• May 15, 2025
  • NewsEditor
  • 0

சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த காஃபி என்ற 17 வயது மாணவி, தன்னுடைய மன உறுதியால், தொடர் முயற்சியால் பலர் மனங்களை கரைத்துள்ளார்.

பார்வையற்றோர் பள்ளியில் படித்த இவர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஆசிட் தாக்குதலில் இருந்து மீண்டு வந்த மாணவி காஃபி, `டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்று, இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரியாக வேண்டும்’ என்றுஅவருடைய கனவை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிட் தாக்குதல் எப்படி நடந்தது?

3 வயதில் நடந்த கோரம்…

மாணவி காஃபிக்கு 3 வயதில், ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார். 2011-ல் ஹோலி பண்டிகையின் போது, பொறாமை காரணமாக 3 பேர் ஆசிட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அந்த தாக்குதலால் அவரது முகமும் கையும் வெந்தது. கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டார். கொடுமையான வலிகளைத் தாங்கினார். டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், இறுதியில் அவரது பார்வை பறிபோனது.

இத்தகைய மோசமான காலகட்டத்தைக் கடந்து வந்த காஃபி, தனது கனவுகளுக்காகப் போராடத் தொடங்கினார். தொடக்க கல்வியில் ஆடியோ புத்தகங்களை வைத்து படித்தார்.

பின்னர் முக்கிய திருப்பமாக, கிராமத்திலிருந்து வந்து சண்டிகரில் உள்ள பார்வையற்றோர் CBSE பள்ளியில் இணைந்தார். அங்கே எபோதும் வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியாக இருந்துள்ளார்.

இருண்ட வாழ்க்கையின் கோரப்பிடியிலிருந்து கல்வி விடுவிக்கும் என்ற நம்பிக்கையுனும் விடாமுயற்சியுடனும் படித்து 10-ம் வகுப்பில் 95.2% மதிப்பெண் பெற்றார்.

14 ஆண்டுகளாய் கிடைக்காத நீதி…

காஃபியாவின் சாதனையால் மிகுந்த பெருமையடைந்துள்ளதாக கூறும் அவரது அப்பா, சண்டிகரில் உள்ள மினி செயலகத்தில் கான்ராக்ட் அடிப்படையில் பியூனாக பணியாற்றுகிறார்.

காஃபி ஏற்கெனவே டெல்லி பல்கலைக்கழகத்தில் இணைவதற்கான நுழைவுத்தேர்வை எழுதியுள்ளார். நிச்சயமாக இடம் கிடைக்கும் என உறுதியாக இருக்கிறார்.

காஃபியின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஆசிட் வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்றும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படாமல் உள்ளனர் என்பது துரதிர்ஷ்டவசமானது. “எனக்கு இதைச் செய்தவர்கள் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்” என வருத்தத்துடன் கூறுகிறார் காஃபி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *