
டேராடூன்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் தேசியக் கொடி யாத்திரை (மூவர்ண சவுர்ய சம்மான் யாத்திரை) பிரம்மாண்டமாக நடைபெற்றது. உத்தராகண்டின் சித்பாக்கின் சவுர்ய ஸ்தலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை இந்த யாத்திரை நடந்தது.
ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த யாத்திரையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்று கைகளில் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றனர். இந்த நிகழ்வின்போது, உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு சவுர்ய ஸ்தலத்தில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மலர் அஞ்சலி செலுத்தினார்.