• May 14, 2025
  • NewsEditor
  • 0

தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி நாட்டுக்கு எடுத்துரைத்த ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக மத்தியப் பிரதேச மாநில அமைச்சரும் பாஜக தலைவருமான விஜய் ஷா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மத்திய பிரதேசம் மாநில உயர் நீதிமன்றம்.

நீதிபதி அதுல் ஶ்ரீதரன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தியிருக்கிறது.

Operation Sindoor

“என்ன சூழ்நிலையானாலும் இன்னும் சில மணிநேரங்களில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும்” என நீதிமன்றம் கூறியுள்ளது.

என்ன பேசினார் பாஜக அமைச்சர்

கடந்த செவ்வாய் அன்று அரசு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜய் ஷா, பிரதமர் மோடி பாகிஸ்தானியர்களுக்கு பதிலடி கொடுக்க அவர்களது சொந்த சகோதரியை அனுப்பியதாக குறிப்பிட்டு பேசினார்.

“மோடிஜி நாட்டின் நலனுக்காக பாடுபடுகிறார். எங்கள் மகள்களை விதவையாக்கிவர்களுக்கு பாடம் கற்பிக்க அவர்களின் சகோதரியையே அனுப்பினோம்” என்று பேசினார் விஜய் ஷா.

விஜய் ஷா மீதான வழக்கு மே 15-ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்படவிருக்கிறது. அவர்மீது மக்களுக்கு இடையே பகையமை உருவாக்கியற்கான பிரிவு 196 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“பாஜக மௌனமாக இருப்பது ஏன்” – காங்கிரஸ் கேள்வி

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி, தான் ஏற்கெனவே இந்த விவகாரத்தில் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

ராணுவக் கர்னல் சோபியா குரேஷி
ராணுவக் கர்னல் சோபியா குரேஷி

“பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ராணுவ வீரர்களின் வீரத்தை வணங்குவதாகக் கூறினார். ஒட்டுமொத்த நாடும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நின்றதாக பெருமைபட்டார். ஆனால் இங்கே ஒரு பாஜக அமைச்சர் ராணுவ அதிகாரியை இழிவாக பேசுகிறார். இதைக் கேட்டுக்கொண்டு பாஜக மௌனமாக இருப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஜித்து பத்வாரி.

மேலும், “இன்னும் 24 மணிநேரத்துக்குள் அவர் பதவி விலக வில்லை என்றால் நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காங்கிரஸ் சார்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வோம்” என்றும் பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *