• May 14, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

சுற்றுலா அழைத்துச்செல்ல வேண்டி வருடா வருடம் எனது வற்புறுத்தலும் அப்பாவின் வாக்குறுதியும் மாறி மாறி போய்க்கொண்டிருந்த சூழலில் இறுதி செய்யப்பட்ட எனது சுற்றுலா சுமார் 50 பேருடன் இணைந்த பெரிய பேரின்ப சுற்றுலாவாக அமைந்தத்தில் ஆனந்தம். 12 நாட்கள் திட்டமிட்டத்தில் ஐந்தாம் நாளில் நாங்கள் சென்ற இடம் கோக்சர் (Koksar).

இமாச்சலப் பிரதேசத்தின் லாஹௌல்-ஸ்பிதியில் சந்திரா நதிக்கரையில் அமைந்துள்ள கோக்சர் என்ற கிராமம், சுமார் 10,300 அடி (3140 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. லாஹௌல் பள்ளத்தாக்கின் நுழைவாயிலாகக் கருதப்படும் இந்த இடம் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் அழகிய கிராமம்.

KOKSAR, Himachal Pradesh, India

மணாலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோக்சர் செல்ல பேருந்து அல்லது டாக்ஸி மூலம் செல்லலாம். நாங்கள் 50 பேரும் மூன்று குழுக்களாக பிரிந்து டெம்போ ட்ராவலர் வாகனத்தில் புறப்பட்டோம் . புறப்பட்ட சில நிமிடங்களில் மூன்று வாகனங்களும் சொல்லிவைத்தற்போல் ஒரு கடையின் வாசலில் போய் நின்றது.

மேலே பனிப்பிரதேசத்திற்கு செல்வதற்கு முன்பு தேவையான ஜெர்கின் , ஷூ, கையுறை என 250 ரூபாய் வாடகையில் அவரவர்களுக்கு ஏற்றவாறு அணிந்து கொண்டு விண்வெளி வீரர்களை போன்று அனைவரும் ஆயத்தமானார்கள். லேசான மழையில் எங்கள் வாகனம் மேலே செல்ல செல்ல வெப்ப நிலை மேலும் குறைந்து மழையும் குளிரும் போட்டி போட்டுகொண்டு எங்களை சிலிர்ப்பூட்டியது .

குளிரை காட்டிலும் இரண்டு புறங்களும் இருந்த இயற்கையின் அழகு கண்கொள்ளா கட்சியாக இருந்தது . ஒருகட்டத்தில் எதிரில் என்ன இருக்கிறது என்று தெரியாதவாறு பனி மூட்டம் . இடையிடையே ஓங்கி வளர்ந்த மரங்களும் அதை தொட்டு செல்லும் பனி மூட்டமும் , மலைகளுக்கு இடையே வெள்ளி சரிகை வைத்ததை போன்று மலைகளை கிழித்துக்கொண்டு ஓடிவரும் நீர்வீழ்ச்சிகள் என இதுவரை கண்டிராத கண்கொள்ளா காட்சிகள் எங்களுக்குள் சிகரத்தின் உச்சியை தொடுவதை போன்று உற்சாகம்.

ஒரு கட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட நாங்கள் சென்ற வாகனம் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டது . இறங்கி விசாரித்ததில் நாங்க செல்லவேண்டிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் நிறுத்தி வைத்துள்ளதாக சொன்னார்கள்.

மழை, கடுங்குளிர் இருந்தாலும் இப்படியொரு கிளைமேட்டை அனுபவிக்க வேண்டும் என்று அப்பா வற்புறுத்தியதால் நடுங்கியபடியே நடக்க ஆரம்பித்தோம். சொர்க்க பூமியில் மிதப்பதை போன்று பூரிப்பு .

ஒரு வழியாக வாகனங்கள் நகர ஆரம்பிக்க அடல் சுரங்கப்பாதையில் (தனி அனுபவம்) நுழைய ஆரம்பித்தோம். சுமார் 9 கிலோமீட்டர் சுரங்க பாதையின் பயணத்திற்கு பிறகு வெளியேறும் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது இன்னொரு உலகம்.

அடல் சுரங்கப்பாதையின் துவக்க புள்ளியில் அடர் காடுகள் , பசுமை, பனி என இயற்கையின் மடியிலிருந்து தவறி விழுந்தததை போன்று அடுத்த முனையில் நிலப்பரப்புகளில் இருந்த கடுமையான மாற்றம் வியக்க வைக்கிறது.

சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயிலிலிருந்து ஆரம்பிக்கும் அழகிய பள்ளத்தாக்கு, பனி போர்த்திய மலைகள் , ஏராளமான நீர்வீழ்ச்சிகள் என சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் இன்பலோகத்தில் மிதப்பதை போன்று இருந்தது.

ஏராளமான சுற்றுலா வாகனங்கள் அணிவகுப்பு வெண்பனி மலைகளுக்கு இடையே வெள்ளி தோரோட்டம் போன்று இருந்தது. மீண்டும் ஓர் இடத்தில் வாகனம் நிறுத்தம் .

இரண்டு புறமும் பனிக்கட்டி குன்றுகள் சூழ ஒரு வழிப்பாதையை போன்று எதிர் எதிர் திசைகளில் வாகனங்களை அனுப்பி வைத்து கொண்டிருந்தார்கள் . ஒருவழியாக கோக்சர் சென்றடைந்த நாங்கள் , பனி படர்ந்த இடத்தை நோக்கி மழையில் நனைந்தவாறே ஓடினோம்.

பனியில் உறைந்ததை காட்டிலும் பிரமிப்பில் உறைந்தவர்கள் ஏராளம். பனி சறுக்கு, பனி கட்டிகளை வாரி இறைத்து கொண்டாட்டம் , பனியில் விழுந்து புரள்தல் , ரப்பர் ட்யூபில் சறுக்கு என வயது வித்யாசம் இல்லாமல் அந்த அனைவரும் குழந்தைகளாய் மாறி கொண்டாடி கழித்தார்கள்.

காய்ந்த மாடு கம்மங் கொல்லையில் நுழைந்த கணக்காக அதிகபட்ச கொண்டாட்டத்தில் சுமார் இரண்டு மணிநேரத்திற்குள் அனைவரும் களைப்பாகிவிட்டனர்.

சாப்பிட சூடா ஏதாவது கிடைக்குமா என்று தேடியவர்களுக்கு மஞ்சள் தார் பாய்களுக்கு கீழே நூடுல்ஸ் , ஆம்லெட் , பாஸ்தா என்று வியாபாரம் களை கட்டிக்கொண்டு இருந்ததை பார்த்தபோது பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமிர்தம் போன்று ,தம்பியின் நடுங்கும் உடலை நிப்பாட்ட 70 ரூபாய் கொடுத்து சூடாக நூடுல்ஸ் வாங்கி கொடுத்தோம்.

முகமெல்லாம் பல்லாக இரண்டு நிமிட நூடுல்ஸ் ஒரு நிமிடத்தில் காலியாகியது.

மைனஸ் இரண்டு டிகிரி வெப்ப நிலை , 75 சதவிகித உறைதல் , இதமான மழை , கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த பக்கம் திரும்பினாலும் பனி போர்த்திய மலைகள், என்ன முடியாத நீர்வீழ்ச்சிகள் , சுற்றுலா பயணிகளின் விதவிதமான கொண்டாட்டங்கள் எதையும் விட்டு பிரிய மனமில்லாமல் மீண்டும் மணாலி திரும்பவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் புறப்பட்டோம்.

திரும்பி வரும் வழியில் உள்ள சோலாங் பள்ளத்தாக்கு இயற்கை அழகுமூச்சடைக்கக்கூடிய இடமாகும். சாகச விரும்பிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு புகலிடமாக உள்ள இந்த பள்ளத்தாக்கில் பாராகிளைடிங், ஜிப்லைனிங், பனிச்சறுக்கு (குளிர்காலத்தில்) மற்றும் மலையேற்றம் போன்ற சிலிர்ப்பூட்டும் செயல்களில் ஈடுபடலாம் என்று சொன்னார்கள்.

ஏற்கனவே இருந்த களைப்பு மற்றும் மழையுடன் கூடிய கடுமையான குளிரில் விறைத்து போய் இருந்ததால், சும்மா ஒரு பார்வையாலே பள்ளத்தாக்கை கடந்து பயணத்தை தொடர்ந்தோம்

வாய்ப்பிருந்தால் இமாச்சல பிரதேசத்தின் இயற்கையை மீண்டும் ரசிக்க வரவேண்டும் என்ற ஆவல் எல்லோர் மனதிலும் தோன்றியது

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *