• May 15, 2025
  • NewsEditor
  • 0

“மரணத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, கடந்த 25 ஆண்டுகளாக ரசிகர்களை பயமுறுத்தி, பரவசப்படுத்தி, மிரளவைத்திருக்கிறது `பைனல் டெஸ்டினேஷன்’ படத்தொடர். அதில் ஆறாவது பாகமாக வெளிவந்திருக்கிறது `பைனல் டெஸ்டினேஷன்: பிளட்லைன்ஸ்’ (Final Destination Bloodlines).

கல்லூரி மாணவியான ஸ்டெஃபானி ரெய்ஸை (கைட்லின் சாண்டா ஜுவானா) கொடூரமான மரணக் கனவு ஒன்று துரத்துகிறது. அந்தக் கனவில், 1960களில் ‘ஸ்கைவியூ’ என்ற விநோதமான வடிவமைப்பில் உள்ள உணவகக் கோபுரத்தில் நடந்த பயங்கரமான சம்பவம் காட்டப்படுகிறது. அதில் ஒரு இளம்பெண் தன் காதலனுடன் விருந்துக்குச் செல்கிறாள். அங்கு நிகழும் விபத்தில் அனைவரின் மரணத்தையும் நேரில் காணும் அந்தப் பெண், இறுதியில் தானும் உயிரிழக்கிறாள். இந்தக் கனவை ஆராயும் ஸ்டெஃபானி, அந்த இளம்பெண்ணின் பெயர் ஐரிஸ் என்பதையும், அவர் தனது பாட்டி என்பதையும் கண்டறிகிறாள். உடனே அவரைத் தேடிச் செல்கிறாள்.

Final Destination Bloodlines

அங்கு, அந்த விபத்து குறித்த முன்உணர்வு தனக்கு வந்து, அந்த விபத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றிய நிகழ்வை விவரிக்கிறார் பாட்டி. மேலும், அந்த விபத்திலிருந்து தப்பித்தவர்கள், அவர்களின் சந்ததியினர் அனைவரும் ஒவ்வொருவராக இறந்துவிட்டதாகவும், தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு மறைவிடத்தில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார் ஐரிஸ். இப்போது அந்தக் கனவு ஸ்டெஃபனிக்கு வந்திருப்பது, ‘மரணம் எப்படியும் நம் குடும்பத்தை அழிக்கும்’ என்பதற்கு ஒரு குறியீடு என்று கூறி, தற்காப்புக்காக ஒரு புத்தகத்தை அளித்துவிட்டு இறந்துபோகிறார்.

இதன்பின், ஸ்டெஃபனி தன்னையும் தனது குடும்பத்தையும் பயங்கரமான ஆபத்துகளிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறாள். அவள் மரணத்தைத் தடுத்தாளா, இல்லையா என்பதே பைனல் டெஸ்டினேஷன்: பிளட்லைன்ஸ் படத்தின் கதை.

கைட்லின் சாண்டா ஜுவானா, ஸ்டெஃபனியாக முதன்மைப் பாத்திரத்தில் தனது உணர்ச்சிகரமான மற்றும் வலுவான நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்கிறார். எரிக் மற்றும் பாபி சகோதரர்களாக வரும் துணை நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களின் தனித்தன்மையால் மனதில் நிற்கின்றனர். குறிப்பாக, டாட்டூ கடை வைத்திருக்கும் எரிக், தனது குறும்புத்தனமான பேச்சாலும் நடிப்பாலும் கவனத்தை ஈர்க்கிறார். இவரது காட்சிகள் படத்தின் தீவிரத்திலிருந்து சற்றே ஆசுவாசப்படுத்துகின்றன. ஒட்டுமொத்த நடிகர் குழுவும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

Final Destination Bloodlines

இந்த தொடரின் மிகப்பெரிய பலம், அதன் விபத்து பாணியிலான மரணக் காட்சிகளே! இந்தப் படமும் அந்த எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்கிறது. முதல் 20 நிமிடங்களில் வரும் ஸ்கைவியூ விபத்துக் காட்சி, ‘பைசா வசூல்’ உணர்வைத் தந்து, தியேட்டரை அலறவைக்கிறது. ‘செகாவின் துப்பாக்கி’ கதைமுறைக் கோட்பாட்டின்படி, திரைக்கதையில் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் அவசியமானதாகவும், ஒரு நோக்கத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியதாகவும் இருக்கிறது. அப்படி, ஒரு சிறிய பைசா (பென்னி) நாணயம் ஒரு மாபெரும் கோபுரத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடுவதாகக் காட்டப்படும் காட்சி, பார்வையாளர்களின் கண்களை விரியவைக்கிறது.

Final Destination Bloodlines

குறிப்பாக, இந்தக் காட்சியில் ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை மற்றும் VFX ஆகியவை ஒருங்கிணைந்து, நம்மையும் கட்டடத்துக்குள் சிக்கவைக்கும் பரபரப்பான அனுபவத்தை வழங்குகின்றன. தொழில்நுட்ப அம்சங்களைத் திறம்படப் பயன்படுத்திய இயக்குநர்கள் ஜாக் லிபோவ்ஸ்கி மற்றும் ஆடம் பி. ஸ்டெயின் ஆகியோரின் உழைப்பு நன்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஆங்காங்கே வைக்கப்பட்ட அவல நகைச்சுவை மீட்டர்கள் கச்சிதமாகப் பொருந்தி, கைதட்டல்களை அள்ளுகின்றன. முந்தைய பாகங்களைவிட இந்தப் படம், மரணத்தை ஒரு நகைச்சுவை நாடகமாக அணுகுவது புதிய பரிமாணத்தை அளிக்கிறது. உதாரணமாக, ஒரு கதாபாத்திரத்தின் மரணம், பார்வையாளர்களைச் சிரித்துக்கொண்டே கைதட்டவைக்கும் அளவுக்கு நகைச்சுவையும் கொடூரமும் கலந்த கலவையாக, திரைக்கதையை சுவாரஸ்யமாக்குகிறது.

முந்தைய பாகங்களில் மரணம் அந்நியர்களைத் துரத்தியது, ஆனால் இந்தப் படம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு, உணர்ச்சிப் பரிமாணத்தைச் சேர்க்கிறது. குறிப்பாக, ஸ்டெஃபானியின் சகோதரருக்கும் அவருக்குமான உறவு, தாயின் பாசம், குடும்பப் பந்தங்கள், பிரிவு, துக்கம் ஆகியவை மரண விளையாட்டுக்கு நடுவே இழையோடுகின்றன. “வாழ்க்கை மிகவும் விலைமதிப்பானது… ஒவ்வொரு நொடியையும் அனுபவியுங்கள்” என்று பேசும் மறைந்த நடிகர் டோனி டாட்டின் கதாபாத்திரத்தின் வசனமும் உணர்ச்சிகரமானது.

டோனி டாட்

மொத்தத்தில், இந்த மிரட்டல் யுனிவெர்சின் ரசிகர்களுக்கு ஒரு நாஸ்டால்ஜிக் பயணமாகவும், புதியவர்களுக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாகவும் இருக்கும் இந்தப் படைப்பு, மரணத்தின் அபாயகரமான முடிச்சுகளுடன் நம்மை இணைத்து, ஒரு ‘கொடூரமான’ விருந்தை அளித்திருக்கிறது!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *