• May 15, 2025
  • NewsEditor
  • 0

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பின்னர், இத்தகைய கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கோரி மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடிக்க, வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இதில், சிபிஐ-யின் குற்றப்பத்திரிகை, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் அடிகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் (மே 13) கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, கைதுசெய்யப்பட்ட 9 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ. 85 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் கூடுதலாகத் தலா ரூ. 25 லட்சம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

இது குறித்த அறிக்கையில், “2019 ஆண்டு நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த மிகக்கொடுமையான குற்றச் சம்பவமாக கருதப்படும் இந்த வழக்கை விசாரணை செய்த கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது.

இந்த கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என வழங்கப்பட்டுள்ள கடுமையான தண்டனை குற்றச்செயலில் ஈடுபட முனைவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும்.

மேலும், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்ற விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. அத்தகைய நியாயத்திற்காகத் துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது.

அந்த வகையில், நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ. 85 லட்சத்திற்கும் கூடுதலாக, பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் என நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *