
விராட் கோலியின் ஓய்வு இந்திய டெஸ்ட் அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கோலிக்கு முன்பாக ரோஹித்தும் ஓய்வை அறிவித்ததால், ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் யார் கேப்டனாகச் செயல்படப்போகிறார், கோலியின் நம்பர் 4 இடத்தை யார் நிரப்பப் போகிறார் என்பது புதிராக இருக்கிறது.
இந்த நிலையில், 2022-ல் இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு, தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வாய்ப்புக்காகக் காத்திருக்கும் வீரர், இந்திய டெஸ்ட் அணியில் கோலியின் இடத்துக்குச் சரியாக இருப்பார் என இந்திய முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கருண் நாயர் சரியாக இருப்பார்..!
ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசிய அனில் கும்ப்ளே, “ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ரோஹித் விளையாடவில்லை. அதனால் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் ஏற்பட்டது.
பின்னர், கே.எல். ராகுல் சிறப்பாகச் செயல்பட்டதும், ரோஹித் பின்வரிசையில் இறங்கினார்.
கடைசி டெஸ்டில் அவராகவே பிளேயிங் லெவனிலிருந்து விலகிக்கொண்டார். இருப்பினும், இந்தியாவுக்கான பேக்கப் ஓப்பன் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், நம்பர் 4-ல் யார் பேட்டிங் செய்யப் போகிறார் என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. எனவே, கருண் நாயர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற தகுதியானவர்.
நம்பர் 4-க்கு அவர் சரியானவராக இருப்பார். ஏனெனில், கொஞ்சம் அனுபவம் வாய்ந்த வீரர் உங்களுக்குத் தேவை. இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் பெற்ற வீரர் உங்களுக்குத் தேவை.
கருண் நாயர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார். அதனால், அங்குள்ள பிளெயிங் கண்டிஷன்கள் அவருக்குத் தெரியும்.

அவர் இப்போது 30-களில் (வயது) இருக்கலாம், ஆனாலும் இன்னமும் அவர் இளமையாக இருக்கிறார்.
கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைத்தால், அது முதல் தர கிரிக்கெட்டில் விளையாட அதிக நம்பிக்கையைத் தரும். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியும் அங்கீகரிக்கப்படவில்லையெனில் அது பெரும் சவாலாக மாறும்” என்று கூறியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப யார் சரியாக இருப்பார் என்பது குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.