
பாலியல் வன்கொடுமை அளவுக்கு யோசிக்க வேண்டியதில்லை. ஆனால், குறைந்தபட்சம் ஒரேயொரு பாலியல் சீண்டலையாவது சந்திக்காதப் பெண்கள் இந்த உலகில் இல்லையென்றே சொல்லலாம். பார்வையில் ஆரம்பித்து உரசல் வரை, அவரவர் சந்தித்த பாலியல் தொல்லைகள் அவரவர் உள்மனதுக்கு மட்டுமே தெரிந்த கசப்பு. ‘பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைத்துவிட்ட இந்த நேரத்தில் இந்த கசக்கும் உண்மை தேவையா’ என்றால், தேவைதான்.
இதற்கு முன்னரும் எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. அப்போதும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததுதானே… தண்டனை தரப்படுவதே, குற்றவாளிகள் திருந்தவும், மற்றவர்கள் அதே குற்றத்தை செய்யாமல் இருப்பதற்காகவும்தானே…
ஆனால்,
பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்துகொண்டே தானே இருக்கின்றன… அப்படியென்றால், குற்றவாளிகளுக்கு தரப்படுகிற தண்டனைகள், ‘வாய்ப்புக் கிடைத்தால்’ மனநிலையில் இருப்பவர்களிடம் எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை என்றுதானே அர்த்தமாகிறது. என்கவுன்ட்டர் முதல் தூக்கு தண்டனை வரை கொடுத்தும் அச்சம் வரவில்லையென்றால், பிரச்னையின் வேர் வேறு எங்கோ இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
எங்கிருந்து வருகிறது இந்த தைரியம்..?
‘ஆம்பளைங்கன்னாலே அப்படித்தானே’ என்று இருட்டில் கல்லை வீசி விட்டுக் கடந்துவிடக்கூடிய விஷயமல்ல இது. ஏனென்றால், இங்கு பாலியல் வன்கொடுமைக்குத் துணிந்த ஆண்களைவிட, ‘வாய்ப்புக்கிடைத்தால் துணிவான்’ ரக ஆண்களைவிட, இயல்பான ஆண்கள்தான் அதிகம். இவர்களுக்கு மத்தியில், பெண்ணுறுப்பு வழி குடல் அறுப்பவன்களும், பெல்ட்டால் அடித்து ஆபாசப்படம் எடுப்பவன்களும் நிச்சயம் இயல்பான ஆண்கள் கிடையவே கிடையாது. ‘இவன்’களுக்கு எங்கிருந்து வருகிறது இந்த தைரியம்..? யார் கொடுத்தது இந்த தைரியத்தை..?

இன்றைக்கு கேமராக்கள் குற்றங்களுக்கு சாட்சி சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சமூகமே ஒரு கேமரா போல செயல்பட்ட காலமும் நம்மூரில் இருந்திருக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த சாராயக்கடைக்குப் போக, ஊரில் இருக்கிற யார் கண்ணிலும்படாமல் செல்லவே குடிமகன்கள் விரும்புவார்கள். ஒளிந்து, மறைந்து செல்லும் அவர்கள் மற்றவர்களுடைய கண்ணில் தென்பட்டுவிட்டால், ‘குடிகாரப்பய’ என்கிற முகச்சுளிப்பு முதல் ‘தூ’ என்கிற அவமானம் வரைக்கும் நிச்சயம் கிடைக்கும்.
சமூகம் செய்யும் இந்த அவமானத்துக்குப் பயந்தே, அவர்கள் ஊருக்கு வெளியே போதையைத் தேடி ஓடினார்கள். இன்றைக்கோ குடிமகன்களைப்பார்த்தால் சமூகம்தான் ஒதுங்கி செல்ல வேண்டியிருக்கிறது.
‘உங்களுடைய ஆட்சியில்தான் குடிமகன்கள் செழிப்பாக இருந்தார்கள்; இல்லவே இல்லை, உங்களுடைய ஆட்சியில்தான் குடிமகன்கள் செழிப்பாக இருந்தார்கள்’ என்கிற வாக்குமூலங்கள் பெண்களுக்குத் தேவையே இல்லை. உங்கள் வீட்டுப் பெண்களில் ஆரம்பித்து எல்லோருடைய வீட்டுக்குப் பெண்களுக்கும் தேவையானது ஒன்றுதான். அது, ‘குடி போதையில் பாலியல் துன்புறுத்தல்’ என்கிற செய்திகள் வராத நாள்கள்தான்.

காவல்துறை பெண்களுக்கும் நண்பன் என்றே இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த நம்பிக்கையின் சதவிகிதம் 99 மட்டுமே. அடுத்தொரு பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட பெண் பற்றிய தகவல்களை நீங்கள் ’கை தவறுதலாக’, ’கம்ப்யூட்டர் தவறுதலாக’ வெளியிடாமல் இருந்தால், மீதமிருக்கும் அந்த ஒரு சதவிகித நம்பிக்கையும் நிச்சயம் உங்கள் மீது வரும்.
‘நடக்கிற பாலியல் குற்றங்களுக்கு அரசும், காவல்துறையும்தானே பொறுப்பு’ என்று இங்கு யாருமே தப்பித்துவிட முடியாது. ஏன் தெரியுமா? ஒழுக்கத்தில் ஆணுக்கு விதிவிலக்கு அளித்த நம் சமூகம்தான், பெண்களுக்கு எதிரான இந்த தைரியத்தை ‘இவன்’களுக்கு முதன் முதலில் கொடுத்திருக்க வேண்டும்.
இதே சமூகம்தான், பெண்ணை ஒரு பண்டம்போல ஆணுக்கு அறிமுகப்படுத்தியதும். கல்லு – கண்ணாடி, சேலை – முள்ளு என்று மட்டமான உதாரணங்களை ஆண்களுக்கு எடுத்துக்கொடுத்ததும் இந்த சமூகம்தான். ‘ஊருக்கு ஒதுக்குப்புறம்தான் சாராயக்கடை’ என்பதுபோல சில விஷயங்களில் கண்டிப்புக் காட்டிய இதே சமூகம், இப்போது ‘சோஷியல் ட்ரிங்க்கர்’ என்று அதையும் இயல்பாக எடுத்துக்கொண்டு விட்டது. போதையும் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது.

சரி, குற்றம் செய்தவரின் குடும்பமாவது குற்றவுணர்ச்சிக்கொள்ளுமா என்றால், ‘போரூர் முகலிவாக்கம்’ தந்தைக்கும் அது இல்லை. ’பொள்ளாச்சி சம்பவ’த்தில் ஓர் அம்மாவுக்கும் அது இல்லை. இவர்கள் இரண்டு சோறு பதம் மட்டுமே. இவர்களைப்போல இன்னும் இன்னும் எத்தனை பெற்றோர்களோ நம் சமூகத்தில். அறமில்லாத இவர்களின் ஆங்காரம் எல்லாம், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துக்கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையின் தலையில் விழுந்தது எனலாம்.
நம் குடும்பமே நம்மை மன்னிக்காது!
அந்தக் குழந்தையின் மீதுதான் எத்தனையெத்தனை விமர்சனங்கள்… அதுவரை, கேள்விப்பட்டிராத விமர்சனங்கள் எல்லாம் அந்தக் குழந்தையின் ஒழுக்கத்தின் மீது வைத்தது இந்த சமூகம். நிகழ்ந்த கொடுமையின் தாக்கத்தில் இருந்து வெளிவருவதற்காக, அந்தக்குடும்பம் மகளின் பள்ளியை மாற்றியது; வீட்டை மாற்றியது; இறுதியில் ஊரைவிட்டே வெளியேறியது. அதைத்தான் அவர்களால் செய்ய முடியும். பாதிக்கப்பட்ட தன் வீட்டுப் பெண்ணுக்காக ஆண் ஆத்திரப்படுவதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். நிஜத்தில், அவனுமே பாதி உயிராகத்தான் ஆகியிருப்பான்.

நாகரிகம் அடைந்த சமூகம் என்று மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால், இன்னும் சக மனுஷியிடம் மனிதனாக நடந்துகொள்வதுபற்றித் தெரியாமலே இருக்கிறோமே… பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசும், காவல்துறையும் முடிந்தமட்டும் தடுக்கலாம்; குற்றவாளிகளைத் தண்டிக்கவும் செய்யலாம். ஆனால், குற்றத்துக்குத் தயாரான மனங்களுக்கு சமூகத்தின் மீதான பயம் வராத வரைக்கும் இங்கு எதுவுமே மாறாது. இங்கு பயம் என்று குறிப்பிடுவது ‘சட்டத்தைக் கையில் எடுப்பது அல்ல’. பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்ய அச்சப்படுவது. அப்படி செய்தால், நம் குடும்பமே நம்மை மன்னிக்காது என்று சொந்தக்குடும்பத்திடமே இவர்களுக்கு அச்சம் வர வேண்டும்.
தன்னைப் பெற்றவர்கள் பணபலம், ஆள் பலம், அரசு பலம், அரசியல் பலம் என்று தனக்காக மனசாட்சியைக் கொன்று புதைக்க மாட்டார்கள்; அவர்கள் நியாயத்தின் பக்கமே நிற்பார்கள் என்பதை சிறு வயதிலிருந்தே புரிய வைத்துவிட வேண்டும். இந்த இயல்பு நமக்கு ஒன்றும் புதிதல்ல. இப்படியும் வாழ்ந்திருக்கிறோம். கெட்டப்பழக்கங்களை நார்மலைஸ் செய்வதில் ஆரம்பித்து… குற்றவாளிகளை ஹீரோக்களாக்கி… தவறு செய்தவர்களுக்காக வாதாடி என்று நம் இயல்பை தொலைத்துவிட்டோம், அவ்வளவுதான்.

‘இல்ல… தப்பே செஞ்சாலும் அவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்’ என்றீர்களென்றால், இன்னொரு வீட்டில் உங்கள் கண்ணீருக்குக் காரணமாகப் போகிறவனை, அவன் வீட்டாரும் அப்படியே மன்னித்துக்கொண்டிருப்பார்கள்.