• May 15, 2025
  • NewsEditor
  • 0

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் பிரதமராக 9 ஆண்டுகள் பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் தலைவராக, மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டு, கனடாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவரின் அமைச்சரவையில்தான் அனிதா ஆனந்த் வெளியுறவுத்துறை அமைச்சராகியுள்ளார்.

கனடாவில் முதல் முறையாக இந்துப் பெண் வெளியுறவுத்துறை அமைச்சராகியிருக்கிறார். எனவே, இவர் குறித்து சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் தேடப்பட்டு வருகிறது.

Anita Anand

யார் இந்த அனிதா ஆனந்த்?

பஞ்சாபைச் சேர்ந்த சரோஜ் டி.ராம் (anesthesiologist) என்பவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.வி.ஆனந்த் (general surgeon) என்பரும் மருத்துவர்கள். மருத்துவர்களான இவர்கள் இருவரும் 1950-களில் அயர்லாந்தில் சந்தித்ததாகவும், இங்கிலாந்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், நைஜீரியா மற்றும் இந்தியாவில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. 1965-ம் ஆண்டு கனடாவுக்குச் சென்ற இவர்களுக்கு 1967-ல் பிறந்த மகள்தான் அனிதா ஆனந்த்.

கல்வி:

அனிதா ஆனந்த் குயின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முறையே அரசியல் ஆய்வுகள் மற்றும் நீதித்துறையில் இரண்டு இளங்கலை கலைப் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.

டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை பட்டமும், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். 2019 வரை பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல பதவிகளில் இருந்திருக்கிறார்.

Anita Anand family
Anita Anand family

அரசியல்:

லிபரல் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கனடாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்ற முதல் இந்துப் பெண் என்பது குறிப்பிடதக்கது.

தொடர்ந்து 2021-ம் ஆண்டில், கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். கனடாவின் வரலாற்றில் இரண்டாவது பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்றப் பெருமையை தட்டிச் சென்றார்.

இவரின் பதவி காலத்தில்தான் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரைத் தொடர்ந்தபோது உக்ரைனுக்கு கனடாவின் இராணுவ உதவியை ஒருங்கிணைத்து வழங்கிவந்தார். ஜூலை 2023 வரை இந்தப் பொறுப்பில் இருந்தார். ஜூலை 2023 முதல் டிசம்பர் 2024 வரை கருவூல வாரியச் செயலகத்தின் தலைவராகவும், பின்னர் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றினார்.

Anita Anand - justin
Anita Anand – justin

அரசியலில்…

எப்போதும் ஒரு கனடியன் என்பதில் பெருமை கொள்ளும் அனிதா ஆனந்த வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்திய – பஞ்சாப் கலாச்சாரத்தை பின்பற்றிவந்தார். இந்து மற்றும் சீக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். தீபாவளி விருந்துகளை நடத்துகிறார். இந்தியாவின் சுதந்திர தினத்தைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.

தன் செயல்பாடுகளுக்கு விளக்கமளிக்கும் விதமாக, “நான் ஒரு கனடியன், என்னுடைய பஞ்சாபி மற்றும் தமிழ் பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

செப்டம்பர் 19, 2023 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “எனது இனப் பின்னணி எனது முழு அடையாளத்தின் ஒரு பகுதியாகும். ஒரு தாயாக, பேராசிரியராக, இப்போது நாடாளுமன்ற உறுப்பினராகவே உரையாற்றுகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அவர் தி குளோப் அண்ட் மெயில் செய்தி நிறுவனத்திடம்,“ நான் இன ரீதியாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். அது என் மனதை விட்டு நீங்கவில்லை.

Anita Anand
Anita Anand

என் பள்ளி காலங்களிலும் என்னைப் போலவும் என் சகோதரிகளைப் போலவும் தோற்றமளிக்கும் மக்கள் அதிகம் இல்லை. எனவே நிறம் என்னுடைய பெரும் சிக்கலாக இருந்தது. அதை என் அனுபவங்கள் மூலமாக என் திறமையை எல்லாவற்றிலும் இணைக்க முயற்சிக்கத் தொடங்கினேன்” என்றார்.

இந்தியா-கனடா உறவுகளில் அனிதா ஆனந்த்!

2023 செப்டம்பரில் சீக்கிய பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கனடாவுடனான இந்தியாவின் உறவுகள் மோசமடைந்தன.

கடந்த ஆண்டு அக்டோபரில் இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் நாடுகளைச் சேர்ந்த தூதர்களை திரும்பப் பெற்றுக்கொண்டன. அதனால் நிலைமை இன்னும் மோசமடைந்தது.

நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முன்வைத்த மறுநாள் நாடாளுமன்றத்தில் பேசிய அனிதா ஆனந்த், “இரு நாடுகளும் ஒற்றுமையையும், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டியது அவசியம். நிஜ்ஜாரின் குடும்பத்தினருக்கு என் இரங்கல்.

Anita Anand
Anita Anand

அதே நேரம், இந்தியாவில் வேர்களைக் கொண்ட நம்மில் பலருக்கு இது மிகவும் கடினமான நேரம். அனைத்து கனடியர்களின் பாதுகாப்பிற்காக சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் போக்கில் ஜஸ்டின் ட்ரூடோவுடன் உடன்படுகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கனடாவில் இந்து கோவில்கள் மீது நடத்தப்படும் தக்குதல்களுக்கு எதிராகப் பலக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். ஜூலை 2022-ல், ரிச்மண்ட் ஹில்லில் இருக்கும் ஒரு இந்து கோயிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

பிப்ரவரி 2023-ல், “இந்து கோவில்களை நாசமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஜூன் 2024-ல், கனடாவின் பிராம்ப்டனில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தொடர்பான ஊர்வலத்தை கண்டித்தார். “இந்திரா காந்தி தொடர்பாக வன்முறை படங்களைப் பயன்படுத்துவது வெறுப்பு மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் என்பதால் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Anita Anand
Anita Anand

நியமனத்துக்குப் பின்னணி?

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் பதவி ஏற்கும் போது, பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவியேற்றுக்கொண்டார்.

தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசின் ஆட்சிப் போக்கை கவனத்தில் கொண்டு, அது போன்ற சிந்தனைப் போக்கைக் கொண்ட ஒருவரை கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதன் மூலம் இரு நாட்டுக்கு மத்தியில் உறவுகள் மேம்படும் என நம்பப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே கடந்த மார்ச் மாதம், கனடாவின் புதியப் பிரதமர் மார்க் கார்னி, “இந்தியாவுடன் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன. நான் பிரதமராக இருந்தால், அதை உருவாக்குவதற்கான வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்” எனப் பேசியது இங்கு கவனித்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *