
கணவன் மனைவி இடையே சந்தேகம் என்ற ஒன்று வந்துவிட்டால் வாழ்க்கை நகரமாகத்தான் அமையும். இதனால் சில திருமணங்களில் மணமாகி ஒரு சில மாதங்களில் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது.
பெங்களூருவில் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்த அபய் என்ற வாலிபர் மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார்.
அவர் தக்சன கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சுனிதா என்ற பெண்ணை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சுனிதாவும் ஐ.டி கம்பெனியில்தான் வேலை செய்து வந்தார். திருமண செலவை இரு குடும்பமும் பகிர்ந்து கொண்டது. திருமணமான புதிதில் இருவரது வாழ்க்கையும் எந்த வித பிரச்னையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.
அபய் தனது மனைவியின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்தபோது 5 ஆண்டுகளாக சுனிதாவிற்கும், அவரது பழைய காதலனுக்கும் இடையே தொடர்ச்சியான பண பரிவர்த்தனை இருந்தது தெரிய வந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அபய் பண பரிவர்த்தனை குறித்து சுனிதாவிடம் கேட்டதற்கு, திருமணத்திற்கு ஆறு மாதத்திற்கு முன்பே தனது காதலனுடனான தொடர்பை துண்டித்துக்கொண்டதாக தெரிவித்தார்.
ஆனால் சுனிதா பழைய காதலனுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக அபய் கருதினார். சுனிதா அடிக்கடி தனது பழைய காதலன் தன்னையும் தனது தேவைகளையும் நன்றாக பார்த்துக்கொண்டதாக கூறி அபயுடன் ஒப்பிட்டு பேசினார். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில் 2021 -ல் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி சுனிதா மங்களூரு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் ரூ.3 கோடியும், மாதம் 60 ஆயிரமும் தனது கணவர் கொடுக்க வேண்டும் என்று சுனிதா கேட்டார்.
சுனிதாவிற்கு வேறு ஒருவருடன் ரகசிய திருமணம் நடந்திருப்பதாக அபய் சந்தேகப்பட்டார். இதனால் அதனை நிரூபித்துக்காட்ட அபய் தானே ரகசிய உளவாளியாக மாறி அதற்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தார்.
இதற்காக சுனிதாவிற்கு வேலை வாய்ப்பு இருப்பதாக வேறு ஒரு கம்பெனியில் இருந்து தகவல் அனுப்புவது போல் தகவல் அனுப்பினார். உடனே ஜூம் மீட்டிங் மூலம் அபய் சுனிதாவிடம் நேர்காணல் நடத்தினார்.

இதில் சுனிதாவிடம் சில அந்தரங்க ரகசியங்களை கேட்டார். சுனிதா தனக்கு நடந்த முதல் திருமணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இப்போது இரண்டாவதாக வேறு ஒருவரை திருமணம் செய்து இருப்பதாக சுனிதா சொன்னார். அதன் பிறகுதான் சுனிதா வேறு ஒருவரை ரகசிய திருமணம் செய்திருந்தது அபய்-க்கு தெரிய வந்தது.
உடனே சுனிதா ஒருவரை திருமணம் செய்திருந்தார் என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரங்களை திரட்டினார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சுனிதாவின் திருமண சான்றிதழ், பான் கார்டு, பயண விபரம், திருமணத்திற்கு பிறகு பெயர் மாற்றிக்கொண்டது போன்றவற்றிற்கான ஆவணங்களை பெற்றார்.
சுனிதா ரகசியமாக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது திருமணம் செய்திருந்தார். இந்த விவரங்களை அபய் கோர்ட்டில் தாக்கல் செய்தார். ஆனால், சுனிதா தனது கணவர் தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்றும், வேலையை ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்தம் செய்தார் என்றும், அடித்து உதைத்தார் என்றும், 10 லட்சம் பணமும், 30 சவரன் தங்க நகைகளும் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கோர்ட்டில் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மங்களூரு கோர்ட் நீதிபதி அபய்க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார். சுனிதா கேட்ட 3 கோடி அல்லது மாதம் 60 ஆயிரம் வழங்க உத்தரவிட மறுத்துவிட்டார். அதோடு சுனிதாவிடம் அபய்-ன் கோர்ட் செலவுக்கு 30 ஆயிரம் செலுத்தும்படி கோர்ட் உத்தரவிட்டது.