
வெளிநாட்டு மக்களின் குடியேற்றத்தைக் குறைப்பதற்காக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், குடியேற்ற கொள்கைகளில் பல மாறுதல்களை மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தில் அதிகரித்துவரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, இங்கிலாந்தில் குடியேற விரும்புவோருக்கு கடுமையான நிர்பந்தங்களை விதிக்கவுள்ளனர்.
பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெறுவதற்கான செயல்பாட்டிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். குடியுரிமையைப் பெற குறைந்தபட்சம் நாட்டில் 5 வருடங்கள் வசித்திருக்க வேண்டும் என்பதிலிருந்து 10 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான புலம்பெயரும் நபர்கள் குடியுரிமை அல்லது ஐ.எல்.ஆர் பெற ஒரு தசாப்தகாலம் அங்கு வசிக்க வேண்டும்.
ஆனாலும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடிய சுகாதார வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்கின்றனர்.
இங்கிலாந்து அரசின் இந்த நடவடிக்கையால் இப்போது அந்த நாட்டில் வசித்து படித்துவரும் அல்லது பணியாற்றிவரும் இந்தியர்கள் நிலைமை மோசமாகலாம் எனக் கூறப்படுகிறது.
2023-ம் ஆண்டு இங்கிலாந்தில் குடியேறியவர்களில் பெரும்பாலானோர் இந்தியர் எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2,50,000 பேர் குடியேறியிருக்கின்றனர்.
இப்போது அமல்படுத்தப்பட்டுள்ள கொள்கைகளால் இந்த எண்ணிக்கை 1 லட்சமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கூடுதல் விதிமுறைகளை அறிமுகப்படுத்தி, மேலும் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

விசா வழங்குவதில் மாற்றங்கள்
குடியுரிமை வழங்குவதில் மட்டுமல்லாமல் விசா பெறுவதற்கும் கடுமையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கியமான திறன்-சார் தொழிலாளர் விசாவுக்கான குறைந்த பட்ச தகுதியை பட்டப்படிப்புக்கு உயர்த்தியுள்ளனர். பட்டப்படிப்பு முடித்து முது நிலைக் கல்விக்காக வருபவர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான (Graduate Route visa) கால வரம்பு 2 ஆண்டுகள் என்பதிலிருந்து 18 மாதங்களாக குறைக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பவர்களில் பெருமாபாலோனார் இங்கிலாந்தைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர் என்னும் நிலையில், இந்திய மாணவர்களை இது பெருமளவில் பாதிக்கவுள்ளது.
குறிப்பாக இங்கிலாந்தில் பணி அனுபவத்தைப் பெறுவதற்கு இந்திய மாணவர்கள் Graduate Route visa-வையே பெருமளவில் நம்பியிருக்கின்றனர்.
இந்த மாற்றங்களால் இந்தியாவிலிருந்து செல்லும் சுகாதார பணியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். நீண்டகாலமாக இங்கிலாந்தின் சுகாதார பணியாளர் தேவையை தெற்காசிய நாடுகள் நிறைவேற்றி வரும் சூழலில், 2028-க்குள் வெளிநாடுகளிலிருந்து சுகாதாரப் பணியாளர்கள் சேர்க்கையை நிறுத்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து திறன்-சார் தொழிலாளர்களை வரவழைக்க நிறுவனங்கள் செலுத்த வேண்டிய குடியேற்ற திறன் கட்டணத்தை (immigration skills charge) உயர்த்தவுள்ளனர்.
அத்துடன் விசாதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்து வருபவர்கள் ஆங்கில புலமையை நிரூபிப்பதற்கான சோதனைகளை கடுமையாக்கவுள்ளனர். இதனால் விசாதாரரை சார்ந்து வருபவர்களுக்கு விசா வழங்குவது குறைக்கப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இத்துடன் புகலிடம் தேடி வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். சமீப ஆண்டுகளில் இங்கிலாந்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகப்படியாக உயர்ந்துள்ளது. இதனால் சட்டப்பூர்வமான குடியேறிகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களை தனித்தனியாக கண்டறிவது அரசுக்கு சவாலாக மாறியுள்ளது.
ஐக்கிய ராச்சியத்தின் புதிய கொள்கைகள் இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை நீண்ட நாள்களுக்கு கடுமையாக பாதிக்கக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.