
போபால்: கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அமைச்சர் விஜய் ஷா மீது நான்கு மணி நேரத்துக்குள் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதத்தின் சகோதரி’ என்று அவர் அழைத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன், அமைச்சர் விஜய் ஷா மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 196 (குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல்) மற்றும் 152 (இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்) போன்ற கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் நான்கு மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று டிஐஜிக்கு உத்தரவிட்டார்.