சிடி சென்டர், சர்ச்,பார்க்,கடைத்தெருன்னு எல்லாம் நெறைஞ்சதுதான் வெனிசும். மற்ற இடங்கள்ல ரோட்டில போறதுக்குப் பதிலா இங்க ஆற்றில போறோம். அதுதான் ஆனந்தம் தரும் மாறுதலான, மனத்தை நிறைக்கும் அனுபவம்!
‘என்னங்க! பேசிக்கிட்டிருக்கறப்பவே உள்ளே ஓடறீங்க. வெனிசு விசாவுக்கு அப்ளை பண்ணப் போறீங்களா? சந்தோஷமுங்க. உடனடியா செய்யுங்க. இந்த வெயில் நேரத்துக்கு சூப்பரான செலக்ஷங்க. வந்து சொல்லுங்க. எப்படி இருந்திச்சுன்னு. இத்லிதாலி போய்ட்டு பீசா சாப்பிடாம வந்திடாதீங்க. சரியா?
–பெருமழை விஜய்,
சூரிக்,சுவிட்சர்லாந்து
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.